இரண்டு வயதில் அரிய சாதனை!

மாநிலம் முதல் மத்திய பணித் தேர்வுகள் வரை அசாத்திய துணிச்சலுடன் அணுகி வெற்றி பெற்றுவரும் இளைஞர்கள் என வியக்க வைக்கிறது வாலாந்தரவை கிராமம்.
இரண்டு வயதில் அரிய சாதனை!
Published on
Updated on
2 min read

மாநிலம் முதல் மத்திய பணித் தேர்வுகள் வரை அசாத்திய துணிச்சலுடன் அணுகி வெற்றி பெற்றுவரும் இளைஞர்கள் என வியக்க வைக்கிறது வாலாந்தரவை கிராமம்.  

இந்த ஊரில் இரண்டே வயதான சிறுவன் தனது நினைவாற்றல் திறனால் ஆசிய அளவில் பாராட்டும், பரிசும் பெற்று வருவது ராமநாதபுரம் மாவட்டத்துக்கே பெருமை சேர்ப்பதாக கூறுகிறார்கள் அக்கிராமத்து மக்கள்.

ஆம்....அம்மா...ஆடு...இலை என எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கும் பருவத்தில் எந்த கொடியைக் காட்டினாலும், அக்கொடிக்குரிய நாட்டின் பெயரை சரியாக உச்சரித்து அசத்துகிறான் இரண்டு வயது 3 மாதங்களே ஆன நிவின்அத்விக்.தேசிய அளவிலான நினைவாற்றல் திறனுக்கான பரிசும், பாராட்டும் பெற்ற சிறுவனை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அழைத்துப் பாராட்டி வாழ்த்திய நிலையில், தற்போது ஆசிய அளவிலான பாராட்டையும், பரிசையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா முதிலேஸ்வரன். மருத்துவர். ராமநாதபுரம் மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர். அம்மா அபர்ணா. குடும்பத்தலைவி. ராமநாதபுரம் பட்டிணம்காத்தானில் சிறுவனின் தனித்திறன் குறித்து தாய் எம்.அபர்ணா விடம் கேட்டபோது அவர் கூறியது- ஒரு வயதிலிருந்தே நிவின்அத்விக் அபார நினைவாற்றலுடன் இருந்ததை தாயாகிய நான் கவனித்தேன். எங்கிருந்து யார் வந்தாலும், அவர்களை மறுமுறை பார்த்தால் சரியாக அடையாளம் கண்டு சிரிப்பான். இரண்டு வயதான போது நாங்கள் அறிமுகப்படுத்தும் உறவினர்களை, பல நாள் கழித்து பார்த்தாலும் உறவைக் கூறி அழைப்பான். அப்படி நினைவாற்றலுடன் இருப்பது எனக்கும், எனது கணவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இரண்டு வயதில் நன்றாகப் பேசத்தொடங்கிய எனது மகன் எதற்கெடுத்தாலும், ஏன்...எப்படி என கேட்டுக்கொண்டே இருப்பான். எரிச்சலாக இருந்தாலும்...அவனது ஆர்வத்தைக் கண்டு சளைக்காமல் நானும் விளக்குவேன். அவனுக்கு அம்மாவாக இருப்பதோடு, அவனது கேள்விக்கு பதில் கூறும் ஆசிரியையாக இருக்கும் நிலையே உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்திய தேசியக் கொடி குறித்து விளக்கினேன். அதன்பின்பு வெளிநாட்டுக் கொடிகள் குறித்து கேட்கத் தொடங்கினான். உடனே உலக நாடுகளின் தேசியக்கொடி அடங்கிய புத்தகம் வாங்கிக்கொடுத்து கற்பித்தேன்.

உலக நாடுகளையும், அவற்றின் தேசியக் கொடியையும் சில வாரங்களிலேயே ஆத்விக் கற்றுக்கொண்டது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. எந்த நிலையில் எந்த நாட்டைக் குறிப்பிட்டாலும், உடனே அந்நாட்டின் தேசியக் கொடியை அடையாளப்படுத்திவிடுவான். அதேபோல, தேசியக் கொடியை காட்டினால், அதற்குரிய நாட்டின் பெயரையும் கூறுவான்.

வாகனங்கள், பறவைகள் என எந்தப் பெயரைக் கேட்டாலும் உடனுக்குடன் சரியாகப் பதில் கூறும் திறனை எனது மகன் பெற்றிருப்பது பெருமையாகவே உள்ளது.  சிறுவர்களின் திறமையை பாராட்டும் அமைப்பான இந்திய சாதனைப்புத்தக அமைப்புக்கு அவனது திறமையை விடியோவாக எடுத்து அனுப்பிவைத்தோம்.

ஒரு வயதான போது நவீன் ஆத்விக் 100 நாடுகளையும், அதன் கொடிகளையும் நினைவுபடுத்தி குறிப்பிட்ட நேரத்தில் கடகடவென கூறிதையே விடியோவாக அனுப்பினோம். அதை சாதனை புத்தக அமைப்பினர் பல நாள் ஆய்வு செய்து, பிறகு எனது மகனின் திறனை அங்கீகரித்து அப்புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளனர். மேலும், சாதனைப் புத்தகம், வேலைப்பாடு மிக்க பேனா என பரிசுகளையும், பாராட்டுச் சான்றையும், பதக்கத்தையும் அனுப்பிவைத்தனர். ஆசிய அளவில்  சிறுவர்களுக்கான  திறனறி சோதனை  அமைப்பு  வியட்நாமில் உள்ளது. அங்கும்  விண்ணப்பித்திருக்கிறோம்.

பள்ளியில் அவனுக்கு ஆசிரியர்கள் நல்லமுறையில் கற்பித்தாலும்...வீட்டில் நான் எப்போதும் அம்மா...ஆசிரியையாகவே இருப்பேன் என்கிறார் பெருமிதத்தோடு. அவரது இந்த வாக்கியத்தைக் கேட்டதும்....ஆம்...எந்தக் குழந்தையும் நல்ல..குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...என்ற திரைப்பட பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது.

படங்கள்:  ஜெ.முருகேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com