கலாம் கருத்துக்களை பரப்பும் அரசு நூலகர்!

கலாம் மறைவிற்குப் பிறகு அவரது கனவுகளை, லட்சியங்களை மாணவ மாணவியர் உள்ளங்களில் பலர் விதைத்து வருகிறார்கள்.
கலாம் கருத்துக்களை பரப்பும் அரசு நூலகர்!
Published on
Updated on
1 min read

கலாம் மறைவிற்குப் பிறகு அவரது கனவுகளை, லட்சியங்களை மாணவ மாணவியர் உள்ளங்களில் பலர் விதைத்து வருகிறார்கள். அவர்கள் வழியில் சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணன் 19 ஆண்டுகளாக கலாமின் சொற்பொழிவுகளில், எழுதிய நூல்களில் கிடைத்த கருத்துகளைச் சேகரித்து அச்சிட்டு சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், ராமநாதபுரம் மாவட்ட மாணவ மாணவிகளைச் சந்தித்து விநியோகித்து வருகிறார்.

கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதி அன்று அனைத்து மத பிரார்த்தனைகளை நடத்தி சிறார்களுக்கு இனிப்பு வழங்குவதுடன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். சேலத்தில் அரசு நூலகராகப் பணியாற்றும் மணிவண்ணனிடம் கலாமுடன் தொடர்பு எப்படிக் கிடைத்தது என்று கேட்டதற்குச் சொன்னார்:

""கலாம் பிறந்த நாளில் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவேன். அவரும் நன்றிக்குக் கடிதம் போடுவார். அவர் குடியரசுத் தலைவர் ஆனதும் அவரது தொண்டனாக மாறிவிட்டேன். அவர் எழுதிய "அக்னி சிறகுகள்', "பார்வை 2020 நூல்கள் வெளியான போது கலாமின் கருத்துக்களை, ஊக்க மொழிகளை சிறார்களுக்கு மத்தியில் பரப்பும் தூதுவனாகிவிட்டேன். அவரின் சொற்பொழிவுகள் ஊடகங்களில் வரும் போது முக்கியச் சிந்தனைகளை குறித்து வைத்து அவரது பொன்மொழிப் பட்டியலில் சேர்த்து விடுவேன். அப்துல்கலாம் தமிழகம் வந்த போது அவர் அனுமதியுடன் ஆறு முறை அவரைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். ஒருமுறை எனது குடும்பத்துடன் சென்று சந்திக்கவும் வாய்ப்பினை வழங்கினார்.

2013-இல் "அன்புப் பாலம்' தொண்டு நிறுவனத்தின் வைர விழா சென்னையில் நடைபெற்றது. எனது பணிகளுக்காக "சேவைத் திலகம் பதக்கம்' வழங்க என்னைத் தெரிவு செய்திருந்தார்கள். அந்தப் பதக்கத்தை வழங்கியது கலாம் ஐயா தான்.

இன்னும் பல மாவட்டங்களில் மாணவ மாணவியர்களைச் சந்திக்க வேண்டும். பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களை சந்தித்து கலாமின் ஊக்க மொழி கையேட்டை விநியோகிக்க வேண்டும். அவர் பொன்மொழிகளை மாணவர்கள் இளைஞர்கள் கடைப்பிடித்தால் முன்னேற்றம் நிச்சயம் ஏற்பாடும். ஐயாவின் திருஉருவப் படம் இல்லாத பள்ளிகளில் கலாம் படங்களையும் வழங்கி வருகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை அவரது சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறேன். நூலகத்தில் நூல்களை எப்படிப் பேணுவது குறித்த குறிப்புகளையும் என்னிடம் அப்துல்கலாம் பகிர்ந்துள்ளார். அதை எனது நூலகத்தில் கடைப்பிடிக்கிறேன்'' என்கிறார் மணிவண்ணன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com