
முழு பொது முடக்கக் காலத்தில் எதுவும் இம்மி கூட அசையவில்லை.
ஆனால், ஒரு படப்பிடிப்பு சப்தமில்லாமல் நடந்திருக்கிறது.
அதுவும் 117 பேர்கள், 15 குழுக்களாகப் பிரிந்து படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
படக் குழுவின் தலைவர் "வந்தே மாதரம்" பாடல் புகழ் இயக்குநர் பரத்பாலா. இவரது மேற்பார்வையில், படக் குழுவினர் அஸாம், கேரளம், தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், கர்நாடகம், உ பி , உத்தரகாண்ட் , தில்லி, குஜராத், காஷ்மீர், லடாக் பகுதிகளில் மார்ச் 25 முதல் மே 31 வரை பயணித்தது.
எதற்குத் தெரியுமா?
முழு பொதுமுடக்கத்தின் போது ஆடும், ஓடும், பறக்கும், இயங்கும் அத்தனையும் சிலையாக நின்று அகில இந்தியா மெளனமாக சுவாசித்த நிசப்தத்தை பதிவு செய்வதற்காக.
"நாம் மீண்டும் எழுவோம்' என்ற தலைப்பில் நான்கு நிமிடங்கள் ஓடும் காணொளியாக அந்தப் பதிவு வெளியாகியுள்ளது. மனதை அழுத்தும் காட்சிகளுடன், நெகிழ, உறைய வைக்கும் சில துண்டு வசனங்களும் இந்தக் காணொளியில் உண்டு.
காணொளி "இந்தியாவை, ஒவ்வொரு இந்தியக் குடிமகனைக் காக்க முழு பொதுமுடக்கத்தை அறிவிக்கும்' பிரதமர் மோடியின் குரலுடன் காணொளி துவங்குகிறது. காற்றில் பறக்கும் மூவண்ண தேசியக் கொடியுடன் காணொளி நிறைவு பெறுகிறது.
என்ன நடந்ததுன்னே தெரியல ...
ஒரே நிமிஷத்துல எல்லாமே மாறிட்டமாதிரி தோணுது...
ஆனா நாளை பொழுது விடியும்...
நாம் மீண்டும் எழுவோம்...
இவைதான் காணொளியில் கேட்கும் வசனங்கள்.
அவை, இப்போதைய கரோனா காலத்தின் துயரங்களையும், துக்கங்களையும், பயத்தினையும் தெரிவிப்பதுடன், "மீண்டும் எழுவோம்' என்ற நம்பிக்கையையும் விதைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.