
தினந்தோறும் தினமணி படிப்பது காலையில் காபி குடிப்பது போன்று இன்பமும், புத்துணர்ச்சியும் தருவதாகும். சிறுவயதில் எனது தந்தை எனக்கு அறிமுகம் செய்த தினமணியை 67 வயதிலும் இன்றும் தொடர்ந்து படித்து வருகிறேன். பண்பட்டும் வருகிறேன்.
நான்கு நாளிதழ்கள் என் இல்லத்திற்கு வந்தாலும் முதலில் படிக்க விரும்புவது தினமணியே ஆகும். என் எழுத்தை முதலில் அச்சில் பதிவு செய்தது தினமணி தான். நான் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நறுக்குத் தெறித்தார் போல் நாலுவரிகளில் தினமணியில் எழுதிய எழுத்துகள் தான் முகம் தெரியாதவர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்தது என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழக டீனாக இருந்து மறைந்த நண்பர் முனைவர் அறிவு நம்பியின் அழைப்பின் பேரில் பி.எச்டி மாணவர்களுக்கு வாய்மொழித்தேர்வு நடத்த பாண்டிச்சேரி சென்றிருந்தேன். என்னைப் பேருந்து நிலையத்தில் வரவேற்க வந்த அவர், அவரின் துணைவியாரிடம் தினமணியில் எழுதுவாரே ஸ்ரீகுமார் அவர்தான் இவர் என அறிமுகம் செய்த பொழுது முகம் தெரியாதவர்களிடமும் என்னை அறிமுகம் செய்திருந்த தினமணிக்கு நன்றி சொன்னேன்.
நடுப்பக்க கட்டுரைகளும் நடுநிலை தவறாத தலையங்கங்களும் என்னை நல்லதொரு விமர்சகனாக மாற்றியது. அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் அவற்றைப் பதிவு செய்யவும் தினமணி வாய்ப்பளித்தது.
தமிழ்மணியிலும், வெள்ளிமணியிலும் கட்டுரை எழுதவும் தூண்டியது. தினமணி வெள்ளிமணியில் வெளியான கட்டுரைகள் "வைணமும், வைணவத் திருத்தலங்களும்' என நூலாக்கம் பெற்று பலரின் பாராட்டு மழையில் நனையச் செய்ததும் தினமணியே.
வாரந்தோறும் கலாரசிகன் தரும் புதிய செய்திகளும், நூல்கள் பற்றி தரவுகளும், சிறுவர்மணி, தினமணி கதிர் தரும் நகைச்சுவைகளும், தலைவர் அறிவியலாளர் பற்றிய தரவுகளும், மாநில சுற்றுலா செய்திகளும் இலக்கிய மற்றும் பள்ளி, கல்லூரி நிகழ்வுகளில் உரையாற்ற உதவியதோடு சொல்லின் சொல்வனாக அனைவரும் பாராட்டவும் வழிகோலியது.
டி.எஸ்.சொக்கலிங்கம் கட்டுரைகளைப் பிரசுரிப்பதன் மூலம் அரசியல் தலைவர்களின் வாழ்வியல் நிகழ்வுகளையும், இதழியல் உலகின் சாதனையாளர்களையும் புகைப்படத்துடன் அறியச் செய்ததும் தினமணியே!
எழுத்தாளராக, பேராசிரியராக, நூலாசிரியராக, ஆன்மிகவாதியாக, பேச்சாளராக, சிந்தனையாளராக மொத்ததில் மனிதனாக என்னை வளர்த்தெடுத்த தினமணிக்கு நன்றி.
கட்டுரையாளர்: பேராசிரியர் (பணிநிறைவு), கல்பாக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.