செஸ் விளையாட்டில் அம்மாதான் வழிகாட்டி! - "கிராண்ட் மாஸ்டர்'  விஸ்வநாதன் ஆனந்த்

செஸ்  விளையாட்டு  ரஷ்யர்களின் கோட்டையாக இருந்து வந்தது.  ரஷ்யர்களின் ஆதிக்கத்தை மெல்ல  மெல்ல அகற்றி...  
செஸ் விளையாட்டில் அம்மாதான் வழிகாட்டி! - "கிராண்ட் மாஸ்டர்'  விஸ்வநாதன் ஆனந்த்
Updated on
4 min read

செஸ் விளையாட்டு ரஷ்யர்களின் கோட்டையாக இருந்து வந்தது. ரஷ்யர்களின் ஆதிக்கத்தை மெல்ல மெல்ல அகற்றி... சவால்களை சாதனைகளாக மாற்றி, செஸ் சாம்ராஜ்ஜியத்தில் இந்தியாவுக்கு ஒரு தனி இடம் பெற்றுத் தந்தவர், "மெட்ராஸ் புலி' என அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த்.இந்தியாவின் முதல் செஸ் "கிராண்ட் மாஸ்டர்' விஸ்வநாதன் ஆனந்த் ஐம்பது வயதைத் தாண்டி இரண்டு மாதம் ஆகிறது.

"விஷி' என்று செஸ் வட்டத்தில் செல்லமாக அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த், 16 வயதிலேயே, செஸ் ஆட்டத்தில் அதிரடி ஆட்டம் ஆடியதினால் "மின்னல் சிறுவன்'”என்றும் அழைக்கப்பட்டவர்.

2003-இல் உலக சாம்பியன் போட்டியில் வெற்றிப்பெற்று, “உலகின் அதிவேக செஸ் ஆட்ட வீரர்” என்ற சிறப்பு பட்டத்தையும் தன்னோடு சேர்த்துக் கொண்டவர்.

14 வயதில், "இந்திய செஸ் சாம்பியன் பட்டம்', 15 வயதில் "அனைத்துலக மாஸ்டர்' பட்டம், 18 வயதில் "உலக செஸ் ஜூனியர் சாம்பியன் பட்டம்', பிறகு ஐந்து முறை "உலக சாம்பியன் பட்டம்' என ஆனந்தின் வெற்றி பட்டியல் நீளுகிறது.

ஆனந்த் இந்திய செஸ் விளையாட்டில் ஒரு மைல் கல். செஸ் விளையாட்டில் பல சிறுவர்கள், இளைஞர்கள் பங்குபெற ஆனந்த் முக்கிய காரணம் ஆவார். எப்படி பி வி சிந்து வந்ததும் இறகுப் பந்தாட்டம் இந்தியாவில் பிரபலமானதோ அது போல முப்பது ஆண்டுகளுக்கு முன்பே செஸ் ஆட்டத்தை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியவர் ஆனந்த்.

இந்தியாவில் இதுவரை 64 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளார்கள். அதில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 23 அதனால், "பத்மஸ்ரீ', "பத்ம பூஷண்', "பத்ம விபூஷண்', "ராஜீவ்காந்தி கேல் ரத்னா' "அர்ஜுனா விருது'கள் ஆனந்தை வந்தடைந்தன. 1997, 1998, 2003, 2004, 2007 , 2008 ஆண்டுகளுக்கான "செஸ் ஆஸ்கார் விருதுகளுக்கும் ஆனந்த் சொந்தக்காரர்.

மயிலாடுதுறையில் 11 டிசம்பர் 1969 -இல் ஆனந்த் பிறந்தார். அப்பா விஸ்வநாதன். அம்மா சுசீலா. அப்பா தென்னக ரயில்வேயில் பொது மேலாளராகப் பணிபுரிந்தவர். ஆனந்த் பள்ளிப்படிப்பை எழும்பூர் "டான் போஸ்கோ' பள்ளியில் படித்து, பிறகு "லயோலா கல்லூரியில்' பி.காம் பட்டம் பெற்றவர். ஆனந்திற்கு சிவகுமார், அனுராதா என்ற உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்.

""அம்மா செஸ் நன்றாக விளையாடுவார். சென்னையில் செஸ் கிளப் ஒன்றில் உறுப்பினராகவும் இருந்தார். ஆறு வயதில் அம்மாவுடன் செஸ் விளையாட ஆரம்பித்தேன். அம்மாதான் செஸ் விளையாட்டில் எனக்கு வழிகாட்டி... குரு. பிறகு "டால்' என்ற செஸ் கிளப்பில் சேர்ந்து, செஸ்ûஸ ஆழமாகக் கற்றுக் கொண்டேன். நடுவில் அப்பா மணிலாவுக்கு பணி நிமித்தமாக சென்ற போது செஸ் குறித்த சஞ்சிகைகளை வாசித்து அதன் நுணுக்கங்களைக் கற்றேன் . எனது முதல் திருப்பம் பதினான்காம் வயதில் வந்தது. தேசிய அளவில் நடந்த செஸ் போட்டியில் சாம்பியனாக முடிந்தது. பதினைந்தாம் வயதில் சர்வதேச அளவில் "மாஸ்டர்' விருதுதினை அடைய முடிந்தது.

கல்லூரியில் படிக்கும் பொழுதே, சர்வதேச செஸ் அரங்கில் செஸ் தர வரிசைப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தேன். அடுத்த பிரேக் 1987-இல் வந்தது. இந்த ஆண்டு நடந்த போட்டியில் "உலக ஜூனியர் சாம்பியன்' பட்டத்தை வென்றேன். இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியன் என்ற பெருமையும் எனக்கு கிடைத்தது. 1988-இல் கோவையில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் "கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தையும் வென்றேன். இந்தியாவின் முதல் "கிராண்ட் மாஸ்டர்' என்ற பெருமையும் எனக்கு கிடைத்தது. பிறகு சில வெற்றிகள்.. பல தோல்விகள் என்று எனது செஸ் பயணம் தொடர்ந்தது. 2000-ஆவது ஆண்டில் உலக செஸ் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸீ ஷீரோவை தோற்கடித்ததினால் "உலக சாம்பியன்' பட்டத்தைப் பெற்றேன்'' என்கிறார் ஆனந்த்.

2007 -இல் மெக்சிகோவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் கலந்து கொண்டு "இரண்டாவது முறையாக "உலக சாம்பியன்' பட்டத்தை வென்றேன். மூன்றாவது முறையாக உலக சாம்பியன் ஆனது 2008-இல். ஜெர்மனியில் நடந்த உலக செஸ் போட்டியில், ரஷியாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வெற்றி கண்டதினால் மூன்றாவது முறையாக சாம்பியன் ஆக முடிந்தது. 2010 -ஆவது ஆண்டில் நான்காவது முறையாகவும், 2012 -இல் ஐந்தாவது முறையாகவும் உலக சாம்பியன் ஆக முடிந்தது.”

செஸ் போட்டிகளில் டோர்னமென்ட், மேட்ச், ரேபிட், நாக் அவுட் ஆகிய முறைகளில் போட்டிகளில் நடக்கும். இந்த நான்கு முறைகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் "உலக சாம்பியன்' பட்டம் வென்ற ஒரே வீரர் ஆனந்த் மட்டுமே..!
செஸ் இளைஞர்களின் "மூளை' விளையாட்டாக மாறிவிட்டது. நாற்பது வயது ஆகிவிட்டாலே, செஸ் ஜாம்பவான்கள் சர்வதேச தர வரிசையில் முதல் இருபத்தைந்து இடத்தில் வருவதற்கு படாதபாடுபடுகிறார்கள். நூறு செஸ் கிராண்ட் மாஸ்டர்களின் சராசரி வயது 31 தான். அதாவது, இளம் வயதில்தான் செஸ் போட்டிகளில் சாதிக்க முடியும். சாம்பியன் ஆக முடியும். ஐம்பது வயது நிறைவு செய்திருக்கும் நிலையில் ஆனந்த் மட்டுமே உலக தர வரிசையில் 15 -ஆவது இடத்தில் இருப்பவர். முதல் இருபத்தைந்து கிராண்ட் மாஸ்டர்களில் வயதில் மூத்தவரும் ஆனந்த்தான். ஆனந்த்தைவிட மூத்த கிராண்ட் மாஸ்டர்கள் உலகத் தர வரிசையில் முதல் 25 இடங்களில் இல்லவேயில்லை.

ஆனந்த்தைவிட ஆறு மாதம் மூத்தவரான வாஸ்ஸிலி இவான்சுக் 45 -ஆவது இடத்திலும், ஒரு ஆண்டு மூத்தவரான போரிஸ் கெல்ஃபான்ட் 52 -ஆவது இடத்திலும் இருக்கின்றனர். எவ்ஜெனி பரீவ், கட்டா காம்ஸ்கை போன்றவர்கள் முதல் நூறு இடத்தில் கூட இல்லை. ஆனால் ஆனந்த் தனது ஐம்பதாவது வயதில் 15 -ஆவது இடத்தில் இருக்கிறார் ... இப்போதும் செஸ் போட்டிகளில் பங்கெடுக்கிறார் என்பதே ஒரு சாதனைதான்..! ஆனந்த்தைவிட வயதில் பல ஆண்டுகள் சிறியவர்களான பல கிராண்ட் மாஸ்டர்கள் முதல் 25 இடத்தில் வர முடியவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆனந்த்திற்கு ஸ்பானிஷ் ஜெர்மன் மொழிகள் தெரியும். "போட்டிகளில் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த போது மனம் சோர்வாக இருக்கும், அந்தத் தருணங்களில் ஜெர்மன் படங்கள் எனக்கு ஒரு திசை திருப்புதலாக அமைந்திருந்தது.." என்கிறார்.

கார்ரி காஸ்ப்பரோவ், ஆனந்திற்கும் இடையே 1995-இல் நடந்த போட்டி எங்கே நடந்தது தெரியுமா? நியூ யார்க் நகரின் உலக வர்த்தக மையக் கட்டடத்தின் 107 -ஆவது தளத்தில். "சபாஷ் சரியான போட்டி' என்று சொல்லப்பட்ட போட்டியில் கார்ரி வெற்றி பெற்றார்.

ஆனந்தின் ஐம்பதாவது வயது நிறைவையொட்டி தனது நினைவுகள், அனுபவங்களின் தொகுப்பாக "மைண்ட் மாஸ்டர்' நூலினை ஆனந்த் வெளியிட்டுள்ளார். அதில் தனது திருமணம் குறித்து ஆனந்த் என்ன சொல்கிறார் தெரியுமா?

""பெற்றோர் பார்த்து செய்து வைத்த திருமணம். ஒருவரை ஒருவர் "ஏதோ தெரியும்' என்று சொல்லலாம். இருவருக்கும் இடையில் மிகச் சிறிய அறிமுகம். அவ்வளவுதான். "வேண்டாம்..' என்று சொல்ல காரணம் ஏதும் இல்லாததால் நானும் அருணாவும் "ஓகே' என்று சொல்லி வைத்தோம்.

திருமண நிச்சயம் முடிந்ததும் நான் வெளிநாடுகளில் பயணத்தில் இருந்தாலும் தொலைபேசி மூலம் பேசிக் கொள்வோம். அருணாவைச் சுற்றிலும் அருணாவின் குடும்பத்தினர் இருப்பார்கள். அருணா பேசும் போது "நான் தங்கியிருக்கும் இடத்தில் கிடைக்கும் உணவு.. காலநிலை குறித்து கேட்பார். எனக்கும் சரி.. அருணாவுக்கும் சரி.. வேறு எதையும் பேசத் தோன்றாது. "எப்படி இருக்கீங்க' என்ற அருணாவுக்கு "நல்லா இருக்கிறேன்' என்பேன். "அங்கே அதிகம் குளிரா' என்ற கேள்விக்கு "ஆமா.. குளிருதான்... அங்கே எப்படி' என்று கேட்பேன். "அம்மாடி இங்கே ஒரே சூடு..' என்று அருணா சொல்வார். "சரி.. பை' என்பார். நானும் "பை' சொல்லி வைத்துவிடுவேன்.."

முன்பெல்லாம் வெளிநாடு போகும் போது அணிந்த துணிமணிகளை சூட்கேசில் திணித்து எடுத்து போவேன்.

திருமணத்திற்குப் பிறகு சூட்கேசில் நான் போகும் நாட்டின் காலநிலைக்கு ஏற்ற துவைத்து தேய்க்கப்பட்ட துணிமணிகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மருந்து மாத்திரைகள் பெயர் எழுதி வைக்கப்பட்டிருக்கும். எல்லாம் அருணாவின் வேலைதான். கொஞ்சம் கொஞ்சமாக எனது பொறுப்புகளையும் அருணா பகிர்ந்து கொண்டார். அதனால் என்னால் செஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த முடிந்தது.''

ஆனந்திற்கு அப்போது வயது 16 . ஜூனியர் பிரிவில் ஆனந்த் போட்டியில் ஜியார்ஜியாவில் கலந்து கொண்டார். அப்போது அனட்டோலி கார்போவ் 23-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டார். இடைவேளையின் போது ஆனந்த் அனட்டோலியிடம் ஆட்டோகிராப் கேட்க "முடியாது.." என்று மறுத்துவிட்டாராம். ஏமாற்றத்துடன் ஆனந்த் திரும்பினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆனந்த் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

அனட்டோலி ஆனந்திடம் வந்து கை குலுக்கிப் பேசி சென்றாராம்..! இந்த அனுபவம் காரணமாகவோ என்னவோ, ஆனந்த் சமீபத்தில் கொல்கத்தாவில் செஸ் ஆர்வலர்கள் ஆனந்திடம் ஆட்டோகிராப் கேட்க... ஆனந்த் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் கூட்டம் அதிகமானதால் விழா ஏற்பாட்டாளர்கள் ஆனந்தை காருக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது எழுபது வயது மதிக்கத்தக்க ஆர்வலர் ஆனந்திடம் ஆட்டோகிராப் கேட்டு ஓடிவர ...பாதுகாப்பாளர்கள் அந்தப் பெரியவரை அப்புறப்படுத்த எத்தனித்தார்களாம். இதைப் பார்த்த ஆனந்த் காரிலிருந்து இறங்கி ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தாராம்.

ஆனந்த்தின் 9 வயது மகனான அகிலையும் செஸ் கவர்ந்துள்ளது..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com