
தற்போதைய தலைமுறைக்கு பாரம்பரியப் பெருமை தெரியாமலே போய்விட்டது.
மறக்கடிக்கப்பட்ட பாரம்பரியத்தில் மிக முக்கியமானது மல்லர் கம்பம் விளையாட்டு. வழுவழுப்பான 16 அடி உயர கம்பத்தின் மீது ஏறி சாகசம் செய்வதே இந்த விளையாட்டின் முக்கியத்துவம். உடலும், மனமும் உறுதியோடும், வலிமையோடும் இருந்தால் மட்டுமே மல்லர் கம்பத்தில் ஏறி சாகசத்தில் ஈடுபடமுடியும்.
தமிழகத்தில் சோழர், பல்லவர் காலத்தில் மல்லர் கம்ப சாகசம் கிராமங்கள் தோறும் நடந்த வீர விளையாட்டு. களரி, மல்யுத்தம், பிடிவரிசை, வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலைகளைப் போன்ற மல்லர் கம்பமும் போர் புரியும் வீரர்களுக்கான ஒரு சாகச பயிற்சியாகவே மன்னர்காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது.
மல்லர் கம்பம் மகாராஷ்டிரம், குஜராத்தில் அரசு அங்கீகார விளையாட்டாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பாரம்பரிய விளையாட்டை ராமநாதபுரத்தில் மறுபடியும் உயிர்ப்பிக்கும் வகையில் "மல்லர் கம்பம் கழகம்' ஆரம்பித்து ஐந்து வயது சிறுவர் முதல் 60 வயது முதியவர்கள் வரை பயிற்சி பெற்று வருகிறார்கள்.
கேணிக்கரை பகுதியில் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளி பின்பகுதியில் குடைபோல விரிந்த ஆலமரத்தின் கீழே வழுவழுப்பான 11 அடி உயர கம்பம். சிறிதும் அச்சமின்றி ஏறும் கால்சட்டை சிறார்கள்...கால்களை மட்டுமே கம்பத்தில் பதித்து நிற்கும் அதிசயம்.. காலடி அகலமில்லா கம்பத்தின் உச்சியில் நின்று கைகூப்பி சிரிக்கும் இளைஞர்....உரலில் குழவி சுற்றுவது போல வழுவழு கம்பத்தை காலால் கவ்வியபடி சுற்றும் அதிசயம் என மலைக்கவைக்கிறார்கள் மல்லர் கம்பத்தில் பயிற்சி பெறுவோர்.
மல்லர் கம்பம் கழகத்தை ஆரம்பித்து சிறார், இளைஞர் என அனைவருக்கும் இலவசமாக பயிற்சி அளிக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலரும், மல்லர் கம்பம் கழகத்தின் செயலருமான மு.லோகசுப்பிரமணியனிடம் பேசினோம்:
""ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2003- ஆம் ஆண்டிலிருந்து ஜவஹர் சிறுவர் மன்றம் செயல்படுகிறது. அதன்மூலம் பாட்டு, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகியவை கற்பிக்கப்பட்டு வருகின்றன.
ஜவஹர் மன்றம் வாயிலாக ஆண்டுதோறும் 250 சிறார்களுக்கும் மேற்பட்டோர் நான்கு கலைகளில் சிறப்பான பயிற்சி பெற்று வருகிறார்கள். தற்போது புதிதாக பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மல்லர் கம்பம் கழகம் தமிழக அளவில் இரண்டாவது இடமாக ராமநாதபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
யோகாவையும், விளையாட்டையும் இணைத்த கலையாகவே மல்லர் கம்பம் உள்ளது. தமிழகத்தில் கபடி போல தொடங்கிய இந்த மல்லர் கம்பம் பயிற்சியானது மெல்ல மெல்ல இங்கு அழிந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரம் போன்ற வட இந்திய மாநிலங்களில் தற்போது சிறப்பாகவே இந்த விளையாட்டு நடந்துவருகிறது.
தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மல்லர் கம்பம் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக 60 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயது சிறுவர் முதலே பயிற்சி பெறுகின்றனர். மல்லர் கம்பத்தில் தேவிபட்டினத்தைச் சேர்ந்த சபரி என்ற இளைஞர் விழுப்புரம் சென்று சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
தற்போது அவர் மூலமே ராமநாதபுரத்தில் மல்லர் கம்ப பயிற்சி வழங்கப்படுகிறது.ராமநாதபுரத்தில் மல்லர் கம்பத்தில் தற்போது பஜ்ரங் ஆசனம், காலால் கம்பத்தில் நிற்கும் ஆசனம், வயிற்றுப் பகுதியை மையமாக்கிய ஆசனம், மயூரா ஆசனம், சுற்றும் ஆசனம், கைகளை ஆங்கில எழுத்தான "டி' போல நீட்டி கம்பத்தில் நிற்கும் ஆசனம் என பல்வகை ஆசனங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மல்லர் கம்பத்தில் ஆசனம் செய்து பயிற்சி பெறும் சிறார்களுக்கு உடல் திறன் மேம்படுவதுடன், சிந்தனை சக்தியும் கூடுதலாகிறது என்பதே உண்மை. சுவர் இருந்தாலே சித்திரம் எனும் வாக்கிற்கேற்பவே மல்லர் கம்பத்தின் பயிற்சிகள் அமைந்துள்ளன.
ராமநாதபுரம் சேதுபதிகள் ஆண்ட பூமியாகும். ஆகவே சிலம்பம், மற்போர் போல மல்லர் கம்பத்தில் பயிற்சி பெறவும் நூற்றுக்கணக்கான குழந்தைகள், இளைஞர்கள் ஆர்வமுடன் வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஓரிரு ஆண்டுகளில் ராமநாதபுரத்தில் கபடி போலவே மல்லர் கம்பமும் கிராமந்தோறும் அமைக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.