குதிரைக் கழிவுகளுக்கு மவுசு!

மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான தொடர்புகள் அற்றுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், குதிரையைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றைப் பார்க்கலாமா? 
குதிரைக் கழிவுகளுக்கு மவுசு!
Updated on
2 min read


மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான தொடர்புகள் அற்றுப் போய்க் கொண்டிருக்கும் வேளையில், குதிரையைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்றைப் பார்க்கலாமா? தகவல் தருபவர் கரூர் மின் இதழ் தொடர்பாளர் செந்தில்.

""இன்றைக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பெருகி விட்டதைப் போலவே, அன்றைக்கு குதிரை வண்டிகள் போக்குவரத்துக்காக மக்கள் பயன்பாட்டில் இருந்தன. சக்கரத்தில் தார்குச்சியை வைத்து "பட படா' என்று சத்தம் கிளப்பி சாலைகளில் குதிரை வண்டிகள் போட்டி போட்டுக் கொண்டு கிட்டத்தட்ட பந்தயம் மாதிரி குதிரைகளைத் தாவித்தாவி ஓட வைப்பார்கள். இன்றைக்கு ஐம்பது அறுபது வயதுகளில் இருப்பவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இன்று நல்ல இனக் குதிரைகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அசல் பந்தயக் குதிரைகள், காவல்துறையிடம் இருக்கும் குதிரைகள், திருமண விசேஷங்களில் சாரட் இழுக்கும் குதிரைகளைத் தவிர தமிழகத்தில் குதிரை என்ற பெயரில் இருப்பது கோவேறுகழுதைகள்தான் இன்றைக்கு அத்தகைய கோவேறு கழுதைகளைக் கூட பார்ப்பது அரிதாகிவிட்டது. காரணம் மூட்டைப் பூச்சிகள் போல பெருகிவிட்ட ஆட்டோக்கள்தான் காரணம்.

கரூர் நகரத்தில் இன்றைக்கு ஒரே ஒரு குதிரை வண்டி மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதே கரூர் நகரத்தில்தான் குதிரையின் எருவை அறிவிப்புப் பலகை வைத்து விற்கும் கடை ஒன்றும் உள்ளது. கரூர் ஐந்து ரோட்டில் உள்ள அந்த குதிரை சாணம் விற்பனைக் கடையில் விற்பனை ஜோராக நடக்கிறது.

குதிரைக் கழிவை உலர்த்தி எதற்காக விற்கிறீர்கள் என்று கேட்டதற்கு கடைக்காரர் தந்த பதில் தூக்கிவாரிப் போட்டது. மனிதக் கழிவை எந்த ரசாயனமும் இல்லாமல் குதிரைக் கழிவுகள் மக்கிப் போகச் செய்கின்றன. மனிதக் கழிவுகள் போய்ச் சேரும் செப்டிக் டேங்க்கில் உலர்ந்த குதிரைக் கழிவுகளைக் கொட்டிவிட்டால் பல ஆண்டுகளுக்கு.. ஏன்... ஒரு முறை கூட செப்டிக் டேங்க்கைச் சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதாம். குதிரைச் சாணம் நீரில் மக்குவதால் நல்ல பாக்டீரியாக்கள் தோன்றி அது மனிதக் கழிவுகளை மக்கச் செய்துவிடுமாம். அதனால் துர்நாற்றம் செப்டிக் டேங்கிலிருந்து கிளம்பாது. வீட்டிலும் துர்நாற்றம் பரவாது. வீட்டில் கழிப்பறைகளை பிரஷ் வைத்து வெறுமனே சுத்தம் செய்தால் போதும். ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லையாம்.

தமிழகத்தில் தற்போது பழனியில் தான் குதிரை வண்டிகள் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. அதனால் கோவேறுகழுதைகளும் அதிகம். அங்கே கோவேறுகழுதைகளின் சாணம் உலர்த்தப்பட்டு விற்பனைக்கு கரூருக்கு வருகிறது. 20 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை இருநூறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மனிதக் கழிவறை பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

"குதிரை சக்தி' என்பது சக்தியை அளக்க உதவும் ஒரு குறியீடு. ஆனால், ஒன்றுக்கும் உதவாது என்று கருதப்பட்ட குதிரையின் சாணத்திலும் ஒரு சக்தி மறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. அந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரி தோஷத்திற்கு வேப்பிலை, உலர்ந்த குதிரை சாணம், பூண்டு இந்த மூன்றையும் சாம்பிராணி புகையில் போட்டுக் குழந்தைகளுக்குக் காட்டுவார்கள்.

நமது மாட்டு எருமைப் பண்ணைகளில் சாணத்திலிருந்து பயோ கேஸ் தயாரிக்கிறார்கள். மைசூரில் உள்ள குதிரைப் பந்தய லாயத்தில் குதிரைகளின் எருவை வைத்து எரிவாயுக் கலன்கள் அமைக்க வேலை நடந்து வருகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சொந்தமான ஏராளமான யானைகளின் சாணம் மூலமாக கேஸ் தயாரிக்கிறார்கள். மனிதக் கழிவையே உரமாகப் பயன்படுத்துவதைப் பிரபலப்படுத்தும் காலகட்டத்தில், குதிரைச் சாணத்தைப் பயன்படுத்துவது முகத்தைச் சுளிக்க வைக்காது என்று நம்புவோம்..'' என்று சொல்கிறார் செந்தில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com