கழிவுப் பொருள்களில் கலைப் பொருள்கள்!

கழிவுப்பொருட்களில் கலைப் பொருட்கள் பலவும் செய்து அசத்தி வருகிறார் காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டை ஜோதி நகரில் வசித்து வரும் சுரேஷ்குமார்(39) தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளராக
கழிவுப் பொருள்களில் கலைப் பொருள்கள்!
Updated on
2 min read


கழிவுப்பொருட்களில் கலைப் பொருட்கள் பலவும் செய்து அசத்தி வருகிறார் காஞ்சிபுரம் பஞ்சுப் பேட்டை ஜோதி நகரில் வசித்து வரும் சுரேஷ்குமார்(39) தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளராக பணியாற்றி வரும் இவர் உடைந்த தேங்காய் ஓடுகள்,சாக்பீஸ் கட்டிகள்,உடைந்த பென்சில் துண்டுகள், அரிசி ஆகியனவற்றில் ஏராளமான கலைப் பொருட்களை செய்து அவற்றை தனது வீடு முழுவதும் காட்சிப் பொருளாக நிரப்பி வைத்திருக்கிறார்.இவை தவிர,  துணியிலும், கண்ணாடியிலும் பல வண்ண ஓவியங்களை வரைந்து  தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமண வைபவங்களுக்கு பரிசாகவும் வழங்கி வருகிறார். எதைச் செய்தாலும் விற்பனைக்காக அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறார் சுரேஷ்குமார்.  அவரைச் சந்தித்து பேசினோம்:

""சிறுவயதிலிருந்தே வீடுகளிலும்,தெருக்களிலும் வீணாக குப்பைகளில் கிடக்கும் பொருட்களை எடுத்து வந்து, அதன் வடிவத்துக்கு ஏற்ற வகையில் ஏதேனும் ஒரு வடிவத்தில் கலைநயம் மிக்க பொருளாக மாற்றும் பழக்கம் என்னிடம் இருந்தது.இது அப்படியே வளர்ந்து இன்று வரை ஏராளமான கலைப் பொருட்களை பொழுது போக்காக செய்து வருகிறேன்.இதுவே நிரந்தரப் பழக்கமாகவும் ஆகி விட்டது.

தேங்காய் ஓடுகளிலிருந்து கடிகாரம், கைப்பை, தோடு, வளையல், நெக்லஸ், விபூதிக்கிண்ணம், குங்குமச் சிமிழ், மீன்கள், விநாயகர் உருவம் ஆகியனவும், பென்சில் நுனியில் முருகப்பெருமான், அத்திவரதர், அப்துல்கலாம், காந்தியடிகள், சங்கிலி, பூட்டுசாவி உள்பட இவையிரண்டிலும் எண்ணிலடங்கா பொருட்களை செய்திருக்கிறேன். இதுவரை பென்சில் வாங்குவதற்காக மட்டுமே ரூ.25  ஆயிரம் வரை செலவு செய்திருக்கிறேன். சிறுவர்கள் உபயோகித்து விட்டு தூக்கி எறிந்த பென்சில்களிலும் பல பொருட்களை வடிவமைத்துள்ளேன். அரிசியிலும், சாக்பீஸ் கட்டியிலும் திருவள்ளுவர், விநாயகர், புத்தர், ஏசுபிரான்  சிற்பங்களை செதுக்கியிருக்கிறேன். கண்ணாடியில் கிளி,மயில் உள்ளிட்ட பறவை வகைகளும், துணியில் புத்தர்,விநாயகர் ஓவியங்களும் என ஏராளமானவற்றை வரைந்து வைத்திருக்கிறேன்.

தேங்காய் வியாபாரிகள்,உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளுக்கு செல்லும் போது அவர்களிடம் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தபடி அவர்களிடம் இருக்கும் தேங்காய் கொட்டாங்குச்சிகளை வாங்கி வந்து அவற்றை உப்புக் காகிதத்தில் நன்றாக தேய்த்து பளபளப்பாக்குவேன்.

பின்னர் அந்த ஓட்டின் மீது தேவையான ஓவியத்தை வரைந்து, அதே அளவில் (ஆக்ஸô பிளேடு)அறத்தை வைத்து வெட்டி எடுத்து, இறுதியாக பாலிஷ் போட்டு பொருட்களை உருவாக்குகிறேன். தேங்காய் ஓட்டை நறுக்கும் போதும்,பளபளப்பாக்கும் போதும் விழும் தூசிகளாகிய துகள்களை சேமித்து வைத்திருந்து அதையும் தேவைப்படும் இடத்தில் பெவிக்கால் பசை மூலம் ஒட்டி நெக்லஸ்,தோடு உட்பட பலவற்றையும் தயாரிக்கிறேன்.தோடு,நெக்லஸ்க்கு 3 நாட்களும்,கைக்கடிகாரம் செய்ய ஒரு வாரமும்,விநாயகர் உருவம் செய்ய ஒரு மாதமும் ஆகிறது.மிகவும் கஷ்டப்பட்டும்,கவனமாகவும் செய்வதால் நான் செய்த எந்தப் பொருளையும் விற்பதில்லை. விற்க மனமும் இடம் கொடுக்கவில்லை. ஆனால் நண்பர்கள்,உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களது விருப்பதுத்துக்கு ஏற்றவாறு தயாரித்து எடுத்து சென்று அதை பரிசாக வழங்கும் போது அவர்கள் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை'' என்றார்.

இவரது மனைவி ரூபா சுரேஷ் கூறுகையில்,"" நான் செல்லும் எந்தத் திருமணத்துக்கும் நகைகள் அணிந்து சென்றதே இல்லை,நகைகள் வாங்குவதும் இல்லை,கணவர் தயாரித்து கொடுத்த தேங்காய் ஓடுகளால் செய்த வளையல்கள், நெக்லஸ்களைத்தான்  அணிந்து செல்வேன்.

இவற்றை எந்தக் கடையிலும் விலைக்கு வாங்க முடியாது.பார்ப்பதற்கும் கவர்ச்சியாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.உறவினர்களும் பார்த்து விட்டு வியந்து பாராட்டுவார்கள். திருமணங்களுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போதும் திருடர்கள்  பயம் இல்லாமல் வீடு வந்து சேருவேன். இவற்றை அணிந்து கொண்டு செல்வது தான் எனக்கும் பெருமையாக இருக்கிறது'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com