திரையரங்கு - ஓ.டி.டி.: தமிழ் திரையுலக ரசிகனின் மனநிலை

ஒவ்வொரு காலத்திலும் தன் இருப்பை அழியாது தக்கவைத்துள்ளது கலை. ஒரு வார்த்தையில் பொதுமைப்படுத்தினால், கலை ஒரு கருவி. அதைப் பயன்படுத்தும் கலைஞன், ரசிகனைப்  பொருத்தே அதன் வெளிப்பாடு
திரையரங்கு - ஓ.டி.டி.: தமிழ் திரையுலக ரசிகனின் மனநிலை
Updated on
3 min read


ஒவ்வொரு காலத்திலும் தன் இருப்பை அழியாது தக்கவைத்துள்ளது கலை. ஒரு வார்த்தையில் பொதுமைப்படுத்தினால், கலை ஒரு கருவி. அதைப் பயன்படுத்தும் கலைஞன், ரசிகனைப் பொருத்தே அதன் வெளிப்பாடு அமைகிறது. தனிமனித உணர்ச்சிக்காகத் தொடங்கியது முதல், இன்று தத்துவப் பிரசாரங்கள் வரை கலைகளின் தேவை தவிர்க்க முடியாதது. குறிப்பாக, வெகுஜனத்தின் மத்தியில் ஈர்ப்பைப் பெற்றது சினிமா. அதனால்தான் "கலைகளில் மக்களுக்கு அருகில் இருப்பது சினிமா' என்று கூறினார் லெனின்.

டிடிஹெச்-இல் ஆரம்பித்த பஞ்சாயத்து, இப்போது ஓ.டி.டி-யில் வந்து நிற்கிறது. இந்தியாவில் டிடிஹெச் பிரபலமானபோது "விஸ்வரூபம்' படத்தை "டைரக்ட் டு ஹோம்' என்கிற முறையில் வெளியிடப் போவதாக அறிவித்தார் கமல். அந்த அறிவிப்பு உச்சகட்ட பஞ்சாயத்து வரை போய் முடிவுக்கு வந்தது. கடைசியாக திரையரங்குகளிலேயே வெளியிட்டு லாபம் பார்த்தார் கமல்.

கரோனா பொது முடக்கத்துக்கு இடையே, ஓ.டி.டி. வெளியீட்டு சர்ச்சையை ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்' தொடங்கி வைத்தது. இதுவும் சின்ன சின்ன சிக்கல்களைச் சந்தித்து நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஓ.டி.டி. தளத்துக்கான காலம் தமிழ் சினிமாவில் கனிந்துவிட்டது. இப்போது சூர்யாவின் "சூரரைப் போற்று' படம் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாகவுள்ளது. ஆனால், ஒரு படத்தை எங்கே, எதில் பார்க்க வேண்டும் என்பது ரசிகனின் கையில் தான் உள்ளது.

விசிடி-யில் ஆரம்பித்து தமிழ் ராக்கர்ஸ் வரை பல விஷயங்களைக் கடந்து விட்ட தமிழ் ரசிகன், இப்போது திரையரங்கில் இருந்து ஓ.டி.டி. தளம் என்ற நிலையில் இருக்கிறான்.

அதிர்வலையை உண்டாக்குமா ?

கேளிக்கை என்பதைத் தாண்டி திரைப்படங்கள், இரண்டு விஷயங்களில் முக்கியப் பங்காற்றுகின்றன. நம் மக்கள் வெளியே செல்வது என்றால் பெரும்பாலும் திரைப்படமாகத்தான் இருக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு, காதலியோடு வெளியே செல்ல வேண்டும் என்றால், சுலபமான தேர்வாக திரையரங்குகள் இருக்கின்றன.

பிரம்மாண்டமான திரையரங்கில் ஏராளமான ரசிகர்களுடன் அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி, ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே சிறப்பு.

இன்னொன்று, திரைப்படம் மட்டுமே நட்சத்திரங்களை உருவாக்கும். இங்கே நட்சத்திரம் என்பது கதாநாயகன் மட்டும் அல்ல. கதாநாயகி, இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகர், இயக்குநர் என அனைத்து விதமான நட்சத்திரங்களும் இங்கே திரைப்படங்களில்தான் உருவாகிறார்கள். இங்கே உருவான நட்சத்திரங்களின் பிம்பங்களைத்தான் ஓ.டி.டி-யில் விற்க முடியும்.

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்' படத்தை நல்ல விலைக்கு அமேசான் நிறுவனம் வாங்கி இருக்கலாம். ஆனால், அந்தப் படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால், அதற்குக் கிடைக்கும் மதிப்பு அல்லது அந்தப் படத்தின் தாக்கம் ஓ.டி.டி மூலம் கிடைக்காது.

ஓ.டி.டி நிறுவனங்கள், தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள ஆரம்பக் கட்டத்தில் இதைப்போல அதிக விலை கொடுத்து வாங்கும். ஆனால், குறிப்பிட்ட லாப நஷ்டக் கணக்கைப் பார்த்து, அடுத்த முறை ஓ.டி.டி நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் படங்களை விலை பேசலாம்.

விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி-யில் வெளியாகும்போது வேண்டுமானால் ஆரம்பத்தில் பெரிய அதிர்வலையைக் கிளப்ப முடியும். அந்தப் படங்கள் சரியான வரவேற்பைப் பெறாவிட்டால், ஓடிடி நிறுவனங்கள் தயவுதாட்சன்யமில்லாமல், விலை பேசும். பல தயாரிப்பாளர்கள் திவாலாகிவிடும் சூழல் ஏற்படும்.

தனிக் கலைஞர்கள்

ஓ.டி.டி.யில் பார்ப்பதற்கு என்று சில வகைப் படங்கள் உள்ளன. அவை தனி. அந்த மாதிரி படங்களை திரையரங்குகளுக்காகத் தயாரிக்கவே முடியாது. அதேபோல, வீட்டில் அமர்ந்துகொண்டு ஓ.டி.டி தளத்தில்தான் திரைப்படங்களைப் பார்ப்போம் என்கிற ரசிகர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள், ஓ.டி.டி.யில் படம் வெளியாகவில்லை என்றால் பெரும்பாலும் சினிமா திரையரங்குகளுக்குப் போய் படம் பார்க்க மாட்டார்கள். அதனால், வரும் காலங்களில் ஓ.டி.டி.க்கு என்றே படம் எடுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம் ஆகலாம்.

ஓ.டி.டி. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள் உருவாகலாம். ஆனாலும் இவர்களின் கடைசி இலக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களாகவே இருக்கும். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் செய்வது அதைத்தான். ஆனால், பெரிய திரைக்கு வந்த பிறகும் அவர்கள் தொடர்ந்து ஓ.டி.டி.யிலும் இயங்கிக்கொண்டிருந்தால் மதிப்பு போய்விடும்.

மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்குத் திரும்பி, தன்னை நிரூபித்து விட்டுத்தான் மீண்டும் ஓ.டி.டி.யில் இயங்க வேண்டியிருக்கும்.

இன்னொன்று, இதுவரை ஓ.டி.டி.யில் பெரும் வரவேற்பைப் பெற்றவை வெப் சீரிஸ் எனப்படும் தொடர்கள்தான். திரைப்படங்களைப் போல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை ஓடக்கூடியவை. இதில் எதுவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. பழங்காலத்தில் தொடர்கதைகளைப் படிக்க ஒரு பெரும் கூட்டம் இருந்தது. அதேபோன்ற ஒரு மனநிலைதான் இப்போது காட்சி வடிவத்தில் ஏற்பட்டிருக்கிறது.

நாவல் என்றைக்கும் நாவல்தான். திரைப்படம் என்றைக்கும் திரைப்படம்தான். அதேபோல, இந்திய ஓ.டி.டி. முறையில் கடும் கற்பனை வறட்சி நிலவுகிறது. செக்ஸ் மட்டும்தான் இதில் ஹிட் ஆகும் என்று நினைத்துக் கொண்டு, கெட்ட வார்த்தைகளை மட்டும் அள்ளித்தூவி, சில படுக்கையறைக் காட்சிகளை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் உயிரும் இல்லை. எந்தப் புது முயற்சியும் இல்லை. இதை விட்டால், சில உண்மைக் கதைகளை எடுக்கிறேன் எனக் கதை சொல்லுகிறார்கள்.

திரையரங்கு மூலமே நட்சத்திரங்கள்

முதலில் ஓ.டி.டி.க்கான ரசனையை மேம்படுத்த வேண்டும். அதில் நல்ல அடித்தளத்தை அமைக்க வேண்டும். ஆனால், அதற்கு தமிழில் ஆளுமைகளோ, முன்னோடிகளோ ஓ.டி.டி.க்கு இல்லை. இப்போதைக்கு திரைப்படங்களை நம்பித்தான் ஓ.டி.டி. முறை இந்தியாவில் காலம் தள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இந்த ஓ.டி.டி. நிறுவனங்களே இந்தியாவில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை வாங்கும் நிலைக்குக்கூட வரலாம்.

பெரிய பட்ஜெட் படங்களையும் அவர்களே நேரடியாகவும் தயாரிப்பார்கள். ஆனால், திரையரங்குகளில் வெளியிடப்படும் படங்கள் மூலமே பெரும்பான்மையான நட்சத்திரங்கள் உருவாவார்கள்.

டி.வி, வி.சி.டி, ஹோம் தியேட்டர், ஓ.டி.டி., தமிழ் ராக்கர்ஸ் என எவை வந்தாலும், திரைப்படங்களை அழிக்க முடியவில்லை. இனியும் அது முடியாது. இவை எல்லாம் வந்த பின்புதான், திரையுலகம் தன்னை இன்னும் மேம்படுத்திக் கொண்டுள்ளது.

திரையரங்குகளின் முக்கிய எதிரிகள் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் சில முன்னணி நடிகர்களும், காப்பி அடித்து, கதையைத் திருடி, வெட்டியாகச் செலவழித்து படமெடுக்கும் இயக்குநர்களும்தான்.

வாகன நிறுத்தக் கட்டணம்

வாகன நிறுத்தக் கட்டணமும் அநியாயம். வெளிநாடுகளைவிட இங்கே அதிகம் வாங்குகிறார்கள். இதையெல்லாம் தாண்டி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் தனிக் கட்டணம். ஒரே தடவை 4 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தாலும் 120 ரூபாய் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.

உங்கள் நிறுவனத்தின் சேவைகளை நுகர்வதற்கு உங்கள் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தினால், நான் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகிறது.

திரையரங்குகள் இல்லை என்றால் அந்த மாலுக்கு கூட்டமே வராது. அண்ணா சாலையில் இருக்கும் ஸ்பென்சர், ரமீ மால் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
திரைப்படங்களைப் பயன்படுத்தி வளரும் மால்கள், இதுபோன்று திரைப்படங்களுக்கு எதிரான செயல்களைச் செய்யும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் இதையெல்லாம் தடுக்க வேண்டும். இவையெல்லாம் நடந்தாலே, திரையரங்க அனுபவத்துக்காக வரும் கூட்டம் இன்னும் கூடும். அதேசமயம், இனி திரையரங்கில் ஆண்டுதோறும் குறைந்த அளவிலான படங்களே வெளியாகும் என்பதால், நம்முடைய பட்ஜெட்டும் அதற்குள் அடங்கிவிடும்.

பொது முடக்கத்தால் பல மால்கள் மிகப் பெரிய இழப்பை எதிர்கொண்டிருக்கின்றன. பொது மக்களின் வயிற்றெரிச்சலைக் கொள்ளைக் கொண்டதன் வினையை அனுபவிக்கின்றன. எத்தனை மால்கள் தொடர்ந்து இயங்கும், அதற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதெல்லாம்கூடக் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஒவ்வொரு காலத்திலும் கலை தன் இருப்பை அழியாது பாதுகாத்துக் கொள்ளும். தற்போது திரையரங்கு - ஓ.டி.டி. இரண்டிலும் திரையுலகைக் கொண்டாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் தமிழ்த் திரையுலகரசிகன்.

540

வணிக வளாகங்கள் (மால்கள்) வந்ததும் திரைப்படங்கள் புத்துயிர் பெற்றன என்பது உண்மைதான். நல்ல திரையனுபவத்தை மால்கள் வழங்கின. ஆனால்,  இப்போது தான் வைத்ததுதான் சட்டம் என்று தனிக்காட்டு ராஜா போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, மால்களில் உள்ள திரையரங்குகள். ஒரு ஜம்போ சைஸ் பாப் கார்ன் 540 ரூபாய் வரை விற்கிறார்கள். அதன் அடக்க விலை 30 ரூபாயாக இருந்தால் பெரிய விஷயம். இதேபோல, விற்கப்படும் அனைத்து உணவு வகைகளிலும் கொள்ளை அடிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com