"மியாவாக்கி' முறை: 10 ஆண்டுகளில்  காடுகள்!

இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள், பாசனத் திட்டங்கள், அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக நாள்தோறும் 333 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன.
"மியாவாக்கி' முறை: 10 ஆண்டுகளில்  காடுகள்!
Updated on
2 min read

இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள், பாசனத் திட்டங்கள், அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக நாள்தோறும் 333 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுகின்றன. இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 14 ஆயிரம் சதுர கி.மீட்டர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் வெப்ப நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மரங்கள் அழிப்பினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில், குறைந்த நிலத்தில் அதிக மரங்களை உருவாக்கும் மியாவாக்கி காடுகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுநர் அகிரா மியாவாக்கி, நகர்புற காடுகள் வளர்ப்பு மூலம் வெப்பமயமான சூழலை மாற்றி அமைக்க முடியும் என்பதை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தி உள்ளார். ஜப்பான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 1,500 மியாவாக்கி காடுகளை அகிரா உருவாக்கியுள்ளார். இந்த மியாவாக்கி முறையிலான நகர்புறக் காடுகளை வீட்டின் கொல்லைப் புறத்தில் கூட எளிதாக உருவாக்க முடியும். அதன் மூலம் நகர்புறங்களில் வெப்ப நிலை குறையும் என்பதோடு, மண் வளம் பெருகுவதோடு, மழை பெறுவதற்கான சூழலும் அதிகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து திண்டுக்கல் எம்.வி.எம் அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் 2 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2017 -ஆம் ஆண்டு இந்த மியாவாக்கி காடு வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம், இந்திய அளவில் அரசுக் கலைக் கல்லூரியில் முதல் முறையாக மியாவாக்கி காடு உருவாக்கப்பட்ட இடம் என்ற சிறப்பும் எம்.வி.எம் கல்லூரிக்கு கிடைத்தது.

மியாவாக்கி காடுகள்...: ""மியாவாக்கி முறை காடு வளர்ப்பு என்பது... ஒரு சிறிய இடத்தில் அதிக அளவிலான மரக்கன்றுகளை நடவு செய்தல் ஆகும்'' என்கிறார் திண்டுக்கல் எம்விஎம் அரசினர் மகளிர் கல்லூரி பேராசிரியர் எம்.ராஜாராம். மியாவாக்கி காடுகள் வளர்ப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது:

""குறைந்த அளவு இடமாக இருந்தாலும், அதில் நமது தேசத்தின் பாரம்பரியமான மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டும். இந்த வகை காடு வளர்ப்பினால் ஏற்படும் பயன்கள் ஏராளம். பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழல் கிடைக்கும். அடர்ந்த மரங்களாக இருப்பதால், ஆக்சிஜன் அதிக அளவு உற்பத்தியாகும். மரங்களுக்கு வேர்களில் தண்ணீரை சேமிக்கும் ஆற்றல் இருப்பதால், நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

எப்படி உருவாக்குவது?: தேர்வு செய்த இடத்தில் 5 முதல் 7 அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். அதில் தென்னை மட்டைகள், பனை மட்டைகள், பாக்கு மட்டை தட்டுகளின் கழிவுகள், வீட்டின் சமையல் அறையிலுள்ள காய்கனி கழிவுகள் உள்ளிட்டவற்றால் குழியை நிரப்ப வேண்டும். அதன் மேல் மண்ணை நிரப்பி தண்ணீர் தெளித்து வந்தால், 4 மாதங்களில் இந்த கழிவுகள் மக்கி மண்ணோடு கலந்துவிடும்.

அதன் பின்னர் மக்கிய கழிவுகள் குழியில் கீழே இறங்கும். அந்த இடத்தில் மீண்டும் மண்ணைக் கொட்ட வேண்டும். அதில், நமது பராம்பரியமான மரக்கன்றுகளை மிக நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். 500 சதுரஅடி நிலத்தில், 300 முதல் 500 மரக்கன்றுகளை நெருக்கமாக நடவு செய்ய முடியும். நடவு செய்த மரக்கன்றுகளை சுற்றிலும், மண் வெளியே தெரியாத வகையில் தென்னை மட்டைகளைக் கொண்டு மூட வேண்டும். அடுத்த 6 மாதங்களுக்கு மாதம் இரு முறையும், அதன் பின்னர் மாதத்திற்கு ஒரு முறையும் தேவையான அளவுக்கு தண்ணீர் விட வேண்டும். இதன் மூலம் 100 ஆண்டுகளில் உருவாகும் காடு, மியாவாக்கி முறையில் 10 ஆண்டுகளில் உருவாகிவிடும்'' என்றார்.

கடந்த 2017 மார்ச் 21-ஆம் தேதி உலக வன நாளை முன்னிட்டு திண்டுக்கல் எம்.வி.எம் அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் மியாவாக்கி காடு உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இக்கல்லூரி வளாகத்தில் தலா 150 மற்றும் 160 மரக்கன்றுகளுடன் 2 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஜனவரியில் 71 -ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு 3- ஆவது மியாவாக்கி காடு 710 மரக் கன்றுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மர வகைகளான வேம்பு, புங்கன், மாதுளை, கொய்யா, அரசு, ஆல், சொர்க்கம், புளி, தேக்கு, பலா, ஆவி, நெட்டிலிங்கம், மா, நாவல், வேங்கை, பாதம், பூவரசு, அலங்காரக் கொன்றை, மஞ்சள் கொன்றை, இலுப்பை, கொடுக்காபுளி, மந்தாரை உள்ளிட்ட மரங்கள் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி வளாகத்திலுள்ள மியாவாக்கி காட்டில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com