

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படித்து வந்ததால் மூடும் நிலையில் இருந்தது காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.
இப்பள்ளிக்கு தலைமையாசிரியராக நியமிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர், கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, ஒரே ஆண்டில் மாணவ-மாணவியர் எண்ணிக்கையை 27 -ஆக உயர்த்தி, பள்ளி தொடர்ந்து இயங்க புத்துயிர் அளித்துள்ளார்.
வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி காளியம்மன் புதூர் கிராமத்தில் 1974-ஆம் ஆண்டு அரசு ஆரம்பப்பள்ளி தொடங்கப்பட்டது.
இப்பள்ளியில் தொடர்ந்து 30 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வந்தனர். கடந்த 15 ஆண்டுகளில் கிராமப்புற மக்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம், கடமைக்கு பணியாற்றிய ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், இப்பள்ளி மாணவர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து போனது.
தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வரும் இப்பள்ளியில், கடந்த 3 ஆண்டுகளாக, கேசவன், ஸ்ரீதரன் ஆகிய இரு மாணவர்கள், சௌமியா என்ற ஒரு மாணவி உள்பட மூவர் மட்டுமே படித்து வந்தனர்.
ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் படித்து வரும் பள்ளிகளை மூடிவிட்டு, இந்த மாணவர்களை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் இணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்தில், சேலம் மாவட்டத்தில் மூடுவிழா காணவிருந்த பள்ளிகளின் பட்டியலில் இந்த காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில், முடியனூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 17 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மலைக் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மாற்றுத் திறனாளியான ஆசிரியர் ஸ்ரீதர், பதவி உயர்வில் காளியம்மன் புதூர் தொடக்கப்பள்ளிக்கு வந்தார்.
கடந்த 2018 ஜூன் 18 -ஆம் தேதி தலைமையாசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட இவர், தனது மூன்று சக்கர வாகனத்தில் பள்ளியைச் சுற்றியுள்ள கிராமப்புறக் குடியிருப்புகளுக்கு வீடுவீடாகச் சென்று, ""உங்களது குழந்தைகளை அரசுப்பள்ளிக்கு அனுப்புங்கள்... தனியார் பள்ளிகளை விட தரமான கல்வியைக் கற்றுத் தருகிறோம்'' என்று பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று 24 மாணவ-மாணவியர் இப்பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதனால் மூடுவிழா காணவிருந்த அரசுப் பள்ளி புத்துயிர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.