நிறுவனம் உருவான வரலாறு

இந்த வாரம் நிறுவனம் உருவான வரலாறு பற்றி "செளபாக்யா வெட் கிரைண்டர்' நிறுவனத்தின் இயக்குநர் வி.வரதராஜன் விளக்குகிறார்:
நிறுவனம் உருவான வரலாறு
Published on
Updated on
2 min read

இந்த வாரம் நிறுவனம் உருவான வரலாறு பற்றி "செளபாக்யா வெட் கிரைண்டர்' நிறுவனத்தின் இயக்குநர் வி.வரதராஜன் விளக்குகிறார்:

சொந்த ஊர் ஈரோடு தான். தந்தையார் கே.பி.வெங்கடநாராயண செட்டியார். பலசரக்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். பெரிய குடும்பம். வீட்டில் இட்லி தோசைக்கு மாவு போட்டால் அதை அரைக்க ஆட்டுக்கல் தேவைப்படும். இரண்டு பேர் உதவி வேண்டும். மாலை 3 மணியிலிருந்து இந்த வேலை தொடங்கிவிடும்.

மாவு அரைப்பது பெரிய பாடு. அதனால் தான் அந்தக் காலத்தில் இட்லி தோசை என்றால் எப்போதாவது நாள் கிழமைகளில் தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஓரளவு வசதியுள்ளவர்கள் வீட்டில் தான் மாவு அரைக்க கிரைண்டர் இருக்கும். அதுவும் அடிக்கடி பழுதாகிவிடும். கிரைண்டர் நிறுவனத்துக்கு போன் போட்டால் பழுதுபார்க்க ஆள்கள் வருவார்கள். இவையெல்லாவற்றுக்கும் ஒரு வார காலம் பிடிக்கும்.

எங்கள் வீட்டில் அப்போது ஒரு கிரைண்டர் இருந்தது. அது ஒரு தடவை பழுதாக அப்பா தானே பழுது பார்க்கும் வேலையில் இறங்கி கிரைண்டரைப் பிரித்துப் போட்டு சரி செய்தார். ஓட ஆரம்பித்தது. இப்படி பல தடவைகள் ஈடுபட்டதால் கிரைண்டர் நுணுக்கம் தெரிந்துவிட்டது.

மளிகைக் கடையைத் தவிர்த்து வேறு ஏதாவது தொழிலில் ஈடுபடலாம் என்று நினைத்த நேரம் அது. நாமே ஒரு கிரைண்டர் கம்பெனி ஆரம்பித்தால் என்ன? ஆரம்பித்தும் விட்டார். தெரிந்த குடும்பங்கள். ஓட்டல்களுக்கு விற்று வந்தார்.

கண்காட்சிகள் நடந்தால், தான் தயாரித்த கிரைண்டரை வைத்துக்கொண்டு விளக்குவார். தயாரித்த கிரைண்டர்களை தூக்கிக் கொண்டு அப்பாவுடன் நாங்களும் ஊர் ஊராக செல்வோம். மார்க்கெட்டில் இடம் பிடிக்க அவ்வளவு கஷ்டப்பட்டோம்.

எங்களது கிரைண்டருக்கு ஒரு பெயர் வைக்க வேண்டுமே? தனது தாயார், அதாவது எங்களது பாட்டியின் பெயரையே "செளபாக்யா' என்று வைத்தார்.

எங்களது குடும்பம்-மற்றும் நிறுவனத்தில் ஏற்பட்ட "செளபாக்யம்'-வாங்குபவர்களின் இல்லத்திலும் செழிக்க வேண்டும் என்பதே அவரது கனவு. அந்த கனவு நிலைபெற்றது.

தயாரிப்பு என்பது ஈரோட்டில் தான். ஷோரூம் வைக்க சென்னையில் இடம் தேடினோம். தி.நகரில் ஓர் இடத்தைப் பிடித்து முதல் ஷோரூமைத் தொடங்கினோம். மூன்று மாதங்கள் வரை விற்பனையே இல்லை. அதன் பிறகே விற்பனையின் வெளிச்சம் தென்பட்டது. பிறகு செளபாக்யாவுக்கென்று ஓர் மார்க்கெட் உருவாயிற்று. தற்போது கிரைண்டரை அவுட் சோர்சிங் முறையில் பெறுகிறோம். இது தவிர சமையலறைக்கு தேவையான ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ், குக்கர் போன்ற எங்களது விருப்பத்துக்கும் மாடலுக்கும் ஏற்ற வகையில் செய்து தருகிறவர்களிடமிருந்து பெற்று மார்க்கெட்டிங் செய்கிறோம். அதே போன்று "டவர்ஃபேன்' உள்ளிட்டவற்றை "செளபாக்யா' பிராண்டில் விற்பனை செய்கிறோம்.

அண்ணன்கள் ராஜேந்திரன், ஆதிகேசவன் ஈரோட்டில் இருந்து கொள்முதல் வேலைகளைக் கவனிக்கின்றனர். நான் சென்னையில் இருந்து விற்பனையைக் கவனிக்கிறேன். இருமகன்கள் பாலசுப்ரமணியம், பிரவீண்குமார் சென்னையில் என்னுடன் இருந்து நிர்வாகத்தில் உதவி செய்கின்றனர் என்கிறார் வரதராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com