

காவல்துறை அருங்காட்சியகத்துக்கு வந்தால் பொருள்களின் பழைமையை மட்டுமல்ல, கூடுதலாக அவற்றின் வரலாற்றையும் தெரிந்துக் கொள்ளலாம். தமிழகத்தையும், காவல் துறையையும் பற்றி அறிய விரும்புகிறவர்கள் இந்த அருங்காட்சியகத்துக்கு செல்வதை தவற விட மாட்டார்கள்.
எழும்பூர் பாந்தியன் சாலையில் நுழைந்ததும்,இப்போது வரவேற்பது காவல்துறை அருங்காட்சியகம்தான். பழைய காவல் ஆணையர் வளாகத்தின் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அருங்காட்சியகம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
ஏனெனில், ஆங்கிலேயர் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டடம் அருங்காட்சியத்துக்காக பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு சேகரித்து வைக்கப்பட்டு வரும் காவல்துறை சார்ந்த பொருள்களும்,கலைப் பொருள்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இப்போதுள்ள தலைமுறைகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள்,வெடிகுண்டுகள்,வாள்கள்,வாக்கி-டாக்கி உள்ளிட்ட பொருள்கள் காண்போரை வியப்புக்குள்ளாகிறது.
இங்கு பொதுமக்களின் பார்வைக்காக சிறிய கைத்துப்பாக்கி தொடங்கி அதி நவீன ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் வரை வைக்கப்பட்டுள்ளன. சுதந்திரத்துக்கு முன்பு இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்ட 303 ரக துப்பாக்கி, ஓய்வு பெற்ற டிஜிபி வால்டர் தேவராம் கடந்த 1963-ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வின்போது முதலாவதாக தேர்ச்சி பெற்றதற்காக பாராட்டி பரிசாக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புடைய ஆயுதங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. சில ஆயுதங்களின் பின்னணி குறித்து குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. பல்வேறு வகைப்பட்ட துப்பாக்கிகள் 70 வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கி,ரேடியோ கருவிகள்,கட்டுப்பாட்டு அறைகள், அந்த காலத்தில் சிறையில் கைதிகளுக்காக கட்டப்பட்டிருந்த அறைகள் என அனைத்தும் காண்போரை வியப்பில் இருந்து வெளியே வர முடியாதளவுக்கு உள்ளன.
ஆங்கிலேயர் காலம் தொடங்கி இப்போது வரை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை பயன்படுத்தும் கைவிலங்குகள் பல்வேறு வகைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழ் ஈழ போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட இலகு ரக பீரங்கியும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் ஆகியவையும் அருங்காட்சியகத்தில் இடம் பிடித்துள்ளன. இதேபோல கண்ணீர் புகை குண்டுகள்,கையெறி குண்டுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் காவல்துறை உருவாகிய காலக்கட்டத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரையில் போலீஸார் பயன்படுத்தும் அனைத்து பொருள்களுமே இடம் பிடித்துள்ளன. அந்த கால காவல்துறையின் சீருடை,காலணிகள்,சைக்கிள்கள்,ரோந்து வாகனங்கள், படகுகள், வாள், ஈட்டி,அரிவாள் போன்றவையும் உள்ளன.
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கருதப்பட்ட எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பெருநகர காவல்துறையின் அலுவலகம், கடந்த 1842-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயேர்கள் ஆட்சிக் காலத்தில் வேப்பேரியில் இயங்கி வந்தது. பின்பு அங்கிருந்து எழும்பூர் பாந்தியன் சாலையில் அருணகிரி முதலியாரின் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள பங்களாவுக்கு இடம் மாறியது. அப்போது அந்த பங்களாவுக்கு மாதம் 165 ரூபாய் வாடகையாக காவல்துறையால் வழங்கப்பட்டது.
அதையடுத்து 1856-ஆம் ஆண்டு சென்னை காவல்துறை சட்டம் இயற்றப்பட்டதும் நிலையான காவல் அமைப்பு உருவாக்கப்பட்டது. சென்னை மாநகர காவல்துறையின் முதல் ஆணையராக லெப்டினென்ட் கர்னல் ஜெ.சி. போல்டர்சன் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அருணகிரி முதலியார் இடத்தைக் காவல்துறையே ரூ. 21 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியது.
இத்தகைய பாரம்பரியம் மிக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் இடப் பற்றாக்குறையால், வேப்பேரிக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மீண்டும் இடம் பெயர்ந்தது. இதன் விளைவாக எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்த ஆணையர் அலுவலகம் வளாகம் பொலிவை இழந்தது என்றே கூறலாம்.
இதன் பின்னர் பழைய காவல் ஆணையர் அலுவலக கட்டடம்,சென்னை காவல்துறையின் அறிவிக்கப்படாத விசாரணை மையமாகவே இருந்தது. இந்நிலையில் கடந்தாண்டு பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை பார்வையிட்ட அப்போதைய சென்னை காவல்துறையின் தலைமையிட ஐஜி அமல்ராஜ், கட்டடத்தின் பழைமைமையும், பாரம்பரியத்தையும் உணர்ந்தார். இதன் விளைவாக அந்த கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்றலாம் என அரசுக்கு பரிந்துரை செய்தார்.
அரசும் அதற்கு அனுமதி அளித்து ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து அந்த கட்டடத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் காவல்துறை தொடர்புடைய கலைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு வருகிறது.
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றிய ஜான் பானர்மேன், கிழக்கு இந்திய கம்பெனியின் மெட்ராஸ் பிரஸிடெண்டாக இருந்த சர் எட்வர்ட் கிளைவிடம் இத் தகவலை அறிக்கையாக அளித்திருப்பதை ஜான் பானர்மேன் எழுத்துக்களிலேயே சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையை ஏற்படுத்தியது பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன்தான்.
அவர்தான், கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு,கிளர்ச்சி செய்தார். அவரது நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாததினால்,வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இந்த கொடூரத் தண்டனை வழங்கப்பட்டது" என கிழக்கு இந்திய கம்பெனியின் மேஜர் கமாண்டர் ஜான் பானர்மேன் பதிவு செய்துள்ளார்.
இதேபோன்று தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பும்,பின்பும் வரலாற்றில் சந்தித்த மிக முக்கியத் தருணங்களையும்,அதில் காவல்துறைக்கு இருந்த பங்கையும் காலவரிசைப்படி அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களுடனும்,அது குறித்த வரலாற்று குறிப்புகளுடனும் எழும்பூரில் புதிதாக இரு தளங்களில் உருவாகும் காவல்துறை அருங்காட்சியகத்தில் வரிசைபடுத்தப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக கடந்த 1799-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட சம்பவம்,1955-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறையின் முதல் கட்டுப்பாட்டு அறை,1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்,1972-ஆம் ஆண்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து, சென்னை பாண்டி பஜாரில் 1982-ஆம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்ட சம்பவம், 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், 2004-ஆம் ஆண்டு சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், 2014-ஆம் ஆண்டு சென்னை அருகே மெளலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 61 பேர் பலியான சம்பவம், 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் மீட்புப் பணி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
படங்கள்: ஏ.எஸ். கணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.