வானுயர் அதிசயம் வல்லபபாய் தேசம்!

சர்தார் வல்லபபாய் படேலின் சாதனைகளைப் போலவே அவரது புகழும் அகிலம் யாவும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
வானுயர் அதிசயம் வல்லபபாய் தேசம்!
Published on
Updated on
2 min read

சர்தார் வல்லபபாய் படேலின் சாதனைகளைப் போலவே அவரது புகழும் அகிலம் யாவும் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அதனைப் பறைசாற்றும் விதமாகவே அவருக்கு குஜராத் மாநில அரசு உலகிலேயே மிக உயரமான பிரம்மாண்ட சிலையை கெவாடியா நகரில் நர்மதை நதியோரம் நிறுவி புகழஞ்சலி செலுத்தியிருக்கிறது.

இந்திய தேசத்தின் வரலாற்றில் நீக்கமற நிறைந்திட்ட அந்த தலைவரின் சிலையைக் காண்பதற்கு எதிர்பார்த்ததை விட அதிக மாக மக்கள்ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன் நீட்சியாக படேல் சிலையின் அருகிலேயே உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்களை அந்த மாநில அரசு அமைத்துள்ளது. இதன் மூலம் குஜராத் மாநிலத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக கெவாடியா நகரம் உருமாறியிருக்கிறது.

நர்மதை நதியின் குறுக்கே மிகப் பெரிய அணையை அமைக்க வேண்டும் என்பது படேலின் கனவுத் திட்டங்களில் ஒன்று. ஆனால், பல்வேறு அரசியல் காரணங்களால் அவரது காலத்தில் அது நிறைவேறாமல் போய்விட்டது. 

இந்நிலையில்தான் மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில எல்லைகளுக்கு குறுக்கே பிரம்மாண்டமாக சர்தார் சரோவர் அணையை கடந்த 2017-ஆம் ஆண்டு எழுப்பி படேலின் கனவை நனவாக்கினார் பிரதமர் மோடி. 

அதன் தொடர்ச்சியாக அணையின் முகப்பில் 182 மீட்டரில் (597 அடி) படேலுக்கு மாபெரும் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதற்கான கட்டமைப்புக்காக மட்டும் 5 ஆயிரம் டன் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல மெட்ரிக் டன் அளவில் செம்பு மற்றும் துத்தநாகம் தருவிக்கப்பட்டு அதன் மூலம் சிலை வடிவமைக்கப்பட்டது.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ராம் வி. சுதார் என்ற சிற்பக் கலைஞர் அந்த பிரம்மாண்ட சிலையை வடிவமைத்துள்ளார். இதில், குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், படேல் சிலையை வடிவமைக்கும்போது அவருக்கு வயது 90. எல் அண்ட் டி நிறுவனத்தின் துணையுடன் மொத்தம் மூன்றரை ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் ஒற்றுமையின் சிலை என்ற பெயரில் அது திறந்துவைக்கப்பட்டது.

இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் திடமாக வடிவமைக்கப்பட்ட படேல் சிலையானது 6.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டாலும் கூட எதுவும் ஆகாது. அதேபோன்று 180 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசினாலும் கூட அந்த சிலையை அசைக்க இயலாது.

சிலையின் உள் பகுதியில் உள்ள மின்தூக்கி வாயிலாக 135 மீட்டர் உயரம் வரை பயணிகள் செல்ல முடியும். அங்கிருந்து சர்தார் சரோவர் அணையைக் காணலாம். சிலையின் கீழ்ப் பகுதியிலேயே சர்தார் படேலின் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமும் மாலையில் படேலின் பிரம்மாண்ட சிலையின் மீது லேசர் காட்சிகள் திரையிடப்படுகின்றன. அவ்வாறு அவரது வாழ்க்கை வரலாறு கண்கவர் தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்படுவது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இதைத் தவிர, படேல் சிலையைச் சுற்றி அமைந்துள்ள ஏக்தா (ஒற்றுமை) உயிரியல் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, ஊட்டச் சத்து பூங்கா, ஒளிரும் பூங்கா, டெண்ட் சிட்டி போன்ற பல இடங்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.

சென்னையின் பங்களிப்பு: படேல் சிலை அமைந்துள்ள கெவாடியா நகருக்கு நேரடியாக பல்வேறு இடங்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

தில்லி, மும்பை, சென்னை, வதோதரா, வாராணசி, ஆமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ரயில்கள் செல்கின்றன.

அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆமதாபாத்திலிருந்து இயக்கப்படும் ஜனசதாப்தி ரயிலில் விஸ்டாடோம் என்ற பெயரிலான சிறப்பு ரயில் பெட்டி உள்ளது. சொகுசான இருக்கைகளுடன் விமானத்தில் இருக்கும் வசதிகளைப் போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதில் பயணிப்பவர்கள் ரயிலில் அமர்ந்தவாறே கெவாடியா நகரின் அழகை ரசிக்கும் வகையில் பெரிய அளவிலான கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்தகைய சிறப்பு மிக்க அந்த பெட்டி தயாரானது சென்னையில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

50 லட்சம் பார்வையாளர்கள்

படேல் சிலையை பொதுமக்கள் பார்வைக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை ஏறத்தாழ 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிலையை பார்வையிட்டுள்ளனர்.  கடந்த ஆண்டில் ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனா பாதிப்பால் பொது மக்களுக்கு  அங்கு அனுமதி மறுக்கபட்டது. ஒருவேளை அத்தகைய பாதிப்பு ஏதும் இல்லாமல் இருந்திருந்தால் படேலை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்திருக்கும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com