ரோஜா மலரே! - 97: நாடகம் - சினிமாவில் எதிர்கொண்ட சவால்கள்! - குமாரி சச்சு
சினிமாவில் விரும்பும் வேடங்கள் யாருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு வேடங்கள் கிடைத்தது என்றாலும், நான் விரும்பும் வண்ணம் அமையவில்லை.


சினிமாவில் விரும்பும் வேடங்கள் யாருக்கும் கிடைப்பதில்லை. எனக்கு வேடங்கள் கிடைத்தது என்றாலும், நான் விரும்பும் வண்ணம் அமையவில்லை. காமெடி கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறோம். ஏன் குணசித்திர வேடங்களை ஏற்று நடிக்கக்கூடாது என்று தோன்றியது. அப்பொழுதுதான் தொலைக்காட்சி தொடர்கள் வெளிவரத் தொடங்கிய காலகட்டம். முன்னதாக நான் மேடையில் நடித்த நாடகங்களை, தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள்.
அந்த நேரத்தில் தான் முதியோர் இல்லங்கள் வரத் தொடங்கியது.
வயதானவர்கள் தங்கும் விடுதியில் விடும் போது, அங்கு நடக்கும் சாதக பாதங்களை எடுத்துக் கூறி, அங்கு என்ன நடக்கிறது என்று நாங்கள் மேடையில் நாடகமாகப் போட்டோம். அந்த நாடகத்தின் பெயர் "சக்கரம் சுழல்கிறது'. ஏ. ஆர். எஸ். மற்றும் நாடகக்குழுவுடன் நடித்தேன். அன்று தூர்தர்ஷனில் அந்த மேடை நாடகங்களில் வேண்டாத காட்சிகள் எல்லாம் எடுத்து விட்டு ஒளிபரப்புவார்கள். ஏன் என்றால் அன்றைக்குத் தூர்தர்ஷனில் ஒரு மணி நேர நாடகங்கள் ஒளிபரப்ப மட்டுமே அனுமதி உண்டு.
"சக்கரம் சுழல்கிறது' என்ற மேடை நாடகம், சின்னத்திரைக்கு வரும் போது "ஹலோ ஹவ் ஆர் யு' என்ற பெயரில் ஒளிபரப்பானது. கோவை அனுராதா எழுதி, நடித்த நாடகம் "நடிகனின் நாயகி'. அதில் ஒரு பிரபல நடிகரின் நாயகி எப்படி இருப்பார், அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன என்று சுவைபட கூறும் நாடகம். அதில் "நடிகனின் நாயகி' யாக நடித்திருந்தேன். எனக்கு பெயர் பெற்று கொடுத்த நாடகம் இது. ஒரு பண்டிகை நாளில் அதை ஒளிபரப்பினார்கள்.
பல அருமையான கதாபாத்திரங்கள் எனக்கு மேடை நாடகங்களிலும், பின்னர் தொலைக்காட்சி நாடகங்களிலும் தான் கிடைத்தன. மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு, எனக்கு நல்ல பல வேடங்கள் நாடகங்களில் கிடைத்தன. அது தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ந்தது. நான் முதன் முதலாக நடித்த தொலைக்காட்சி தொடரை பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அது தான் "தினேஷ் கணேஷ்'. அதனைத் தொடர்ந்து பல தொடர்களில் நடித்துவிட்டேன்.
சினிமா நட்சத்திரங்கள் பலர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தயங்கினார்கள். நான் தயக்கம் காட்டவில்லை. காரணம், இந்தத் தொலைக்காட்சி உலகம் பெரிய உலகமாகப் போகிறது என்று உறுதியாக நம்பினேன். அது தான் போகப் போக நடந்தது. இன்று தொலைக்காட்சி தனி உலகமாக மாறிவிட்டது. இன்று தனியார் சேனல்கள் பெருகிவிட்டன. இதைதான் அன்றே சொன்னேன். அது நடந்தும் விட்டது.
காமெடி வேடங்கள் சினிமாவில் கிடைத்த போது நான் எதற்கு வேண்டாம் என்று சொன்னேன் தெரியுமா? நான் மேடை நாடகத்தில் நல்ல நல்ல வேடங்களை ஏற்று நடித்துக் கொண்டிந்தேன். அவை டிவியில் ஒளிபரப்பாகும் போது எனக்கு மிகப் பெரிய பாராட்டுக் கிடைத்தது. பெரியதிரையா, சின்னத்திரையா என்ற போட்டி இல்லை. நல்ல வேடங்களாக வரும் பொழுது, பாகுபாடு கலைஞர்களுக்கு என்றுமே கிடையாது. சிறந்த வேடங்கள் என்று வந்துவிட்டால் எல்லாரும் அதன் பின்னால் தான் செல்வார்கள். அதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்களில் கூட, தொலைக்காட்சி தொடர்களில் பெரிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து இருப்பார்கள். அது மட்டுமல்ல, சினிமாவில் நடித்தேன் என்று சொல்வதை விட, நான் நடித்த தொடர் அந்த சேனலில் ஒளிபரப்பாகிறது என்று சொல்வது நடிகர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இருந்தது. இது மட்டுமல்ல, சின்னத்திரை படப்பிடிப்பு முடிந்தவுடன், அன்று மாலையே, சம்பளம் கிடைத்து விடுகிறது. இது நடிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல வேடம், சம்பளம் குறைவு என்றாலும் உடனே கொடுத்து விடுகிறார்கள். இந்த இரட்டை நிகழ்வில் அவர்கள் திளைத்து மகிழ்ந்தார்கள்.
கிட்டதட்ட 100 தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறேன். இதில் நகைச்சுவை வேடங்கள், முக்கியக் குணசித்திர வேடங்கள் என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களில் நடித்தால் பாராட்டு, கைதட்டல் உடனேயே கிடைத்து விடும். தொலைக்காட்சி தொடர்கள் நடிக்கும் போது சம்பளம், உடனே கிடைத்தது. இப்போது மெகா சீரியல் என்று வரும் போது மாத கணக்கில் நடிக்கச் சொல்கிறார்கள். அப்படி இருக்கும் போது உங்கள் சம்பளம் மாத சம்பளமாக மாறி விடுகிறது. எப்படி என்றாலும் பணம் கைக்கு வந்து விடுகிறது. நாவல்கள் டிவி தொடராக வெளிவந்தன. நாவலில் நடித்த அனுபவம் வித்தியாசமானது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...