

சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வாசலில் ஆக்ஸிஜன் தேவைக்காக காத்திருக்கும் மக்களுக்கு உயிர் காக்கும் சேவையைத் தனது குழுவினருடன் செய்து வருகிறார் சீதா தேவி. அவரிடம் பேசினோம்:
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சவுகார்பேட்டை. அம்மா, அப்பா உள்பட எங்கள் குடும்பமே மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். நான் இது போன்ற ஆட்டோவில் ஆக்ஸிஜன் கொண்டு வந்து உதவி செய்வதற்கு காரணம் என்னுடைய அம்மா தான். கடந்த மே1- ஆம் தேதி மூச்சு விட முடியவில்லை என்றார். 65 வயதாகும் அவரை நள்ளிரவு 12 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். ஆனால், ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால், அவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மறுநாள் 12 மணி ஆகியும் ஆக்ஸிஜனும் கிடைக்கவில்லை. பெட்டும் கிடைக்கவில்லை. கடைசியாக ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு பெட் கிடைத்தது. 5 மணி நேரம் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்தார். அதன் பிறகு அவரால் சுவாசிக்க முடியாமல் இறந்து போனார்.
என் கண்முன்னே அம்மாவை இழந்தேன். இனி முடிந்தவரை எந்த உயிரையும் போகவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் என்னுடைய "ஸ்ட்ரீட் விஷன்' அறக்கட்டளை மூலமாக அம்மா இறந்த சில தினங்களில் இந்த ஆக்ஸிஜன் ஆட்டோவை நண்பர்கள் சிலரின் உதவியுடன் உருவாக்கினேன். காலை 8 மணிக்கு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு வந்துவிடுவேன். இரவு 8 மணி வரை ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குகிறேன். தற்போது நோய் பாதித்தவர்களிடம் இருந்து நிறைய அழைப்புகள் வருகிறது. ஆம்புலன்ஸ் வசதி, இறந்தவர்களை வைக்க பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி என எல்லாவற்றிற்கும் சென்னையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குப் பிறகு நாங்கள் கொடுங்கையூர் செல்லும் பாதையில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள், வாகனம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து விட்டு தூங்கச் செல்கிறோம்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து?
அரசு மருத்துவமனைகளின் முன்பு காத்திருக்கும் ஆம்புலன்ஸ் ஏராளம். அவர்களுக்குப் பெரும்பாலும் ஆக்ஸிஜன் ஆம்புலன்ஸில் தான் வழங்கப்படுகிறது. சென்னையிலுள்ள மக்களுக்கு மருத்துவமனை, பெட் வசதி தேவை என்பதை விட முதல் தேவை ஆக்ஸிஜன் தான். அரசாங்கம் முழு அளவில் மக்களுக்கு உதவி வருகிறது. நாங்கள் செய்வது 0.1 சதவிகிதம் தான். தினமும் எங்கள் கண்முன்னே பல உயிர்கள் பறிபோகிறது. அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், ஒவ்வொரு உயிரும் துடிக்கும் போது கதறும் மருத்துவர்கள் என அன்றாடம் பார்க்க முடிகிறது. ஏராளமான உயிர்களைக் காவு வாங்கி விட்டது இந்தக் கொடிய கரோனா.
உங்களுக்கு ஆக்ஸிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?
எங்களிடம் 4 சிலிண்டர்கள் உள்ளன. அரசாங்கத்திற்கு ஆக்ஸிஜன் அனுப்பும் தொழிற்சாலை காவாங்கரையில் உள்ளது. அங்குள்ளவர்களிடம் சென்று நான் உயிர் காக்கும் சேவை செய்து வருவதைச் சொன்னேன். அவர்கள் தினமும் 4 சிலிண்டர்களை நிரப்பித் தருகிறார்கள். ஒரு சிலிண்டர் நிரப்ப 250 ரூபாய் ஆகிறது. ஒரு சிலிண்டர் (10லிட்டர் ஆக்ஸிஜன்) மூலம் 5 நபர்களுக்கு உதவலாம். நாள்தோறும் 25 முதல் 30 நபர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருகிறோம். என்னுடைய இந்த சேவைக்கு என் சகோதரி சுந்தரி மற்றும் எனது அறக்கட்டளையில் பணியாற்றும் நிர்வாகி அருள்ராஜ் போன்றவர்கள் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள்.
பிறருக்கு உதவி செய்யும் அளவு எங்களிடம் பண வசதியில்லை. ஆனாலும் இயன்றதை இந்த நேரத்தில் செய்து முடிந்தவரை உயிர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அனுதினமும் ஆக்ஸிஜன் ஆட்டோவுடன் சென்று உதவி வருகிறோம்.
இந்த கரோனா காலம் முடிவும் வரை அல்லது ஆக்ஸிஜன் தேவை சீராகும் வரை எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உயிர்களைக் காப்போம்'' என்கிறார் சீதா தேவி.
ஆட்டோ மூலம் இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் இது போன்ற சீதா தேவிகளால் கரோனாவில் இருந்து இந்த மனிதகுலம் மீளும் என்று நம்புவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.