காஞ்சிக்கு பின்னால்...!

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் தொன்மைச் சிறப்பு மிக்க நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது.
காஞ்சிக்கு பின்னால்...!
Updated on
3 min read

தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்களில் தொன்மைச் சிறப்பு மிக்க நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது.

"தொண்டை நாடு' சான்றோர் உடைத்து' எனப் புகழப்படுகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள காஞ்சி மாநகரை சங்க இலக்கியங்கள் "காஞ்சி கச்சி'  எனக் குறிப்பிடுகின்றன.

காஞ்சி கச்சி: "காஞ்சி' என்ற ஒரு வகை மரம் நிறைந்திருந்ததால் இவ்வூர் காஞ்சி எனப்பட்டது. குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப் பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ' (374 - 376) என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. மேலும் "திரையன்' என்ற அரசன் ஆட்சி செய்தது பற்றியும், அவனது விரும்தோம்பல் மற்றும் காஞ்சி நகரின் அமைப்பு சிறப்பு பற்றியும், புகழ்ந்து பேசுகிறது. இவ்வூரை "மூதூர்' என்றும், மன்னனை "கச்சியோன்' என்றுக் கூறிச் செல்கிறது. சங்க காலப்புலவர்கள் கச்சிப்பேட்டு என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டதைக் காண முடிகிறது. மேலும் நந்திக்கலம்பகம், மணிமேகலை, கந்தபுராணம், ஏகாம்பரேசுவரர் உலா, காஞ்சிபுராணம் பெரியபுராணம் போன்ற பல இலக்கியங்கள் காஞ்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன எனலாம்.

பெயர்கள் :

இவ்வூர் காஞ்சி, காஞ்சிபுரம், காஞ்சி மாநகர், கச்சியம்பதி, சிவகாஞ்சி, சின்னக்காஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனக்காஞ்சி, புத்தக்காஞ்சி, திருஅத்தியூர், பல்லவேந்திரபுரி, காமபீடம், காமக்கோட்டம், சிவபுரம், பிரமபுரம், ஆதிபீடம், சத்யவிரதசேத்திரம் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

நகரேஷ காஞ்சி : 

"நகரங்களில் சிறந்தது காஞ்சி' என்று மகாகவி காளிதாசர் சிறப்பித்துப் போற்றுகின்றார். இந்நகரம் மயில்போன்ற வடிவாக அமைக்கப்பட்டது (அணிமயிலே போன்றதே பொற்றேரான் கச்சிப்பொலிவு) என்று தண்டியலங்காரம் பாடல் குறிப்பிடுகிறது.

கல்வியில் கரையிலாத காஞ்சி: 

தொன்மையான வரலாற்றினையும், கல்விச் சிறப்பினையும், கலைச்சிறப்பினையும் கொண்ட நகரமாக திகழ்ந்தது. பண்டைய இந்தியாவில் மூன்று பெரும் பல்கலைக்கழகங்கள் சிறப்புடன் விளங்கின. அவை, காஞ்சி, தட்சசீலம், நாளந்தா. தெற்கும் வடக்கும் சங்கமிக்கும் நகரமாக காஞ்சி விளங்கியது. காஞ்சியில் இருந்த கடிகா (கல்விச்சாலை) மற்றும் நூலகம் பற்றி சீன யாத்ரீகர் யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்ட கடிகைகள் இருந்தன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் மயூரசர்மன் என்ற கதம்ப அரசன் காஞ்சி கடிகையில் சமஸ்கிருதம் பயில வந்தான் என்பதையும் அறியமுடிகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது திருப்பதிகத்தில் "கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகர்' என்று சிறப்பித்துப் போற்றுவதைக் காணலாம். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் சரசுவதி பண்டாரம் எனப்படும் நூலகம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இருந்ததையும் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது.

வரலாற்றுச் சிறப்பு : 

காஞ்சி நகரின் வரலாறு சங்க கால சோழருடன் தொடர்பு கொண்டு விளங்குகிறது. கரிகால் சோழன் சோழநாட்டிலிருந்து வேளாளர்களை குடியேற்றி தொண்டை மண்டலத்தை 24 கோட்டங்களாகவும் 79 நாடுகளாகவும் பிரித்தான் என்பதை "தொண்டைமண்டலச்சதகம்' குறிப்பிடுகிறது. பல்லவ மன்னர்கள் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையில் சுமார் 600 ஆண்டுகள் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். மேலும் சோழர்கள், பாண்டியர்கள்,சம்புவராயர்கள், விஜயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் சிறப்புற்றிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. மேலும் காஞ்சிபுரத்தின் வரலாற்றினை அறிந்து கொள்ள பள்ளன்கோயில் செப்பேடு மற்றும் கூரம்,உதயேந்திரம்,, காசாக்குடி,புல்லூர், தண்டந்தோட்டம், பட்டமங்கலம், வேலூர்பாளையம், உத்தமசோழனின் அருங்காட்சியகச் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் தரும் செய்திகள் வரலாற்று ஆதாரமாக விளங்குகின்றன.

அகழ்வாராய்ச்சிகள்: 

காஞ்சிபுரத்தின் தொன்மைச் சிறப்பினை அறிந்து கொள்ள 1953-ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு கால கட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசு, தமிழக அரசு தொல்லியல் துறைகள், சென்னைப் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆகிய நிறுவனங்கள் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பல்லவமேடு, சங்கரமடம் வளாகம், ஏகாம்பரேசுவரர் கோயில் அருகில், காமாட்சி அம்மன்  - வரதராஜப்பெருமாள் கோயில் போன்ற பல இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த பானைஓடுகள், ரோமானிய நாட்டு பானை ஓடுகள், கூம்புவடிவ ஜாடிகள், சாதவாகன அரசர் செப்புக்காசுகள், காசு அச்சுகள், சோழர்கால காசுகள், வட்டவடிவமான புத்த ஸ்தூபத்தின் பகுதிகள் போன்ற தொன்மை சிறப்புமிக்க சான்றுகள் கிடைத்தன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள் (கார்பன் 14) காலக்கணிப்புப்படி கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டுவரை தொடர்ச்சியான வரலாற்றினை கொண்டு காஞ்சி திகழ்ந்ததை அறிய முடிகிறது. மேலும் ரோமானிய நாட்டுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பினையும் அறிய முடிந்தது.

பாலாற்றின் வழியே கடல் வாணிகம் மாமல்லை துறைமுகப்பட்டினத்திலிருந்து மேற்கொண்டனர். இதற்கு சான்றாக மாமல்லையில் சான்றுகளும், பாலாறு கடலோடு கலக்கும் இடத்தில் உள்ள வசவசமுத்திரம் என்ற ஊரிலும் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள கட்டவாக்கம், ஜீனக்காஞ்சி, வேகவதி ஆற்றங்கரை, பிள்ளையார்பாளையம், புத்தர் அகரம், சிங்கடிவாக்கம் போன்ற இடங்களிலும் அண்மையில் காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சரசுவதி விஸ்வ மகாவித்யாலயம் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு பல அரிய சான்றுகளை வெளிக் கொணர்ந்துள்ளது.

புத்த காஞ்சி:

காஞ்சிபுரத்தில் பெளத்தசமயமும், சமணசமயமும் சிறப்பாக இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் வட்டவடிவமான புத்த ஸ்தூபத்தின் பகுதிகள் வெளிப்பட்டன. அதன் அருகில் கிடைத்த பானை ஓட்டில் "புதலதிச' என்ற பெயர் பொறிப்பு காணப்பட்டது. இது அங்கிருந்த ஒரு பெளத்த துறவியின் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. காஞ்சிபுரத்தில் பெளத்தப் பள்ளிகள் - ஸ்தூபங்கள் இருந்ததைப் பார்த்ததாக கி.பி. 640-இல் இந்தியாவிற்கு வந்த சீன யாத்ரீகர் யுவான் சுவாங் எழுதிய குறிப்பினை அகழ்வாராய்ச்சிகள் மெய்ப்பிக்கின்றன. புகழ்மிக்க தர்மபாலர், பெளத்த சமயத் தத்துவங்களை எழுதிய போதி தர்மர் காஞ்சியை சேர்ந்தவர்கள் என்பதை அறியும் பொழுது பெருமையாக உள்ளது. பெளத்த சமயம் காஞ்சிபுரத்தில் சிறப்பாக இருந்ததற்கு அடையாளமாக புத்தர் சிற்பங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.

ஜீனக்காஞ்சி : 

சமண சமயமும் இங்கு சிறந்திருந்தது. ஜீனக்காஞ்சி என்று இப்பகுதியை அழைக்கின்றனர். திருப்பருத்திக் குன்றத்தில் சமணர்கள் வாழ்ந்த தலம் உள்ளது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து சமணசமய முக்கியத்துவம் வாய்ந்தத் தலமாக திகழ்கிறது.

இங்கு வழிபாட்டில் இருக்கும் திரைலோக்கியநாதர் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. நான்கு வித்யா ஸ்தானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு சந்திரகீர்த்தி, மல்லசேனா, புஷ்பசேனா, அனந்தவீரவாமணர் போன்ற சமணப் பெரியோர்கள் வாழ்ந்துள்ளனர். திரைலோக்கியநாதர் திருக்கோயில் முன் பகுதியில் உள்ள சங்கீத மண்டபத்தில் விதானப்பகுதியில் காணப்படும் விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த அழகிய ஓவியங்கள் காணப்படுகின்றன. வர்த்தமான மகாவீரர் வரலாறு அழகிய ஓவியமாகக் இங்கு காணப்படுவது சிறப்பாகும். இக்கோயிலின் அருகிலேயே உள்ள சந்திரப்ரபா தீர்த்தங்கரர் கோயில் பல்லவ மன்னன் ராஜசிம்மன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.

சிவகாஞ்சி :

காஞ்சிபுரம் கோயில் நகரமாகத் திகழ்கிறது. பாடல் பெற்ற தலங்களான ஏகாம்பரேசுவரர் கோயில், கச்சி மேற்றளி, கச்சிக்காரோணம், கச்சி அநேகதங்காவதம், ஒணகாந்தன் தளி, கைலாசநாதர் கோயில், கச்சபேசுவரர் கோயில், திரிபுராந்தகம், சுரஹரேசுவரர், தான்தோன்றீசுவரம், வழக்கறுத்தீசுவரர், சொக்கீசர் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புடனும், வழிபாட்டுச் சிறப்புடனும், கலையழகு மிக்க எண்ணற்ற கோயில்கள் காஞ்சிமா நகரின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன. ஆன்மிகச் சிறப்பும், வரலாற்றுச் சிறப்பும் மிக்க காஞ்சிக் கோயில்களைக் கண்டு மகிழ்வோம்! போற்றுவோம்!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com