வானில் உலக சாதனை...!

இந்திய விமானப் படையில் சரித்திரத்தில் இதுவரை  நிகழ்ந்திராத  ஓர் அபூர்வ நிகழ்வு  நடந்துள்ளது.
வானில் உலக சாதனை...!
Updated on
1 min read

இந்திய விமானப் படையில் சரித்திரத்தில் இதுவரை நிகழ்ந்திராத ஓர் அபூர்வ நிகழ்வு நடந்துள்ளது. தந்தை, மகன் ஒரே விமானத்தில் போர் விமானிகளாகப் பறந்த சம்பவங்கள் பலமுறை நடந்துள்ள நிலையில், முதன்முதலாக தந்தையும் மகளும் ஒரே போர் விமானத்தில் பறந்து வானில்சாகசம் செய்த நிகழ்ச்சிதான் அது!

இந்திய விமானப் படையில் ஏர் கம்மோடராக (போர் விமானி) சேவை புரிபவர் சஞ்சய். அவரது மகள் அனன்யா ஷர்மா விமானப் படையில் "பறக்கும் அதிகாரி'யாக பணி புரிபவர். ஹாக்-132 ரக விமானத்தில் இருவரும் அண்மையில் ஒன்றாகப் பறந்து சாதனைபடைத்தனர்.

இது எப்படி நடந்தது என்பது குறித்து சஞ்சய் விளக்குகிறார்:

""அனன்யா நான் சீருடை அணிந்து விமானப் படைக்குச் சென்று வருவதை பார்த்து, போர் விமானியாக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவள். "நானும் விமானப் படையில் சேர்வேன். அப்பா மாதிரி போர் விமானி ஆவேன்' என்று குழந்தைப் பருவத்தில் அடிக்கடி சொல்வாள்.

ஆனால் அப்போது பெண்களை விமானப் படையில் சேர்த்துக் கொள்ள முடியாத நிலை. அதைச் சொன்னால் அனன்யா உற்சாகம் இழந்து போவாள் என்பதற்காகச் சொல்ல மாட்டேன். "நிச்சயமா நீ போர் விமானி ஆவாய்' என்று உற்சாகம் கொடுப்பேன்.

அதிர்ஷ்டவசமாக சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்களையும் விமானியாக தேர்வு செய்யலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்தது.

மின்னணுவியல், தகவல் தொடர்பியலில் பி.டெக் பட்டம் பெற்ற அனன்யா 2016 -இல் இந்திய விமானப்படையில் சேர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பரில் போர் விமானியாக உயர்ந்திருக்கிறார். பயிற்சி போர் விமானியாக பொறுப்பேற்றதும் என் முன் வந்து நின்று சல்யூட் அடித்து வணங்கினாள். நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

இன்று இந்திய விமானப்படையில் 15 போர் பெண் விமானிகள் உள்ளனர். இதுவே இந்திய விமானப் படையின் ஒரு சாதனைதான்..!'' என்றார்.

""போர் விமானியாக அப்பாவுக்கு 30 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. அப்பா போல் போர் விமானியாகி வானில் பறக்க வேண்டும் என்பதற்காக பொருத்தமான மின்னணுவியல், தகவல் தொடர்பியலில் பி.டெக் பட்டப் படிப்பை படித்தேன்.

2016-இல் விமானப்படைக்கு தேர்வு பெற்று கர்நாடகாவின் பிடார் விமானப் படைத் தளத்தில் விமானியாகப் பயிற்சி பெற்று வருகிறேன். அடுத்த ஜனவரி மாதம் அனைத்துப் பயிற்சிகளும் நிறைவடையும். அதற்குப் பிறகு எல்லா ரக போர் விமானங்களையும் இயக்க என்னால் முடியும்.

எனது தாயகத்தின் மண்ணைக் காக்க வானத்தை வசப்படுத்துவேன்..." என்கிறார் அனன்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com