வாத்தியங்கள் முழங்க...
திருக்கோயில் வழிபாடு "சங்கு' முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. திருக்கோயில் கோபுர வாயிலில் சங்கநிதி, பத்மநிதி ஆகிய சிற்ப வடிவங்களை காணலாம்.


திருக்கோயில் வழிபாடு "சங்கு' முக்கிய இடம் பெற்று விளங்குகிறது. திருக்கோயில் கோபுர வாயிலில் சங்கநிதி, பத்மநிதி ஆகிய சிற்ப வடிவங்களை காணலாம். செல்வ வளம் அளிக்கும் இவை தாமரைகளை தன் கரங்களில் தாங்கியுள்ளது போன்றும் சங்குகளை கரங்களில் தாங்கியுள்ளது போன்றும் காணப்படும். திருமால் தனது இடது கரத்தில் சங்கினை தாங்கிய கோலத்தில் காட்சி தருகிறார். "பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து' என ஆண்டாள் திருப்பாவையில் போற்றுகின்றாள். சிவாலயங்களில் நடைபெறும் "சங்காபிஷேகம்" வழிபாடு சிறப்பு மிக்கதாக விளங்குகிறது.
சங்கொலி திருக்கோயில் வழிபாட்டில் இறைவனுக்கு விருப்பமான உடுக்கை, குடமுழா, கொக்கரை, தக்கை, தண்ணுமை, தமருகம், தாளம், பறை, மணி, முழவு, யாழ், வீணை, சங்கொலி போன்ற இசைக்கருவிகள் திருமுறைகளில் காணப்படுகின்றன. திருக்கோயில் வழிபாட்டின் போது வாசிக்கப்பட்ட "சங்கொலி" திருமுறைகளில் சிறப்பாக போற்றப்படுகின்றது.
"பறையோடு சங்கம் இயம்பபல்கொடி சேர் நெடுமாடம்' எனத் திருக்கடம்பூர் பதிகத்திலும், "சங்கு அரவப் பறையின் ஒலி அவை சார்ந்து எழ' என்று திருப்பாதிரிப்புலியூர் பதிகத்திலும், "ஆடும் பறை சங்கு ஒலியோடு அழகு ஆக' என்று திருநாலூர் மயானம் பதிகத்திலும் காண்கிறோம்.
இறை வழிபாட்டின் போது சங்கொலி எழுப்ப தானம் அளிக்கப்பட்டதாகவும், பணி செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன. காலை முதல் இரவு வரை அனைத்து வழிபாட்டின் போதும் சங்கொலி வாசிக்கப்பட்டது. சங்கொலி எழுப்பும் இசை வாணர்களுக்கு நிலங்கள் தானம் அளிக்கப்பட்டதை மேல் சேவூர் (செஞ்சி அருகில்) திருமழபாடி, திருச்சோற்றுத்துறை போன்ற பல கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது.
முத்திரை சங்குதஞ்சைப் பெருவுடையார் கோயிலில் வாசிக்கப்பட்ட சங்கு கல்வெட்டுகளில் "முத்திரை சங்கு' எனக் குறிக்கப்படுகிறது. இக்கோயிலில் சங்கொலி எழுப்ப "தயிலன் விக்கியண்ணன் சூற்றிநாதன், பொற்காளி தொண்டயன்' என்ற மூன்று பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
திருக்கோயில்களுக்கு சங்குகள் - இசை ஒலி எழுப்புவதற்காக தானம் அளிக்கப்பட்டுள்ளது. சங்கின் மேற்புறத்தில் யார் தானமாக அளித்தார் என்ற செய்தி எழுத்து பொறிப்பாக காணப்படுகிறது. நன்னிலம் அருகில் திருவிடைவாசல் கோயிலில் காணப்பட்ட சங்கு ஒன்றில் "மாகோன் கொடுத்த சங்கு பொன் கட்டியது' என்ற குறிப்பு காணப்படுகிறது.
தங்கத்தினால் அழகுற வேலைப்பாடு செய்யப்பட்ட சங்கினை மாகோன் என்பவன் அளித்தான் என்பதை அறிய முடிகிறது. மற்றொரு சங்கில் "ஆதிச்சியார் மகள் உமையன்னை இட்ட சங்கு: என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது.
வேலூர் அருகே கழிஞ்சூர் சுவர்ணபுரீஸ்வரர் கோயிலில் கிடைத்த சங்கினில் "இறையாநீ சுவரமுடையார்க்கு நகருடையான் செய்ய கோவன் இட்ட சங்கு' என்ற எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. இதே போன்று திருவதிகை கோயிலிலும் "திருச்சிராப்பள்ளி உடையார்' என்ற எழுத்து பொறிப்புடன் சங்கு ஒன்று காணப்படுகிறது. தொன்றுதொட்டு ஆலயங்களில் வழிபாட்டின்போது சங்கு ஒலி எழுப்பப்பட்டு வந்ததற்கு இவை சான்றாக அமைந்துள்ளன.
"புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ' (பாடல் 6) "தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்' (பாடல் 14) "இயம்பும் வெண்சங்கெங்கும் குருகுகள் இயம்பின இயம்பின சங்க' என்ற திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களினால் சங்கு ஒலி திருக்கோயில்களில் எழுப்பப்பட்டதை அறிய முடிகிறது.
திருவாரூரில் சங்கு வாத்தியத்தை வாசிப்பதில் சிறந்த கலைஞர் இருந்தார் என்பதையும் அறிகிறோம். இன்றும் பல கோயில்களில் இறை வழிபாட்டின்போது சங்கு வாத்தியம் வாசிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம் அருகே மாகறல் என்ற திருத்தலம் அமைந்துள்ளது. அத்தலத்தை ஞானசம்பந்தப் பெருமான் போற்றியுள்ளார். ஒரு பாடலில்,
"காலையொடு துந்துபிகள் சங்கு குழல்
யாழ் முழவு காமருவு சீர்
மாலை வழிபாடு செய்து மாதவர்கள்
ஏத்தி மகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணிய தன் மேலொர் சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறு புனை வான் அடியை
யேத்த வினை பறையும் உடனே‘
எனக் கூறுகின்றார்.
காலை - மாலை ஆகிய இரு வேளைகளிலும் துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு ஆகிய வாத்தியங்கள் முழங்க மாகறல் இறைவனை வழிபட நம் வினையாவும் விரைவில் விலகிச் செல்லும் என்று கூறுகின்றார். நம் தீவினைகள் அகல சங்கு ஒலியோடு இறைவனை வழிபடுவோம்.
- கி. ஸ்ரீதரன்,
தொல்லியல்துறை (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...