காட்டேரி பூங்கா...

நீலகிரியின் அழகைப் பருகச் செல்லும் வழியில் மிக அற்புதமான சொர்க்கமாகத் திகழ்கிறது குன்னூர் காட்டேரி பூங்கா.
காட்டேரி பூங்கா...
Published on
Updated on
1 min read


நீலகிரியின் அழகைப் பருகச் செல்லும் வழியில் மிக அற்புதமான சொர்க்கமாகத் திகழ்கிறது குன்னூர் காட்டேரி பூங்கா.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பாதையில் பெரும்பாலானவர்களுக்குப் பரிச்சயமில்லாதது காட்டேரி பூங்கா. உதகை மலைப்பாதையில் பரலியாறுக்கும் குன்னூருக்கும் இடையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. குன்னூரின் நகர நெரிசல்களில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் 5.5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது காட்டேரி பூங்கா.

சுற்றுலாப் பயணிகள், வண்ணக் கனவுகளுடன் எதிர்காலத்தைப் பற்றிய கவலையில்லாமல் தங்கள் வாழ்வைப் புதிதாகத் துவங்கும் புதுமணத் தம்பதிகள் இங்கு வந்து புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி தங்கள் நினைவை என்றும் இனிமையாக்கப் பதிவு செய்து கொள்கின்றனர்.

உதகை மலை ரயில் பாதையில் ரண்ணிமேடு நிறுத்தம் அருகே அழகுற வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்கா, தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 வரை சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

பூங்காவுக்கு இடையில் ரண்ணிமேடு ரயில் நிறுத்தம் அருகே குகைக்குள் செல்கிறது மலை ரயில். இதில் பயணிப்போருக்கு மறக்க முடியாத பயணமாக இருக்கும்.

கண்ணைக் கவரும் பல வண்ண மலர்கள், பச்சைக் கம்பளம் விரித்தாற்போன்ற பசுமையான புல்வெளிகள், நகரத்தின் சந்தடியில் சாக்கடைக் கழிவுகளையே பார்த்துப் பழகிப் போனவர்களுக்கு கழிவுகள் இல்லாமல் சுத்தமான தண்ணீர் செல்லும் ஓடைகள், மனதுக்கு இதமான ஓடைகளின் சத்தம், எங்கு பார்த்தாலும் பசுமையாய்த் தெரியும் தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை அழகு இப்பகுதியில் கொட்டிக் கிடக்கிறது.

உயர்ந்த இடத்தில் காத்திருக்கும் நீல வானம், அதனோடு போட்டி போட்டு மறைக்கும் பசுமையான உயர்ந்த மலைகள், இவற்றுக்கு இடையில் காதலனை அவசரமாகப் பார்க்கச் செல்வதைப் போல விரைந்து ஓடும் மேகக் கூட்டங்கள் - இவை இங்கு கண்கொள்ளாக் காட்சிகள். மழைக் காலங்களில் முகவரியைத் தொலைத்தவர்களைப் போல அலையும் முகிலினங்களைப் பார்க்க வருவோர் அதிகம். பூங்காவின் நடுவில் பலர் இளைப்பாற அழகிய கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படும் காட்டேரி பூங்காவில் நம்மை வரவேற்க இயற்கை அன்னையின் தவப்புதல்வர்களான மந்திகளுக்கும் பஞ்சமில்லை. அவற்றின் சுட்டித் தனமும் அனைவரையும் கவரும்..

உதகை மலைப்பாதை துவங்கும் கல்லாறில் பழப்பண்ணையைப் பார்த்தவாறு தொடங்கும் இப்பயணத்தில் அதிகம் அறியப்படாத குன்னூர் காட்டேரி பூங்காவைப் பார்க்க கிளம்பிட்டீங்களா?

படம்: எஸ்.பூங்கொடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com