
வட கர்நாடகத்தில் உள்ள கொப்பல், ஹரிகார், நானபென்னூர், ஹவேரி, பெல்லாரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் பல தலைமுறைகளாக "ஹாகலு வேஷா' எனும் கலைஞர்கள் வசித்துவருகின்றனர். "புடகாஜன்கனா' என இவர்களை அழைக்கின்றனர்.
கிராமம், கிராமமாகப் பயணிக்கும் இவர்கள் நாடோடிகளாகவே குடும்பமாகவே இடம்பெயர்கின்றனர். இவர்களது குழந்தைகளின் படிப்பும் இரண்டாம்பட்சம்தான். ஒதுக்குப்புறமான இடத்தில் தற்காலிகக் கொட்டகைகளை அமைத்து ஓரிரு வாரங்கள் தங்குகின்றனர்.
தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து, சுவாமி கும்பிட்டுவிட்டு மேக்கப் போட்டுக் கொள்வர். பின்னர், அவர்கள் மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று, தங்களது கலைகளை காட்சிகளாக வெளிப்படுத்துகின்றனர். காலை, மாலை, இரவு என விடிய விடிய இவர்கள் நேரம், காலம் பாராது இயங்குகின்றனர்.
மகாபாரதம், ராமாயணம், இதிகாசங்கள், புராணங்கள் என பலவற்றிலிருந்து கதைகளை எடுத்து அரங்கேற்றம் செய்கின்றனர். ஜைனர்களும் இவர்களை ஆதரிக்கின்றனர். காட்சிகளை அரங்கேற்றிவிட்டு, மேக்கப்பை கலைத்துவிட்டு உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். இவர்கள் அடிக்கடி மேக்கப் போடுவதால், தோல் தொடர்பான பிரச்னைகள் அதிகம் உண்டு. ஆனால், அதை இவர்கள் பொருள்படுத்துவதில்லை.
"ராம, லட்சுமணர் சீதையைத் தேடி வரும்போது அனுமனை சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு, வாலியை கொல்ல சுக்ரீவனுக்கு உதவி, சீதையைத் தேடித் தர சுக்ரீவன் முன்வருதல் ...' என்று பல காட்சிகளை இவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டுகின்றனர். ராமாயணக் காட்சிகளை மட்டுமல்ல; மகாபாரதக் காட்சிகள் கூட தத்ரூபமாய் நடித்துக் காட்டி, மக்களைக் கவர்கின்றனர்.
இந்தக் காட்சிகளில் பெண்கள் நடிக்க முன்வராததால், பெண் வேடங்களை ஆண்களே ஏற்று நடிக்கின்றனர். ஒரு கிராமத்துக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இவர்கள் செல்வர். மாலையில் நிகழ்ச்சிகள் இல்லையென்றால், பொழுதுபோக்காமல் அடுத்த நாள் நிகழ்ச்சிக்காக இவர்கள் ஒத்திகை மேற்கொள்வார்கள்.
நிகழ்ச்சியின் கடைசி நாளன்று மட்டுமே பணம் வாங்குவர். பணம், தானியங்கள், பொருள்கள், ஆடுகள், மாடுகள் என எதை அளித்தாலும், ஏற்றுக் கொள்வர். அதை வைத்தே இவர்கள் உணவுக்குப் பயன்படுத்திக் கொண்டு, பயணங்களையும் மேற்கொள்கின்றனர்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாடிய பாடல்கள், காட்சிகளை இவர்கள் தங்களது நிகழ்ச்சிகளில் பயன்படுத்தத் தவறுவதில்லை. அதை நடித்துக் காட்டி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுவிடுகின்றனர்.இவர்களுக்கு சங்கீத வாத்தியங்கள் பலவற்றை இசைக்கத் தெரியும். ஆகவே, நிகழ்ச்சிகள் இல்லாத நாள்களில் மற்ற கலைஞர்களுடன் சேர்ந்து கொள்வர்.
ஆண்டுதோறும் இவர்கள் மொகரம் நிகழ்ச்சி நாள்களின்போது, கொப்பல் மாவட்டத்தில் உள்ள குத்ரிமோதி என்ற இடத்தில் சந்திக்கின்றனர். எதற்கு தெரியுமா? திருமணம் செய்துகொள்ளவும், தங்களுக்கு இடையேயான சச்சரவு
களைப் பேசித் தீர்த்துக் கொள்ளவும்தான்!
இதுகுறித்து அந்தக் கலைஞர்கள் சிலரிடம் பேசியபோது:
""மேக்கப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டதால், அதற்கேற்ப ஊதியம் கிடைப்பதில்லை. இருந்தாலும் பராம்பரியக் கலையை விட்டு விடாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.
நிகழ்ச்சிகளில் சத்தியம், நீதி, நேர்மை பற்றியே பேசி நடிக்கிறோம் என்பதால், நிஜ வாழ்க்கையிலும் இவற்றை கடைபிடிக்கிறோம்.
ஆந்திர எல்லையொட்டிய கிராமங்களில் நாங்கள் வசிப்பதால், தெலுங்கு மொழியும் நன்றாக அறிவோம். ஆகவே, ஆந்திர கிராமங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மகாராஷ்டிர எல்லையோர கிராமங்களில் கூட நிகழ்ச்சிகளுக்காக அழைக்கின்றனர். ஏன் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளுக்கும் செல்வதுண்டு'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.