திரும்பிப் பார்க்க வைக்கும் "சுடுகளிமண்' சிற்பங்கள்!

கம்பீரமாக பைரவ வாகனத்தில் வீற்றிருக்கும் பெரியசாமி, காண்போரைக் கவர்ந்திழுக்கும் அய்யனார் குதிரைகள்,  வணங்கியவருக்கு  அருள்புரியும் நடன விநாயகர்... 
திரும்பிப் பார்க்க வைக்கும் "சுடுகளிமண்' சிற்பங்கள்!
Published on
Updated on
2 min read

கம்பீரமாக பைரவ வாகனத்தில் வீற்றிருக்கும் பெரியசாமி, காண்போரைக் கவர்ந்திழுக்கும் அய்யனார் குதிரைகள், வணங்கியவருக்கு அருள்புரியும் நடன விநாயகர்...

எனப் பார்ப்போரின் புருவத்தை உயரச்செய்கிறது அந்தச் சுடுகளிமண் சிற்பங்கள்!

புதுச்சேரி கணுவாய்ப்பேட்டையைச் சேர்ந்த 55 வயதான முனுசாமியின் கைகள் வடித்த களிமண் சிற்பங்களே உலக அளவில் காண்போரை ஆச்சரியப்பட வைக்கிறது.

பத்மஸ்ரீ உள்ளிட்ட ஏழு தேசிய விருதுகள், யுனெஸ்கோ விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகள், புதுவை மாநில அரசின் விருதுகள் என தான் பெற்ற விருதுகளை எல்லாம் பெருமைப்படுத்தும் வகையில் தொடர்ந்து களிமண்ணில் கடவுள் வடிவம் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்திவருகிறார் இந்தக் கிராமத்துக் கலைஞர்.

திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றோரம் அமைந்த குடிலிலில் சுடுகளிமண் குதிரை, குல சாமி சிலைகள் என உலக சாதனைக்கான சிலைகளை வடிவமைத்துக் கொண்டிருந்த பத்மஸ்ரீ முனுசாமியைச் சந்தித்துப் பேசியபோது:

"எனது அப்பா கிருஷ்ணபக்தர். அம்மா மங்கலட்சுமி. இருவருமே மண்பாண்டத் தொழிலாளிகள். அவர்களது 12 குழந்தைகளில் நான் கடைக்குட்டி. எனக்கு 6 சகோதரிகள். 5 சகோதரர்கள். அப்பா, அம்மா இருவருமே சுடுகளிமண் சிற்பத்துக்காக புதுவை அரசு விருதுகளைப் பெற்றவர்கள்தான்.

வருவாய் இல்லாத நிலையிலும் கூட என்னை எட்டாம் வகுப்பு வரை படிக்கவைத்தனர்.

சிறு வயது முதலே களிமண்ணில் சிற்பங்களையும், சிலைகளையும் வடிவமைக்கத் தொடங்கிவிட்டேன். 33 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் என்னால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் ஓரடி அய்யனார் குதிரை சிலை முதல் 20 அடி உயரத்துக்கும் மேலான சிலை வரை அடக்கம்.

கிராமத்து தெய்வங்களான அய்யனார், மதுரை வீரன், முனீஸ்வரன், பெரியசாமி,அம்மன் திருவுருவங்கள் என பாமரர் வணங்கும் 108 குல தெய்வங்களையும், அவர்களுக்கான குதிரை, யானை, காளை ஆகிய வாகனங்களையும் வடிவமைத்துள்ளேன்.

குழந்தைகள் மகிழ டைனோசர் உள்ளிட்ட பூங்கா சிற்பங்களையும் புதுமையாக வடிவமைத்துள்ளேன்.

தமிழக, ராஜஸ்தான் கலை வடிவத்தையும் இணைத்து உருவாக்கும் எனது சுடுமண் சிற்பங்களிலும், சிலைகளிலும் நுண்ணிய கலை வேலைப்பாடுகள் இருப்பதுதான் எனது கலையின் தனிச்சிறப்பு.

புதுவை மாநிலத்தில் தெருவோரக் கோயில்கள் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரையில் எனது சுடுகளிமண் சிற்பங்கள், சுவாமி சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என 12 நாடுகளின் அருங்காட்சியங்களில் எனது சுடுகளிமண் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புதுவை சுடுகளிமண் சிற்பத்துக்கு "புவிசார் குறியீடு' பெறப்பட்டுள்ளது. அந்தக் கலையை அழியாமல் காப்பதற்காகவே இதுவரை13 வெளிநாடுகளுக்குச் சென்று களிமண்ணில் உருவம் வடிக்கும் பயிற்சிகளையும் அளித்துள்ளேன்.

உள்ளூரில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் பயிற்சியையும் அளித்துவருகிறேன். குழந்தைகள் சேமிப்புக்கான உண்டியல் முதல் திருவள்ளுவர் சிலை வரை களிமண் வடிவங்களை வடிப்பதன் மூலம் நூற்றுக்கணக்கான பெண்கள், வேலைவாய்ப்பைப் பெற்று வருவாய் ஈட்டவும் வழி ஏற்படுத்தியுள்ளேன்.

சுடுகளிமண் சிற்பப் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்த முடியும்.

"ஒரு கிராமம், ஒரு கைவினைப் பொருள்' என்ற திட்டத்தை புதுவை, தமிழக அரசுகள் செயல்படுத்துவதன் மூலம் சுடுகளிமண் சிலைகள், காகிதக்கூழ் வடிவங்கள், உலோகச்சிற்பங்கள், பனையோலை பொருள்கள், கத்தாடி வடிவங்கள், கோரைப்புல் பாய்கள், கடல் சிப்பி கலைப் பொருள்கள், கதர்த்துணி பைகள், தஞ்சை ஓவியங்கள் ஆகிய நமது பாரம்பரியப் பண்பாட்டு கலைகளையும் பாதுகாக்க முடியும். அதன்மூலம் அந்தந்தப் பகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம்.

புதுச்சேரி நகரில் அருங்காட்சியகம் அமைக்க அரசு இடம் அளிக்க வேண்டும். சுடுகளிமண் சிற்பம், சிலைகளுக்கான பட்டயப் படிப்பு மையத்தையும் முதன்முதலாகப் புதுச்சேரியில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்'' என்றார் முனுசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com