நாம் இப்போது ஒரு கடிதத்தை 'போஸ்ட்' செய்ய வேண்டும் என்றால் அதன் மீது அதற்குரிய தபால் தலை வாங்கி ஒட்டுகிறோமல்லவா? ஆனால், நூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தபால் தலைகளே எந்த நாட்டிலும் இருக்கவில்லை. ஆனால், தபால் அலுவலகங்கள் பரவலாக இயங்கி வந்தன. பொதுமக்கள் கடிதங்களைத் தபால் தலை ஒட்டாமலே தபால் பெட்டியில் போட்டு விடுவார்கள்.
கடிதம் போக வேண்டிய ஊருக்குப் போனதும் தபால்காரர் அதை எடுத்துக் கொண்டு போய் விலாசதாரரிடம் கொடுக்கும் போது உறைக்குள்ளே வைத்திருக்கும் காகிதத்திற்கு ஏற்ப கட்டணத்தை அவரிடமிருந்து வசூலிப்பார்.
பிரிட்டனில் உள்ள ஒரு கிராமத்துக்கு தபால் பட்டுவாடா செய்ய, மேரி என்ற பெண்ணின் வீட்டுக்குத் தபால்காரர் வந்த போது, அங்கே ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும் இருந்தார்.
மேரி ஓடிப் போய் வெகு ஆவலுடன் தனக்கு வந்த கடிதத்தை வாங்கிக் கொண்டாள். தபால்காரர் அதற்குரிய கட்டணத்தை மேரியிடம் கேட்டார். ஆனால் மேரி, அக்கடித்தை வாங்கித் திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்து விட்டு பெரு மூச்சுடன் அக்கடிதத்தைப் தபால்காரரிடமே திருப்பிக் கொடுத்து, '' ஐயா இந்தக் கடிதத்துக்கான கட்டணம் கொடுக்க என்னிடம் காசு இல்லை. மன்னியுங்கள்!'' என்றாள் சற்று வருத்தத்தோடு.
உடனே அருகில் இருந்த ஆசிரியர், '' ஏன் மேரி ! தபால் கட்டணம் தர உன்னிடம் காசு இல்லையா? பரவாயில்லை. அதை நான் தருகிறேன். கடிதத்தைப் பெற்றுக் கொள்'' என்று கூறியபடியே பணத்தை எடுத்தார்.
'
'வேண்டாம் ஐயா ! நீங்கள் கொடுக்க வேண்டாம். எதற்காக வீண் செலவு செய்கிறீர்கள் !'' என்று கூறிய மேரி அவர் பணம் கொடுப்பதை தடுத்தாள்.
''பரவாயில்லையம்மா !'' என்று கூறியபடியே அந்த ஆசிரியர் கடிதத்துக்குரிய கட்டணத்தைக் கொடுத்து விட்டு கடிதத்தை வாங்கி அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்.
தபால்காரர் போனதும், மேரி அந்த ஆசிரியரைப் பார்த்து வருத்தத்துடன், ''அனாவசியமாகப் பணத்தை இழந்து விட்டீர்கள்? '' இந்தக் கடித உறைக்குள் உள்ள காகிததத்தில் ஒன்றுமே இல்லை. வெற்றுக் காகிதம் மட்டும் இருக்கிறது பாருங்கள் ! ‘‘ என்று கூறிய படியே உறையைக் கிழித்து உள்ளே இருந்த ஒரு வெற்றுக் காகிதத்தை எடுத்துக் காண்பித்தாள்.
திடுக்கிட்ட ஆசிரியர் உறைக்குள் பார்த்தார். அந்த வெற்றிக் காகிதத்தைத் திருப்பி திருப்பிப் பார்த்தார். அதில் எந்த ஒரு செய்தியும் இல்லை. அந்த கடித உறையின் மீது மட்டும் ஏதேதோ சில குறியீடுகள் மட்டும் காணப்பட்டது. ஆச்சரியத்துடன் அவர் மேரியைப் பார்க்க, அவள் '' ஐயா ! என் கணவர் உள்பட இக்கிராமத்தில் வசிக்கும் ஏராளமானவர்கள் ராணுவத்தில் சிப்பாயாக வேலை பார்க்கிறார்கள். கடிதம் வாங்கி எழுதவோ அனுப்பவோ எங்களிடம் பணம் கிடையாது. எனவே இக்கிராமத்துப் பெண்கள் பலர் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினோம். ஒரு தந்திரம் செய்தோம். கடித உறைக்குள் ஒன்றும் எழுதாமல் வெறும் காகிதத்தை மட்டும் வைத்து விடுவோம்.
இந்த அடையாளங்கள் ராணுவத்தில் இருக்கும் கணவன்மார்கள், முன்பே அறிவித்தப்படி, பார்த்து புரிந்து கொள்வார்கள். இதே போன்று அவர்கள் உறையின் மீது சில குறியீடுகள் எழுதி அனுப்பி விடுவார்கள். தபால் இலாகா கடிதத்திற்கு அதிகக் கட்டணம் வாங்கியதால், யாரும் காசு கொடுத்து கடிதத்தை வாங்கும் நிலையில் இல்லை. இப்படி இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டோம். இந்தக் குறியீட்டு அடையாளங்களை கண்டு செய்தியை அறிந்துக் கொள்வோம்!
''எப்படி ?'' என்று ஆச்சரியத்தோடு கேட்டார் ஆசிரியர்.
''பாருங்கள் ஐயா ! இந்தக் குறி அவர் ஆரோக்கியமாக இருப்பதைக் காட்டுகிறது. மற்றொரு குறி எங்கள் ஏலத்தைப் பற்றி கேட்பதாக உள்ளது. இன்னொரு குறி அவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்!'' என்றாள் மேரி புன்னகையுடன்.
இதைக் கேட்ட ஆசிரியர் அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் விட்டார் ! '' ஏம்மா ! கிராமத்துப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து தபால் இலாகாவையை ஏமாற்றி இருக்கிறீர்கள். தபால் இலாகாவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள் !'' என்று கூறி சிரித்தார்.
'அரசுக்குரிய தபால் இலாகா வெகு நாள்கள் வரை கிராமத்து மக்களின் தந்திரத்தைக் கண்டு பிடிக்கவே இல்லை. தபால் இலாகா பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று எண்ணிய ஆசிரியர் இந்த விஷயத்தை அரசுக்குத் தெரியப்படுத்தினார். தபால் கட்டணத்தை வசூலிக்க ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயன்றார். அதிகாரிகளுடன் கலந்து பேசினார். தபால் தலை பயன்பாட்டு முறையைக் கொண்டு வர எல்லோரும் முயற்சி செய்தார்கள். தபால் தலையைத் தயாரித்து விற்கும் இந்தத் திட்டத்தை பிரிட்டிஷ் அரசு முதலில் ஏற்கவில்லை. பின்னர் அதன் அருமையை உணர்ந்து சட்டமாக்கியது.
உலகத்தின் முதலாவது தபால் தலை கி.பி. 1840-இல் லண்டன் மாநகரில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் கி.பி. 1852-ஆம் ஆண்டில்தான் முதன் முதலாகத் தபால் தலைகள் அச்சிடப்பட்டன.
- டி.எம். இரத்தினவேல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.