தாயாக அரவணைத்த தயாபரன்

தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமையாதீனத்தை 48 ஆண்டுகள் அருளாட்சி செய்தவர்.
தாயாக அரவணைத்த தயாபரன்
Updated on
4 min read

தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தருமையாதீனத்தை 48 ஆண்டுகள் அருளாட்சி செய்தவர். அளப்பரிய ஆன்மிகப் பணிகள், செயற்கரிய தமிழ்ப் பணிகள், திறம்பட கல்விப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றியவர் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 4-இல் பரிபூரணம் அடைந்தார்.

தஞ்சையில் பரிபூரணம் அடைந்த 26-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு, தருமையாதீன வளாகத்தில் தஞ்சாவூர் கோயில் கோபுரத்தை ஒத்த வடிவுடன் கூடிய ராஜகோபுரத்துடன் குருமூர்த்தமும், 48 தூண்களையும் அமைத்துச் சிறப்பித்துள்ளார் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.

அவர் தனது 26-ஆவது குருமணிகள் குறித்துப் பேசியதாவது:

'26 ஆவது குருமகாசந்நிதானம் தனது 94 வயது வரையிலான உலகியல் உடல் வாழ்க்கையில், 70 ஆண்டுகள் துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். 48 ஆண்டுகள் தருமை ஆதீனத்தை அருளாட்சி செய்தவர்.

'ஆதீனத்தின் 25 ஆவது குருமகாசந்நிதானத்தின் அருளாட்சிக் காலத்தை பொற்கால ஆட்சி' என 26-வது மகா சந்நிதானம் புகழ்வது வழக்கம்.

'26-ஆவது குருமகாசந்நிதானத்தின் அருளாட்சிக் காலம் பிளாட்டினம் காலம்தான்.

ஆதீனத்தின் ஆன்மிக, கல்விப் பணிகளையும், தமிழ்ப் பணிகளையும் தடையின்றி நடத்தியவர்கள் 26-ஆவது குருமணிகள்.

ஆதீனத்துக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த காலத்தில், குருமகாசந்நிதானம் இருக்கின்ற பணத்தைக் கொண்டே, பல திருப்பணிகளை செய்தார். அவர்களின் ஆட்சிகாலத்தில், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, திருப்பனந்தாள், திருச்சிராப்பள்ளி, உய்யக்கொண்டான், திருக்கடவூர், பரசலூர் போன்ற பல கோயில்கள் குடமுழுக்குகளைக் கண்டன.

பன்னிரு திருமுறைக்கும் உரை நூல் வெளியிட்ட பெரும்பேறு 26-ஆவது குருமகாசந்நிதானத்தையே சாரும். 16 தொகுதிகளாக 18 ஆயிரம் பக்கங்களுடன் தயாரான பன்னிரு திருமுறை உரை நூலை, சிதம்பரத்தில் நடராஜ பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து, 3 நாள்கள் தங்கியிருந்து அங்கேயே பூஜை செய்து, விழா நடத்தி வெளியிட்டார்.

26-ஆவது குருமணிகள் அவதரித்த சிறுகாட்டூரில் பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. குடமுழுக்கின்போது, குருமகாசந்நிதானம் தாம் அவதரித்த இல்லத்தை அந்தச் சிவாலயத்துக்கே அளித்தார். மேலும், சிறுகாட்டூர் கோயிலை தருமையாதீனத்தின் 28-ஆவது கோயிலாகச் சேர்க்கச் செய்தார்கள். ஆகமங்கள் 28 என்பதைப் போல தருமையாதீனத்தின் கோயில்களும் 28 என்று கூறினார்.

கோயில்கள், மடம் ஆகியன எதிர்காலத்திலும் செம்மையாக நடைபெற வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தடையுடன் பல அறக்கட்டளைகளை நிறுவி, 27 கோயில்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதி வைக்கச் செய்தார். சிறுகாட்டூர் கோயிலுக்கும் ஒரு கோடி வைப்பு நிதி வைக்க வேண்டும் என்பது குருமணிகளின் விருப்பம். ஒவ்வொரு நாளும், 'எவ்வளவு வைப்பு நிதி சேர்ந்துள்ளது' என்பதை கேட்டறிவார்கள். குருமணிகள் பரிபூரணம் அடைவதற்கு முந்தைய வாரத்தில் சிறுகாட்டூர் கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதி சேர்ந்தது. 'எல்லாம் நிறைவையாயிற்று' என்றதே எமது குருமணிகளின் இறுதிப் பேச்சாயிற்று.

குருமகாசந்நிதானம் தருமபுரம் ஆதீன தமிழ்க் கல்லூரியில் பயின்று, பேராசிரியராகப் பணியாற்றினார். வித்வான் பட்டம் பெற்று, ஓதுவாராக இருந்தமையால் நல்ல இசை வல்லுநராகவும், முதுமுனைவர் பட்டத்துக்குரிய அளவுக்கு திருமுறை ஆய்வு, ஆராய்ச்சி முன்னுரையை ஒவ்வொரு நூல்களிலும் 60 பக்கத்துக்கும் குறையாமல் எழுதியுள்ளார்.

'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்தல் வல்லது அரசு' என்பதற்கு ஒப்ப, சிறந்த நிர்வாகியாகவும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவராகவும் திகழ்ந்தார். தருமபுரம் ஆதீனத்தில் செயல்பட்டு வந்த தமிழ்க் கல்லூரியை கலைக் கல்லூரியாக மாற்றினார். 'குருஞான சம்பந்தர் மிஷன்' என்கிற அமைப்பை ஏற்படுத்தி, மெட்ரிகுலேசன் பள்ளிகளை உருவாக்கினார்கள்.

தென் தமிழும், வடமொழியும் இறைவனால் வகுக்கப்பட்டவை. அதனால்தான் தருமபுரம் ஆதீனத்தில் வடமொழி பாடசாலை, தேவாரப் பாடசாலை என 2 பாடசாலைகளும் உள்ளன.

தெரிந்து உணரின் முப் போதும் செல் காலம் நிகழ் காலம் வருங்காலம் ஆனவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பிய அர்ச்சனைகள் சிவ வேதியர்க்கே உரியன; அப்பெரும் தகையார் குலப் பெருமை ஆம் புகழும் பெற்றியதோ என சேக்கிழார் குறிப்பிட்டுள்ளதை குருமணிகள் அவ்வப்போது சுட்டிக்காட்டுவார்.

சேக்கிழாரை கொண்டாடும் நாம் அவர் வழியில், சிவாச்சார்யர்களைக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும் என்பது குருமணிகளின் கூற்று.

கோயில் வழிபாட்டு முறைகள் குறித்து ஓர் சர்ச்சை எழுந்தபோது, 'ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் சிவாசாரியார்களே பூஜை செய்ய வேண்டும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கோயில்களில் அவரவர் விருப்பப்படி பூஜைகள் நடத்தலாம், ஓதுவார் இல்லாத தலங்களில் அங்குள்ள சிவாசாரியார்களே திருமுறைகளைப் பாட வேண்டும்' என்று கூறி பிரச்னைக்கு குருமணிகள் தீர்வு கூறினார்.

கோயில் நிலங்களுக்குக் குத்தகை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டபோது, குருமணிகளின் கோரிக்கையின்பேரில் அரசும் அறிவிப்பை திரும்பப்பெற்றது.
26-ஆவது குருமணிகள் வாழ்வியல் தூய்மையுடன், முதிர்ச்சியாகவும் இருந்ததால், மறைந்த கருணாநிதி, ஜெயலலிதா உள்பட பல தலைவர்களும் ஆலோசனையைக் கேட்டுள்ளனர். குருமணிகள் யாருக்கும் சாதக, பாதகமின்றி பொதுவாக இருந்தவர்.

26-ஆவது குருமகாசந்நிதானம் சீர்காழி திருமுலைப்பால் விழாவுக்கு எழுந்தருளியபோது நடைபெற்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளைப் பார்த்தபோது, இந்த மடத்தில் சேர்ந்திட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதன்படி, தருமையாதீன மடத்துக்கு வந்தேன். பிறகு, மதுரை ஆதீனத்தில் பணிவிடையாக இருந்துவிட்டு இங்கு வந்தேன். 6 மாதங்களுக்குப் பிறகே குருமகாசந்நிதானம் எனக்குத் துறவு கொடுத்தார். 26-ஆவது குருமகாசந்நிதானத்தின் கைகளாலேயே சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை, ஆச்சாரிய அபிஷேகம் எல்லாமும் ஒருசேர எமக்குக் கிடைக்கப் பெற்றது.

நிர்வாக மேலாண்மை பற்றி அவரிடம் முழுமையாக கற்றறிந்தோம். ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், 'உனக்கு ஏதேனும் குறை இருக்கிறதா? உன்னை என் கண் முன்னாலேயே வைத்திருப்பதால் உனது சுதந்திரம் பாதிக்கப்படுகிறதா?' என கேட்பார்.

தருமபுரம் ஆதீனத்தில் இருந்து முதல் முதலாக என்னை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். திருவையாறில் இருந்து தருமையாதீன மடத்துக்கு நான் வரும்போதும்கூட, 'இப்போது எந்த நாட்டில் இருந்து வருகிறாய்' என வேடிக்கையாக கேட்பார்கள்.

ஆதீன இளவரசாக நியமிக்கப்படுவதற்கு முன்னரே குருமகாசந்நிதானத்துக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்தச் சிகிச்சைக்குச் செல்லும் முன்பாக, உலகம் சுற்றும் தமிழன்; குமாரசாமி தம்பிரானே நமக்கு பின்பு ஆதீனக் கர்த்தராக வரவேண்டியது' என எழுதி தனது கைப்பெட்டியில் வைத்திருந்தார்கள். குருமணிகள், இவ்வாறு எழுதி வைத்ததே அப்போது எனக்குத் தெரியாது.

நான் வெளியில் சென்றால் மீண்டும் ஆதீனத்துக்கு வரும்வரை விழித்துக்கொண்டே இருப்பார்கள். பிறகு பேசிவிட்டுதான் படுக்கைக்குச் செல்வார்கள். அந்த அளவுக்கு அனுசரனையாக இருந்தார். பயணத்தில் இடர் ஏற்படக் கூடாது என வழிபாடு மேற்கொள்வார்.

ஆதீன இளவரசான உடன் பதவியில் அமர வேண்டும் என சிலர் ஆசைப்படுவார்கள் அல்லது சிப்பந்திகளே இருவருக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி விடுவார்கள். இதனால், விலகல், நீக்கல் போன்றவை பல இடங்களில் நடந்துள்ளன. ஆனால், குருமகாசந்நிதானம் எந்த பேதத்தையும் என்னிடம் காட்டியதில்லை. அதேபோல் நாமும் குரு துரோகமாக எதையும் செய்ததில்லை.

வெளிநாடுகளுக்கு சென்று வந்தால் அங்கு வாங்கிய பொருள்களை அளித்தால், அதையே குருமகாசந்நிதானமும் உபயோகப்படுத்துவார்.

துறவு ஏற்ற 3 மாதங்களில் தருமபுரம் ஆதீனத்தில் இருந்து திருப்பனந்தாள் ஆதீனத்துக்கு செல்ல குருமகாசந்நிதானத்திடம் உத்தரவு கேட்கச் சென்றோம். அப்போது, ' உனக்கு காசி மடத்தைப் பற்றி தெரியுமா'எனக் கேட்டு, ஏதோ சொல்ல முற்பட்டார்கள். ஆனால், நான் அவசரப்பட்டு குருஞானசம்பந்தர் இயற்றிய 'ஐந்தறிவால் கண்டாலும், ஆரேது சொன்னாலும்' என்ற பாடலைச் சொன்னேன். அதற்கு அவர், ' சரி அனுபவத்தால் வரட்டும்' என்று கூறி அனுப்பி வைத்தார்.

பிறகு, திருப்பனந்தாள் சென்று 12 ஆண்டுகள் இருந்துவிட்டு, அங்கு ஒரு பிரச்னை முடிந்து மீண்டும் தருமபுரம் மடத்துக்கு வந்தோம். அப்போது, 'அனுபவத்தில் வந்து விட்டது' என கூறினேன். அதைக் கேட்டு குருமகாசந்நிதானம் கண்ணீர் விட்டுவிட்டார்.

மகாசந்நிதானத்திடம் எந்த நூல் கிடைத்தாலும் அதனை முழுமையாகப் படித்துவிட்டுதான் அடுத்தப் பணியைத் தொடங்குவார்கள். அந்த நூலில் உள்ள நிறை, குறைகளை விளக்கிச் சொல்வார்.

திருவாமூர் அப்பர் சுவாமிகள் குருபூஜைக்கு சென்று வந்த தருணத்தில், சமணம் சார்ந்து தருமசேனராக இருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் தன் வருகையைத் தெரிவித்தும், அவர் பால் மிகுந்த பற்றுக் கொண்ட தமக்கை திலகதியார் அவரை சென்று காணாதது ஏன்? என மகாசந்நிதானம் கேள்வி எழுப்பினார்.

பிறகு, 'அன்னவனை சூலை கொடுத்தாள்வோம்' என இறைவன் திலகவதியாருக்கு ஏற்கெனவே அருளியிருந்ததால், இறைவன் அளித்த வாக்கில் அவர் கொண்டிருந்த உறுதியால் தான் திலகவதியார், திருநாவுக்கரசரை சந்திக்கச் செல்லவில்லை. இதிலிருந்து, திலகவதியாரைப் போன்ற உறுதி நமக்கும் வேண்டும் என விளக்கினார். இனி யார் எமக்கு இதுபோன்ற நுட்பமான செய்திகளை உபதேசிப்பர்?

1991-ஆம் ஆண்டு குருமகாசந்நிதானம் ஸ்ரீசொக்கநாதர் பூஜையுடன் பாத யாத்திரையாக குரு, லிங்க, சங்கம யாத்திரை புறப்பட்டார். அப்போது, ஸ்ரீசொக்கநாதப் பெருமான் பெட்டகத்தைப் பட்டுத் துணியால் போர்த்திக்கட்டி, தம்பிரான் சுவாமிகள் சிரமேல் வைத்து சுமந்து வருவார். ஸ்ரீ'சொக்கநாதப் பெருமானை சுமந்து வரும் தம்பிரானுக்கு தாமே கைலாகு கொடுக்கும் வழக்கத்தை குருமணிகள் கடைப்பிடித்தார். பாதயாத்திரையின்போது பொதுமக்கள் வரவேற்பில் ஒரு பலகை மட்டும் இடப்பட்டால், அதில் சொக்கநாதப் பெருமானை சுமந்து வருபவரை நிறுத்தி, தாம் தரையில் நிற்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

பாதயாத்திரையின் போது ஆங்காங்கே உள்ள கோயில்கள், திருமணக் கூடங்கள், பள்ளிக்கூடங்களில் தங்குமிடம் அமையும். அங்கு, வருவோருக்கு திருநீற்றுப் பிரசாதம் அளித்து, எழுச்சியை, சமயப் புரட்சியை ஞானசம்பந்தரின் அவதார நோக்கத்தை நிறைவேற்றினார்.

அன்னையாக இருந்து அரவணைத்தார். தந்தையாக இருந்து பணிகளை கட்டளையிட்டு நெறிப்படுத்தினார். ஆசானாக இருந்து இலக்கிய, சமய பாடல்களுக்குப் பொருள் விளக்கம் உரைத்தார். ஞானகுருவாகி சமயம், விசேடம், நிர்வாணம் முதலிய தீட்சைகள் அளித்தார். அவர்கள் கைகளாலேயே ஆச்சார்ய அபிஷேகமும் செய்வித்து அனுக்கிரஹம் செய்தார். நடையறா பெருந்துறவு நயந்து உயர்ந்தவர்கள் நம் குருமணிகள். தாயுள்ளம் கொண்ட தயாபரன் அவர். அவரை நினைந்தே கழியும் என் ஆவி'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com