இதைவிட சிறந்த சேவை வேறில்லை!

காஞ்சிபுரம் வணிகர் வீதி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் த.மங்கள்ராஜ்.  அகர்வால் கண் மருத்துவமனையின் காஞ்சிபுரம் கிளையில் கண் எடுப்பவர்'  என்ற பணியை செய்து வருகிறார். 
இதைவிட சிறந்த சேவை வேறில்லை!
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் வணிகர் வீதி பாலாஜி நகரைச் சேர்ந்தவர் த.மங்கள்ராஜ். கணினி அறிவியிலில் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்த இவர், 'அகர்வால் கண் மருத்துவமனையின் காஞ்சிபுரம் கிளையில் கண் எடுப்பவர்' என்ற பணியை செய்து வருகிறார்.

கடந்த 7 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களிலிருந்து கண்களை எடுத்திருக்கிறார். அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உட்பட பல தொண்டு நிறுவனங்களும், கண் மருத்துவமனைகளும் இவரது சேவையைப் பாராட்டி பரிசுகளும், விருதுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கியிருக்கின்றன.

அவருடன் ஓர் சந்திப்பு:

கண்களை எடுக்கும் பணிக்கு எப்படி வந்தீர்கள்?

2017-ஆம் ஆண்டில் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் என் சகோதரர், 'சடலங்களிலிருந்து கருவிழிகளை எடுப்பதற்கு ஆள் தேவைப்படுகிறது. அந்த வேலையை செய்கிறாயா?'' என்று கேட்டார். முதலில் தயங்கினேன். பின்னர் துணிந்து ஒப்புக் கொண்டேன். 3 மாதங்கள் பயிற்சியை முடித்த பின்னர், பணியில் சேர்ந்தேன்.

கண் மருத்துவர்கள்தானே 'கார்னியா' எனப்படும் கருவிழிகளை எடுப்பார்கள். நீங்கள் எடுக்கலாமா?

கண் மருத்துவர்கள் பற்றாக்குறை, அவர்களுக்கான பணிச்சுமை, தொலைதூரங்களுக்கு அவர்களால் உடனடியாக செல்ல முடியாமை போன்ற காரணங்களால் தொழில் நுட்பம் தெரிந்தவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசே விதிமுறை வகுத்திருக்கிறது. அதன்படி, நான் பயிற்சியை முடித்து அதற்கான சான்றிதழும் பெற்றுள்ளேன்.

பயிற்சி அனுபவம் எப்படி?

இறந்தவர்களின் உடலிலிருந்து கருவிழிகளை எப்படி எடுப்பது என்று கண் மருத்துவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள். இதுபோல பலரது கருவிழிகளை எடுத்துப் பழக்கிக் கொண்டேன்.

முதல் முதலாக சென்னையில் பிரபல மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்த 60 வயது பெண்ணின் கருவிழிகளை எடுத்தேன்.அப்பணியை சிறப்பாகச் செய்ததால் எனக்கு வேலையும் கிடைத்தது.

இதுவரை எத்தனை கருவிழிகளை எடுத்திருப்பீர்கள்?

ஆரம்பத்தில் கண்களையே முழுவதுமாக எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இப்போது கருவிழிகளை எடுத்தாலே போதுமானது. கடந்த 7 ஆண்டுகளில் 1,103 உடல்களிலிருந்து சுமார் 2200-க்கும் மேற்பட்ட கருவிழிகளை எடுத்துள்ளேன்.

முதலில் உயிரற்ற உடல் அருகில் செல்லவே முதலில் பயமாக இருந்தது. இப்போது எந்த நேரத்திலும் பயம் இல்லை. சாதாரணமாக இறந்தவர்கள், விபத்துகளினால் உயிரிழந்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள், கொலை செய்யப்பட்டு இறந்தவர்கள்.. என பட்டியல் நீளும். இவர்களில் பெரும்பாலானவை இளவயது மரணங்களாகவே இருக்கும்.

விபத்துகளினால் இறந்தவர்களின் கண்களை எப்படி எடுக்கிறீர்கள்?

நான் பெரும்பாலும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கிடங்குக்கு அருகில்தான் இருப்பேன். காவல் துறையினர் உடல்களைப் பரிசோதனை அறைக்கு கொண்டு வரும்போது, உறவினர்களிடம் அனுமதி கேட்பேன். இறந்தவர்களின் கண்கள் பிறருக்கு எப்படி பயன்படுகிறது என்று பக்குவமாக எடுத்துச் சொல்வேன். சிலர் அடிக்க வருவார்கள்; சிலர் திட்டுவார்கள்; ஒரு சிலரோ இறந்ததுதான் இறந்து போச்சு கண்கள் மூலமாகவாவது மற்றவர்களைப் பார்க்கட்டுமே என்று என் காலில் விழுந்து கும்பிடுவார்கள். ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டே கருவிழிகளை எடுப்பது வழக்கம்.

யார் இறந்தாலும் சமூக ஆர்வலர்கள் மூலமாக எனது கைப்பேசி எண்ணுக்கு தகவல் வந்துவிடும். நான் மட்டும் தனியாக எனது இரு சக்கர வாகனத்தில் தனியாகச் சென்று கருவிழிகளை எடுத்துக் கொண்டு அதை சேர்க்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாகச் சேர்த்து விடுவேன்.

அனைத்து வயதினரும் கண் தானம் செய்யலாமா?

ஒரு வயது முதல் அனைத்து வயதினரிடமும் கண் தானம் எடுக்கலாம். உயிரோடு இருக்கும்போதும், கண்களை தானமாக தருவதாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.சடலம் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்து 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் 12 மணி நேரத்துக்குள்ளாகவும், அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருந்தால் 6 மணி நேரத்துக்குள்ளும் கருவிழிகளை எடுத்து விட வேண்டும். குளிரூட்டப்படாத சடலமாக இருந்தாலும் 6 மணி நேரத்துக்குகள் கண்களை எடுக்கலாம்.

நான் 3 மாத கைக்குழந்தைக்கும், 105 வயது நிரம்பிய மூதாட்டிக்கும் கருவிழிகளை எடுத்துள்ளேன். ஒருவரது ஒரு ஜோடி கருவிழிகளை எடுக்க 30 நிமிடங்கள் போதுமானது.

அரக்கோணம், பூந்தமல்லி, திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, வந்தவாசி, காவேரிப்பாக்கம், செய்யாறு உள்ளிட்ட நகரங்களுக்கும் இரு சக்கர வாகனத்தில் சென்று கண்களை தானமாக பெற்று வருகிறேன். சில நேரங்களில் உறவினர்களை நேரில் வந்து காரில் அழைத்து செல்வதும் உண்டு.

இப்போதெல்லாம் யார் இறந்தாலும் உடனே கண் மருத்துவர்களை தொடர்பு கொண்டு கண்களைத் தானமாக தர விரும்புகிறோம்.கண்களை எடுத்துக் கொள்ள வருகிறீர்களா என்று உறுவினர்களோ அல்லது அவர்களது பிள்ளைகளோ கேட்பது அதிகரித்திருக்கிறது. அந்த அளவுக்கு கண்தானத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com