இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திர நாள்களில் எப்படியிருக்குமோ? என்ற கவலை மக்களை வாட்டத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி என்பது குறித்து, மருத்துவர்களைக் கேட்டபோது:
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், டீன், ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி:
மண்பானை தண்ணீரில் வெட்டிவேரை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் குடிக்கலாம். இதனால் உடல் சூடு குறையும்.
உடலில் ஏற்படும் வியர்குருக்கள் மறைய, நுங்கு தேய்த்து குளிப்பது நல்லது. "தூர்வாதி' எனும் மூலிகைத் தைலத்தை உடல், தலை முழுவதும் தேய்த்து மாலை நேரத்தில் குளித்தால், உடல் புத்துணர்வு பெறும்.
எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடக் கூடாது. உணவில் காரம், புளி, உப்பு சுவைகளைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளைச் சேர்க்க வேண்டும்.
வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது, காலில் காலணிகளை அணிந்தும் குடைகளை ஏந்தியும் செல்வது நல்லது.
இரவில் உறங்கச் செல்லும் முன் விளக்கெண்ணெய் அல்லது நெய்யை உள்ளங்காலில் தேய்ப்பது நல்லது. இதனால், கண் குளிர்ச்சி அடையும்.
கடுக்காய், ரோஜாமொட்டு, சூரத்தாழ்வாரை விதை, சுக்கு போன்றவற்றை சூடு தண்ணீரில் ஊற வைத்து, குடிக்க வயிறு சுத்தம் அடையும். இதோடு, உடலின் உள்புறச் சூடும் தணிவதால், வெளிப்புறத்தில் காணப்படும் வெயிலைத் தணிக்கச் செய்யலாம்.
கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. அதிலும், வெண்ணிற ஆடைகள் நல்லது.
இரவு நேரத்தில் கண் விழித்தலைத் தவிர்க்க வேண்டும். குளிர்பானங்கள், பழங்களை அதிகம் சாப்பிட்டால், வெயில் கொடுமையில் தப்பிக்கலாம்.
கே.எல்.சிவகுமார், பாரம்பரிய சித்த மருத்துவர்:
கோடை வெயிலுக்கு இதமாக இருக்க, சாத்துக்குடி, தர்ப்பூசணி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம். கோடைக்காலத்தில் ஏற்படும் மலச் சிக்கலை கொய்யா பழம் தவிர்க்கும். நீர்ச் சத்துள்ள கிர்ணிப் பழம் தசை மண்டலத்தை சரி செய்யும். மணத்தக்காளிக் கீரை வயிறு உப்பிசத்தைத் தவிர்க்கும்.
இரு வேளைகள் குளிப்பது நல்லது. உப்பு படலம் கொண்ட ஆடைகள்,உள்ளாடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். தலைக்கு நாள்தோறும் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
கடும் வெயில் காணப்படுவதால், அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீர் குடிக்கும் முன்பும், சாப்பிடும் முன்பும் பின்பும் வாய் கொப்பளித்தல் நல்லது.
கடும் வெயிலால் பறக்கும் சிறு மணல் துகள்கள், தூசிகள் உடலில் கண், காது, மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் ஓட்டிக் கொள்ளும் என்பதால், அவ்வப்போது முகத்தைக் கழுவுவதும் நல்லது. வெயில் காலத்தில் பாதங்கள் பராமரிப்பது அவசியம். கால் இடுக்குகளில் துணிகளைப் போட்டு துவைக்க வேண்டும். சர்க்கரை இல்லாத நோயாளிகளுக்குச் சேற்றுப்புண் வருவதைத் தவிர்க்க, பாதங்களை அடிக்கடி தண்ணீரால் கழுவுவது நல்லது.
சிறுவர்கள் தினமும் மலம் கழித்தலை பெரியோர்கள் கண்காணிக்க வேண்டும். வெயில் காலங்களில் விளக்கெண்ணெய் குடித்து, மலத்தை வெளியேற்றுவது நல்லது. சிறுவர்கள் எனில் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயில் சிறிது பால் சேர்த்து அருந்த வைக்கலாம். பெரியவர்கள் எனில், 2 தேக்கரண்டி விளக்கெண்ணெய் குடிக்கலாம்.