"நூல்கள் ஒருவரின் அறியாமையின் அளவைச் சுருக்கி, அறிவின் அளவை அகலமாக்கும். உலகையே புரட்டிப்போடும் வல்லமை கொண்ட நூல்கள் என்னைப் போன்ற மனிதர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கின்றன'' என்கிறார் நீலகிரி மாவட்ட ஆவின் பொது மேலாளர் டாக்டர் எம்.ஜெயராமன்.
கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளராகவும் கூடுதலாகப் பொறுப்பு வகிக்கும் இருக்கும் இவர், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலராகப் பணியாற்றினார். அப்போது, அவர் ஏராளமான மீம்ஸ்கள், கவிதைகள், விடியோக்களைத் தயாரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஏராளமானோரின் கவனத்தைப் பெற்றார். அவரிடம் பேசியபோது:
""பழநி அருகேயுள்ள ஆயக்குடியே எனது சொந்த ஊர். நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை பட்டமும், ஹரியாணாவில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சிக் கல்லூரியில் முதுநிலை பட்டத்தையும் பெற்றேன். எனது அண்ணன் செல்வராஜ், ஸ்ரீரங்கத்தில் கோட்டாட்சியராக இருந்தவர். தம்பி ராகவன் திருப்பூரில் பல் மருத்துவராக இருக்கிறார்.
நான் படிப்பை முடித்த காலத்தில் எனது பெற்றோர் மதனகோபால்- ஜெயலட்சுமி, எனது சகோதரர்கள் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும்படி எனக்கு ஊக்கமளித்தனர்.
மூன்று முறை நேர்முகத் தேர்வுக்குச் சென்றும், தேர்ச்சி பெற முடியவில்லை. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரியில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தேன். பல்வேறு இடங்களில் பணியாற்றிய நான் தற்போது இணை இயக்குநர் நிலையில் ஆவினில் பணிபுரிகிறேன்.
இளமைப் பருவத்தில் துப்பறியும் நாவல்களில் வாசிப்புப் பயணம் தொடங்கியது. குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாரானபோது, அண்ணா, கருணாநிதி, கல்கி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், சுஜாதா, தி.ஜானகிராமன் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்க நேர்ந்தது.
எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க' என்ற சாகித்திய விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்த பிறகு எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழுந்தது.
கவிதைத் தொகுப்பு, சிறுகதைகள், நாவல் வரிசையில் "நெல்லுச்சோறே', "கல்லூரி வாசம்', "திக்கற்ற பயணம்', "இப்படிக்கு நான்', "ராமன்மதியின் குட்டிக்கதைகள்', "மாதவம் செய்தவள்', "சூடாத பூக்கள்' உள்ளிட்ட 15 நூல்களை எழுதினேன்.
நான் இந்த நிலையை எட்டுவதற்கு முயற்சித்தவர் எனது சகோதரர் செல்வராஜ், கடந்த ஆண்டு காலமானார். அவரது நினைவாக "அழிகின்ற ஓவியம்' என்றொரு நூலை எழுதியிருக்கிறேன்.
இல்லத்தரசியான எனது மனைவி சாருமதி, எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பவர். எனது பெயருடன் அவரது பெயரையும் இணைத்து "ராமன்மதி' என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறேன். எங்களுக்கு 11- ஆம் வகுப்பு பயிலும் ஒரு மகன் இருக்கிறார்.
ஏராளமான பாடல்களை எழுதி மெட்டு அமைத்து நண்பர் ஜாக் வாரியரின் இசையில் வெளியிட்டிருக்கிறேன். 2019 ஆம் ஆண்டிலேயே தேர்தல் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை தயாரித்து, நடித்திருக்கிறேன். அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்களை எழுதி, இயக்கினேன்.
படிப்புக்கும் அறிவுக்கும் இடையே நிறைய இடைவெளி உள்ளது. அதை நான் நேரடியாகவே கண்டுணர்ந்திருக்கிறேன். அந்த இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் எனது எழுத்துப் பணியைத் தொடருகிறேன்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.