எண்பதிலும் சேவை..!

தேசத்தை நேசிக்க வேண்டும்.
எண்பதிலும் சேவை..!
Published on
Updated on
2 min read

தேசத்தை நேசிக்க வேண்டும். நம் அன்றாடப் பணிகளுக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிரதிபலன்களைப் பாராமல் நம்மால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்'' என்கிறார் சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசிக்கும் வி.சந்தானம்.

எண்பத்து மூன்று வயதாகியும் அவர் தனது பொதுநலப் பணிகளைக் கைவிடாமல் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறார். 'முடங்கிக் கிடந்தால் சிலந்தி கூட வலை பின்னிவிடும். எழுந்து நட.. ஓடையும் நதியாகிவிடும்'' என்று கூறி துள்ளும் இளைஞராய் செயலாற்றுகிறார்.

அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வந்தவாசி அருகேயுள்ள மூதூர் கிராமம்தான். எனது பெற்றோர் வெங்கடராகவாச்சாாரியார் ஜெயலட்சுமி.

எனது தந்தை ஒரு கை இல்லாதவர். இருந்தாலும் இதற்காக அவர் கவலைப்பட்டதில்லை. அவர் சென்னை புரசைவாக்கத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நான் 1938ஆம் ஆண்டு டிச. 16இல் பிறந்தேன். நான் பிறந்ததும் என் முகத்தை என் தந்தை மூன்று ஆண்டுகள் பார்க்கக் கூடாது என்று ஜோதிடர்கள் கூறினார்களாம். இதற்காக, என் தந்தை மும்பை சென்று பணிபுரிந்து, அதன்பிறகே வந்து பார்த்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் நான் மும்பைக்குச் சென்றேன். அங்கு ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்த எனது அண்ணன் மணி வாயிலாக, ஸ்டோர் ஒன்றில் பணிபுரிந்தேன். ஆங்கில நாளிதழ்களை வாசித்து, ஆங்கிலமும் கற்றேன்.பின்னர், "டாடா அடாமிக் எனர்ஜி' நிறுவனத்தில் பணிபுரிந்த பொறியாளரிடம் உதவியாளராக மூன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தேன். இதைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து ஓரிரு நிறுவனங்களில் பணியாற்றினேன்.

பின்னர், தண்டையார்பேட்டையில் உள்ள "இந்தியன் ஆக்ஸிஜன்' எனும் மயக்க மருந்து நிறுவனத்தில் 38 ஆண்டுகள் பணியாற்றினேன். ஓய்வு பெற்றும் சில ஆண்டுகள் தொடர்ந்து என்னை நிர்வாகம் பணியில் அமர்த்தும் அளவுக்கு நல்ல பெயரை பெற்றிருந்தேன்.

தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால், முன்னாள் பிரதமர் வி.பி.சிங், கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் டபிள்யூஆர்.வரதராஜன் போன்ற தலைவர்களோடும் நட்பு ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பெற்றதும் முழு நேர மக்கள் நலப் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

குரோம்பேட்டை நியூ காலனியில், நான் உள்பட 10 பேர் வாங்கிய இடத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அன்றைய முதல்வர் அண்ணாவுக்கு 16 முறை பதிவு தபாலில் கடிதம் அனுப்பினேன். 15 கடிதங்கள் அவருடைய கவனத்துக்குச் சேராத நிலையில், 16ஆவது கடிதத்தை அவர் பார்த்துவிட்டார்.

அரசு செயலாளர் அளித்த தகவலின்பேரில், சென்னை தலைமைச் செயலகத்துக்குச் சென்று அண்ணாவை பார்த்தேன். அங்கு அமைச்சர் சாதிக்பாட்சாவும் இருந்தார். "ஒரு முதல்வருக்கு 16 கடிதங்கள் அனுப்பி உள்ளீர்கள். விடாமுயற்சியை பாராட்டுகிறேன். இதுபோன்ற மக்கள் நலப் பணிகளைச் செய்ய வேண்டும்'' என்று பாராட்டினார். மேலும், இடம் கையகப்படுத்தப்படாது என்று அண்ணா கூறினார்.

இதையடுத்து, மக்கள் நலப் பிரச்னைகள் குறித்து பத்திரிகைகளுக்கு கடிதம் அனுப்புவேன். அரசின் கவனத்துக்கும், உரிய துறைகளின் கவனத்துக்கும் கொண்டு செல்வேன். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்களையும், 1700க்கும் மேற்பட்ட ஆர்.டி.ஐ. சட்ட மனுக்களையும் அனுப்பி அரசிடம் தகவல்களைப் பெற்று பொதுச்சேவையை ஆற்றியுள்ளேன்.

குரோம்பேட்டை நியூ காலனி குடியிருப்போர் சங்கத்தைத் தொடங்கினேன். சங்கம் சார்பிலும், தொழிற்சங்கம் சார்பிலும் சேவைகளைத் தொடர்ந்தேன்.

2000ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றதும் முழுநேரமாக மக்கள் பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன்.

ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றம், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம், அடிப்படை வசதிகள் கோருதல் உள்பட 200க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளேன். 21 முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளேன்.

பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிகளை மேம்படுத்துவதிலும், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை தொடங்கப்படுவதற்கும் எனக்கு முக்கிய பங்கு உண்டு.

எம்.எஸ்.சுவாமிநாதன் டாடா விருது, சேவா ரத்னா விருது, மூதறிஞர் ராஜாஜி விருது, 1994இல் ஹீரோ ஆஃப் பல்லாவரம் உள்பட 25 விருதுகளைப் பெற்றுள்ளேன்.

மணல் கொள்ளையைத் தடுத்த போலீஸார் மீது வாகனம் மோதியதால் அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது உள்பட பல செயல்களுக்காக இருமுறை காவல் துறையின் விருதுகளையும் பெற்றுள்ளேன்.

2008ஆம் ஆண்டில் நெமிலிச்சேரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் நீர்நிலையை மக்கள் பங்களிப்புடன் தொடங்கியதற்காக, ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவிடம் பாராட்டுகளைப் பெற்றேன்.

கடந்த ஆண்டில் பசுமை பாரதம் கிரீன் இந்தியா சார்பில், தில்லியில் சென்று சிறந்த சமூகச் சேவைக்கான விருதைப் பெற்றேன்.

நான் சிறுவயதில் வறுமையில் கஷ்டப்பட்டேன். இந்த நிலை யாருக்கும் வரக் கூடாது என்பதற்காகவே நான் சமூகச் சேவையிலும், பிறகுக்கு உதவுவதிலும் கவனம் செலுத்துகிறேன்.

எனது சேவைப் பணிகளுக்கு எனது மனைவி ஸ்ரீமதி, மகள் டாக்டர் ஷியாமளா , மகன்கள் பாலாஜி, ஸ்ரீதர் மற்றும் உறவினர்கள் உறுதுணையாக இருக்கின்றனர். "சரணாகதி' என்ற சேவை அறக்கட்டளை சார்பிலும் பல்வேறு உதவிகள் தொடர்கின்றன.

எனது அண்ணன் மணி ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றதில் கிடைத்த பணத்தை "சோ கேர்' எனும் அறக்கட்டளையைத் தொடங்கி 1999இல் பெங்களூரில் சிறையில் வாடும் ஆயுள் கைதிகளின் வாரிசுகளுக்கான இல்லத்தைத் தொடங்கி, 250 பேரை சேர்த்து கல்வி, பயிற்சிகளை அளித்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர், இல்லத்தை சாரதா பீடம் நடத்துகிறது. இந்தச் சேவைக்காக, இல்லத்தின் முன்பு எனது அண்ணன் மணியின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

2008இல் "இந்தியாவின் தலைசிறந்த சமூகச் சேவகர்கள்' என 10 பேரை அம்பானி தேர்வு செய்து விருந்தளித்தார். அந்த 10 பேரில் எனது அண்ணன் மணி என்பதும், அவருக்கு உடன் சென்றது நான் என்பதும் எனக்குப் பெருமையளிக்கிறது.

எனது மக்கள் தொண்டுகள் குறித்து மூன்று நூல்களை வெளியிட்டுள்ளேன். நாள்தோறும் சேவை, மக்கள் பணி என்று தொடர்கிறது. என் வாழ்நாள் முழுவதும் சேவைப் பணி தொடரும்'' என்கிறார் வி.சந்தானம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com