சிலந்தி, பாம்புகளையும் வீடுகளில் வளர்க்கலாம்..!
ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள் போன்றவற்றை செல்ல பிராணிகளாக வீடுகளில் வைத்து வளர்ப்பது வழக்கம். இதையெல்லாம் கடந்து வெளிநாட்டு வகைகளைச் சார்ந்த வளர்ப்பு சிலந்திகள், வளர்ப்பு தேள்கள், வளர்ப்பு பல்லிகள், வளர்ப்பு பாம்புகள் போன்றவையும் தற்போது செல்ல பிராணிகளாகி வருகின்றன.
தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தைச் சேர்ந்த இருபத்து நான்கு வயதான இயற்கை ஆர்வலர் எம். ராபின், தனது வீட்டிலேயே சிலந்திகள், ஓணான்கள், பாம்புகள் போன்றவற்றை வளர்த்து வருவதோடு, அவற்றை விற்பனையும் செய்து வருகிறார்.
அவரிடம் பேசியபோது:
'ஐந்து வயதாக இருக்கும்போது பறவைகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கு வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்ததால் அதை வளர்க்க முடியவில்லை. அந்த ஏமாற்றத்தில் தொலைக்காட்சிகளில் வரக் கூடிய இயற்கை விவசாயம் குறித்த நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கினேன். பின்னாளில் பறவைகள், விலங்குகள் தொடர்பான நூல்களைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, ஈரோட்டிலுள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, 2022 ஆம் ஆண்டில் முடித்தேன்.
இதனிடையே, கரோனா காலத்தில் 'மீல் வார்ம்' எனக் கூறப்படும் உணவுப்புழு வளர்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. பொழுதுபோக்குக்காக வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு சிலந்தி, வளர்ப்பு தேள், வளர்ப்பு பல்லி போன்றவற்றுக்கு உணவாகக் கொடுப்பதற்காக சிலர் என்னிடம் உணவுப் புழுக்களை வாங்கினர். அவர்கள் மூலமாக வளர்ப்பு சிலந்திகள், தேள்கள், பாம்பு, பல்லிகள் போன்றவற்றை வளர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
இதனால் 'டரான்டுலா' என்கிற பெரும் சிலந்தியை வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. இதில், பிரேசில் நாட்டு வகையைச் சார்ந்த 'சாக்கோ கோல்டன்', 'கர்லி ஹேர்', 'சாலமன் கிங்' 'பேர்டு ஈட்டர்' உள்பட 15 வகையான பெரும் சிலந்திகளை வளர்க்கிறேன். எளிதில் கையாளக் கூடிய இந்தச் சிலந்திகளைக் குழந்தைகள் உள்பட யார் வேண்டுமானாலும் கையில் எடுத்து விளையாடலாம். இதனால் மனிதர்களுக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது.
இந்தச் சிலந்திகள் 7 முதல் 12 அங்குலம் வரை அகலமுடையது. இதில், குட்டி சிலந்தி ரூ. 2 ஆயிரத்து 500க்கும், பெரிய சிலந்திகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலும் விற்பனையாகிறது. ஒரு சிலந்தி 500 முதல் 1,000 முட்டைகளை இடுகின்றன. இவற்றில் ஏறத்தாழ 500 முட்டைகள் பொரிக்கப்பட்டு சிலந்திகளாக உருவாகும். இவை ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான் கேட்பவர்களுக்கு கொடுக்கிறோம்.
சிலர் மீன் தொட்டிகளைப் பராமரிப்பது போன்று, சிலந்திகளுக்கும் உரிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வளர்க்கின்றனர். இயற்கையை விரும்புபவர்களுக்கு இதனுடைய இயக்கத்தை ரசிப்பதன் மூலம் மன ஆறுதலைத் தருகிறது. அதனால், இவற்றை வளர்க்கும் ஆர்வம் பரவலாகி வருகிறது.
இதேபோல, வளர்ப்பு பாம்புகளும் பிரபலமாகி வருகின்றன. இதில், மத்திய ஆப்பிரிக்க வகையைச் சார்ந்த பால் பைத்தான் பாம்பு, அமெரிக்காவில் சோளக்காட்டில் காணப்படும் 'கார்ன் ஸ்நேக்' என்கிற பாம்பும் நிறைய விற்பனையாகின்றன. இவை நம்மூர் சாரைப் பாம்புகளைப் போன்றவை. அதிகபட்சமாக ஐந்தரை அடி வரை வளரக் கூடியது. இவை விஷமற்ற பாம்புகள் என்பதால், பொழுதுபோக்குக்காக வீட்டில் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
சாதாரணமாக கையில் எடுத்து விளையாடலாம். சிலர் ராசி பலன்கள் அடிப்படையில் நிறத்தைப் பார்த்து வாங்குகின்றனர். குட்டிப் பாம்பு ரூ. 30 ஆயிரத்திலிருந்து பெரிய பாம்புகள் ரூ. 10 லட்சம் வரை விலை போகிறது. பால் பைத்தான் பாம்புகளில் நிறைய வகைகள் உள்ளன.
பிரேசில், மத்திய அமெரிக்க நாடுகளில் பரவலாகக் காணப்படும் ராட்சத பல்லிகளும் உள்ளன. பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள், வெள்ளை என 5 வண்ணங்களில் உள்ள இந்த பல்லிகள் ஏறத்தாழ 6 அடி வரை வளரக்கூடியது. காய்கறிகள், பழங்கள், செம்பருத்தி, ரோஜா இதழ்களை உண்ணக் கூடியது. சிறியது முதல் பெரிய பல்லிகள் ரூ. 8 ஆயிரத்திலிருந்து ரூ. 5 லட்சம் வரை விற்கப்படுகிறது.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள், கோழிகள் போன்று வெளிநாட்டு சிலந்திகள், பாம்புகள், தேள்கள், பல்லிகள், ஓணான்கள் போன்றவையும் செல்ல பிராணிகளாக நிறைய பேர் வளர்க்கின்றனர். தஞ்சாவூரில் மட்டுமே கிட்டத்தட்ட 10 பேர் வளர்த்து வருகின்றனர். கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து என்னிடம் ஏறத்தாழ 500 பேர் வாங்கிச் சென்றுள்ளனர்.
இந்தச் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு வனத் துறையின் 'பரிவேஷ்' என்கிற இணையதளத்தில் பதிவு செய்தால், அனுமதி கிடைக்கும். இதன் மூலம் இந்தச் செல்ல பிராணிகளை வளர்ப்பதற்கு எந்த வித பிரச்னையும் இருக்காது என்கிறார்'' ராபின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.