
ஹாலிவுட் சரித்திரத்தில் முக்கியமான நடிகர்களில் மார்லன் பிராண்டோ, 1950க்கு முந்தைய ஹாலிவுட் கதாநாயகர்களில் நான்காவது பெரிய ஹீரோ என்ற பெருமைக்குரியவர்.
1999ஆம் ஆண்டில் 'டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட 'இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்கள்' என்ற பட்டியலில், ஹாலிவுட்டில் இருந்து இடம்பெற்றவர்கள் மூவரில் ஒருவர் மார்லன் பிராண்டோ (மற்ற இருவர் சார்லி சாப்ளின், மர்லின் மன்றோ).
1924ஆம் ஆண்டு ஏப். 3இல் அமெரிக்காவின் நெப்ரஸ்கா மாகாணத்தில் இருக்கும் ஒமாஹா நகரத்தில் பிறந்த - அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் தருணம் இது. இதற்காக, அவர் நடித்த பல முக்கிய திரைப்படங்களைப் பிரத்யேகமாகத் திரையிட்டு, நெகிழ்வுடன் நினைவு கூறுகிறது ஹாலிவுட்.
மார்லன் பிராண்டோவின் தந்தை பூச்சிக்கொல்லி மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்தவர். அவர் வேலை நிமித்தம் தொடர் வெளியூர் பயணம். எனவே, அவருடைய தாய் டோரோத்தி ஜூலியா புகழ் பெற்ற நாடகக் குழுவில் நடித்தார். அபரிமிதமாகக் குடிப்பது அவரது பழக்கம். (பின்னாளில் தன் அம்மாவை நினைத்தால் ஜின் வாசனைதான் முதலில் நினைவுக்கு வரும் என தனது சுயசரிதையில் பிராண்டோ எழுதியிருக்கிறார்).
சிறு வயதிலிருந்தே நாடகச் சூழலில் வளர்ந்த பிராண்டோ, அடுத்தவர்களைப் பார்த்து நடிக்கும் திறமையைப் பெற்று விளங்கினார். மாடுகளையும், குதிரைகளையும் பார்த்தால், அவற்றைப் போலவே 'மிமிக்ரி' செய்து காட்டியும் அசத்துவார்.
ஒரு கட்டத்தில் பெற்றோர் விவாகரத்தாகி, அம்மாவால் வளர்க்கப்பட்டார் பிராண்டோ. பள்ளியில் நாடகத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைக்க, அதில் தோன்றி முழு திறமையையும் வெளிக்கொணர்ந்தார். நடிகனாக வேண்டும் என தனக்குள்ளே இலக்கை நிர்ணயித்தவாறு அதற்கான பயணத்தைத் தொடங்கினார். அவருடைய இரண்டு மூத்த சகோதரிகளும் நடிப்புத் துறையில் இருந்த நிலையில், மகனின் விருப்பப்படி நியூயார்க்கில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் மகனைச் சேர்த்தார் பிராண்டோவின் தாய்.
'ஐ ரிமம்பர் மமா' என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அந்தக் கதாபாத்திரத்தின் பெயராலேயே 'நெல்ஸ்' என்று புகழ்பெற்றார் பிராண்டோ. புரட்சிக்கரமான நாடகங்களில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். ரஷியாவின் மேடை நடிப்பில் கடைப்பிடிக்கப்பட்ட 'மெத்தட் ஆக்டிங்' என்ற நடிப்புப் பாணி ஹாலிவுட்டில் பின்பற்றப்பட்ட காலத்தில், பிராண்டோவின் நடிப்பு அதையும் தாண்டி சிறப்பாக இருந்துள்ளது.
1940களில் அமெரிக்க மெத்தட் ஆக்டரும் நாடக ஆசிரியருமான எலியா கசன் இயக்கத்தில் வெளியான 'தி மென்' என்ற படத்தின் மூலமாக மார்லன் பிராண்டோ ஹாலிவுட்டில் அறிமுகமானார். அதன்பிறகு, அவரது இயக்கத்தில் 'எ ஸ்ட்ரீட் கார் நேம்டு டிஸையர்', 'ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்' ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழின் உச்சிக்குச் சென்றார்.
1954இல் வெளியான 'ஆன் தி வாட்டர் ஃப்ரெண்ட்' படம் கடற்கரையோரத்தில் வசிக்கும் மாலுமிகள், துறைமுகத் தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள், வன்முறைகள் பற்றியதாகும். இந்தப் படம் 12 அகாதெமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, 8 விருதுகளை வென்றது. படத்தில் பிராண்டோ வெளிப்படுத்தியிருந்த யதார்த்த நடிப்பு உலகம் முழுவதும் ரசிகர்களை உருவாக்கியது. நடிப்புக்கான முதல் ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுக் கொடுத்தது.
ஆனால் புரட்சிக்கரமான கொள்கைகள் மீது பிடிப்பு கொண்ட பிராண்டோ அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் நடத்தப்படும் முறை குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக விருதை ஏற்க மறுத்தார்.
பிராண்டோ புரட்சிக்கரமான விவசாயியாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம் 'விவா சபதா'. மார்லன் பிராண்டோவின் அபாரமான நடிப்பு இன்றளவும் பேசப்படும் இன்னொரு படம் மாபியா கிரைமைக் கதைக்களமாகக் கொண்ட 'தி காட் ஃபாதர்'. இந்தப் படத்தில் அவர் நியூயார்க் மாகாணத்தின் மிக பெரிய நிழல் உலக சாம்ராஜ்யத்தின் தலைவராக டான் விடோ என்ற பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்துக்காகவும் பிராண்டோவுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.
1978இல் வெளியான 'சூப்பர்மேன்' படத்தில் சூப்பர்மேனின் தந்தையாக நடித்த பிராண்டோவை 'சூப்பர் ஹீரோ' என ரசிகர்கள் புகழ்ந்தனர்.
தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட பிராண்டோ ஹாலிவுட்டில் தனக்கென்று கணினியைப் பயன்படுத்திய முதல் நபர் என்ற பெருமைக்குரியவர். தகிதி என்ற ஒரு தீவை சொந்தமாக வாங்கி, அங்கே கடற்பரப்பில் விவசாயம் செய்தார். கடலில் இருந்து மின்சாரம் தயாரித்து அதைக் கொண்டு ஏர் கண்டிஷனரை இயக்கினார்.
புத்தகங்கள் வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவரின் சொந்த நூல் நிலையத்தில் 4 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன.
பழங்குடியினர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. என்ற ரகசிய புலனாய்வு அமைப்பின் கண்காணிப்புக்கு உள்ளானவர் பிராண்டோ.
பிராண்டோவின் வாழ்க்கை வரலாறு 1994இல் நூலாக வெளியானது. அவரது வாழ்க்கையின் பல விஷயங்கள் அதில் இடம்பெறவில்லை என்பது அதற்கு 20 ஆண்டுகள் கழித்தே தெரியவந்தது. அவர் தனது சொந்தக்
குரலில் பேசி, ஒலிப்பதிவு செய்த சுமார் 300 மணி நேர ஒலிநாடாக்களை ஒரு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டபோது, அதில், அவர் தன் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், தந்தையாக அவர் சந்தித்த பிரச்னைகள், பெரும்
புகழை சமாளிக்க முடியாமல் திணறியது, திரைத் துறைக்கு வருவதற்கு முன்னர் சூப்பர் மார்க்கெட்டில் லிஃப்ட் இயக்குபவராக ஹோட்டலில் பணியாளராக தொழிற்சாலையில் காவலாளியாகவும் வேலை பார்த்தது போன்ற விஷயங்கள் தெரியவந்தது.
1994இல் வழக்குரைஞர், 'உங்களுக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருது ஒரு லண்டன் நிறுவனத்தால் ஏலம் விடப்படுகிறது'' என்று சொன்னபோதுதான், அந்த விருது களவு போன விஷயமே பிராண்டோவுக்குத் தெரியவந்தது. ஆனால் அதுகுறித்து அவர் கவலைப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.