
ஒலிம்பிக்ஸில் ஒரு வெண்கலப் பதக்கம் பெறுவதே மிகவும் சிரமம். தொடர்ந்து ஐந்து ஒலிம்பிக்ஸ்களில் 5 தங்கப் பதக்கங்களைப் பெற்றால் பிரபஞ்ச சாதனை என்றுதானே சொல்ல முடியும்'' என்கிறார் மிஜைன் லோபஸ்.
கியூபாவைச் சேர்ந்த இவர், பெய்ஜிங், லண்டன், ரியோ, டோக்கியோ ஒலிம்பிக்ஸ்களில் நான்கு முறையும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். மிஜைன் பங்குபெற்ற ஐந்தாம் ஒலிம்பிக்ஸ் 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸிலும் ஐந்தாவது தங்கப் பதக்கம் பெற்று உலக நாடுகளின் ஆச்சரியக் குறியாக மிஜைன் மாறியுள்ளார். மிஜைனுக்கு நாற்பத்து ஒரு வயதாகிறது.
மிஜைன் மல்யுத்தத்தில் ‘கிரேகோ - ரோமன்' ஆரம்பம் முதல் கலந்துகொண்டிருக்கிறார். உடல் எடையைப் பொறுத்து உள்பிரிவுகள் மாறி போட்டியிட்டாலும் மல்யுத்தத்தில் ‘கிரேகோ - ரோமன்' பாணியை மாற்றிக் கொள்ளவில்லை.
ஒலிம்பிக்ஸ் சரித்திரத்தில் அதிகபட்சம் தனிநபராக நான்கு தங்கப் பதக்கங்களை நான்கு ஒலிம்பிக்ஸில்களில் வென்றவர்கள் நான்கு பேர்தான். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல்
ஃபெல்ப்ஸ் (நீச்சல்), கார்ல் லூயிஸ் (நீளம் தாண்டுதல்), ஆல்ஃபிரட் ஓர்டர் (தட்டு எறிதல்) மற்றும் டென்மார்க்கைச் சேர்ந்த பால் எல்வ்ஸ்ட்ரோம் (படகோட்டம்) ஆகியோருக்கு அடுத்ததாக, ஐந்தாவதாக மிஜைனும் இடம் பிடித்திருந்தார்.
சுமார் 20 ஆண்டுகளாக தனது உடல் கட்டமைப்பையும், உலக சாதனை நிகழ்த்த வேண்டும் என்ற முனைப்பையும் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது சாதாரண விஷயம் அல்ல!
இந்திய நவீன ஹாக்கியின் கடவுள்..:
ஆடவர் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. வெண்கலப் பதக்கத்துக்காக நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியா ஹாக்கியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு 1980- க்கு பின்னர் நழுவிக் கொண்டேயிருந்தது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்ஸில்தான் வெண்கலம் வென்று அந்த நீண்ட இடைவெளியை முடிவுக்குக் கொண்டு வந்தது. 52 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையையும் புரிந்துள்ளது. 1968, 1972 ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தொடர்ந்து இரண்டு முறை பதக்கங்களை வென்றது. இதுவரை ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
"2024 ஒலிம்பிக்ஸில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி, இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்தையாவது தட்டி எடுக்குமா?' என்று ஆர்வலர்கள் ஏங்க, இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ், ""இதுவே எனது கடைசி போட்டி'' என்று அறிவித்துவிட்டார்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்களை அடித்து ஸ்பெய்ன் அணியை அதிர்ச்சி அடையச் செய்தார். இந்த வெற்றி மூலமாக இந்திய அணி 52 ஆண்டுகளுக்கு பின் அடுத்தடுத்து ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் 2 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. கடைசி நேரத்தில் ஜெர்மனி அணி பெனால்டி கார்னர் மூலம் அடித்த பந்தை "கோல் எல்லை சாமி'யாக நின்று ஸ்ரீஜேஷ் தடுத்து விட்டார்.
இதனால் "இந்தியா 2 கோல்கள் - ஸ்பெயின் ஒரு கோல்' என்று உறுதியாகி, இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷை தனது தோளில் தூக்கிக் கொண்டாடினார். பின்னர், ஸ்ரீஜேஷ் கீழே இறங்கியதும் தனது "டிரேட்மார்க் கொண்டாட்டமான' கோல் போஸ்ட் மீது ஏறி கால்களை ஆட்டி வெற்றியைக் கொண்டாடினார். "இந்திய நவீன ஹாக்கியின் கடவுள்" என்று ஸ்ரீஜேஷு க்கு புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
அழகு என்றால் ஆபத்தா?
அழகாக, அதுவும் அட்டகாசமான அழகுடன் இருப்பது பாவமா? என்பதே பாரிஸ் ஒலிம்பிக்ஸில் எழும்பியிருக்கும் கேள்வியும் இதுதான்!
பராகுவே நாட்டைச் சேர்ந்த இருபது வயது நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்ஸோ "கவர்ச்சிகரமான உடைகளை உடுத்துவதுடன் சக விளையாட்டு வீரர்களுடன் சஜமாகப் பழகியது லுவானாவுக்கு வினையாக மாறிவிட்டிருக்கிறது. தவிர ஏனைய ஆண் போட்டியாளர்களின் கவனத்தை சிதறடிக்கிறார்' என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அமெரிக்காவில் டல்லாஸ்ஸில் இருக்கும் பல்கலைக் கழக மாணவி. இன்ஸ்டாகிராமில் அவரை சுமார் ஒன்பது லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் "100 மீட்டர்' பட்டர்பிளை பிரிவில் அரைஇறுதிப் போட்டிவரை சென்று பிறகு முன்னேற முடியவில்லை.
சக வீரர்கள், வீராங்கனைகளை உற்சாகப்படுத்த அவர் தங்கியிருந்தபோது, "எங்களால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியவில்லை' என்று சிலர் புலம்பத் தொடங்கினர். ஒரு வீரர் தைரியமாகத் தன்னுடைய குழு தலைவரிடம் லுவானா அழகு குறித்த புகார் செய்யவே, லுவானாவை திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.
நான் இதுகுறித்து கூடுதல் விளக்கம் அளிக்க விரும்பவில்லை, இது எனது கடைசிப் போட்டி. நான் நீச்சலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்" என்று லுவானா அலோன்சோ கண்ணீருடன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.