குன்றக்குடி ஆதினம் விதைத்த விதை!

இலக்கியம் இருக்கிறதே அது மனித மனதை வசீகரிக்கக் கூடியது. சிலர் வாசகர்களாக நின்று அந்த சாகரத்தை ரசிப்பார்கள்.
குன்றக்குடி ஆதினம் விதைத்த விதை!
Published on
Updated on
4 min read

இலக்கியம் இருக்கிறதே அது மனித மனதை வசீகரிக்கக் கூடியது. சிலர் வாசகர்களாக நின்று அந்த சாகரத்தை ரசிப்பார்கள். சிலர் தாங்களும் படைப்பாளிகளாக வேண்டும் என்ற விருப்பம் கொண்டு மனத்தின் மொழியை வெளிப்படுத்துவார்கள். எழுத்தாளராக வாசிப்பு அனுபவம் அதிகமாகத் தேவைப்படும்.

எழுத்தாளன் சுதந்திரமாகத் தன்னுடைய உணர்வுகளை, அனுபவங்களை, கற்பனைகளை வடிவம் கொடுத்து இலக்கியமாக்க முடியும். படைப்பாளிக்கும் மேலே உரையாசிரியர் என்ற நிலை இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு அதன் அர்த்தத்தை இன்றைய தலைமுறையினர் புரிந்துகொண்டு அனுபவிக்க வசதியாக விளக்கம் எழுதித் தந்து வாசகனுக்கும் இலக்கியத்துக்கும் இடையே பாலமாக இருக்கின்றனர். இந்த நிலையை அடைய வாசிப்பில் விடாமுயற்சி, தேர்ந்த இலக்கியப்புலமை, இலக்கண அறிவு எனத் தவம் இயற்ற வேண்டும். அப்படித் தவமாய்த் தவமிருந்து சமய இலக்கியங்களுக்கு உரையாசிரியராக உயர்ந்திருக்கிறார் பள்ளத்தூர் பழ. பழனியப்பன்.

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், பெரியபுராணத்துக்கு 9 தொகுதிகளாக உரை எழுதி வெளியிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அவருடன் ஓர் சந்திப்பு:

இலக்கிய நாட்டத்துக்கான முதல் விதையை உங்களுக்குள் விதைத்தவர் யார்?

நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது இலக்கிய மன்றத்தில் மகாகவி பாரதியார் பற்றி உரையாற்றினேன். அந்த நிகழ்ச்சிக்கு குன்றக்குடி ஆதினம் வந்திருந்தார். அந்த உரையின் நடுவே நான் சற்று உணர்ச்சிவயப்பட்டு கண்ணீர் பெருக்கினேன். அன்றைக்கு ஆதீனம், , "இவர் போன்ற மாணவர்களை என்னிடம் என்னுடைய ஆசிரமத்துக்கு அனுப்புங்கள். நான் இவர்களைத் தமிழ்ப் பேரறிஞர்களாக ஆக்குகிறேன்" என்றார். அந்த ஆசியே முதல் விதை என்று சொல்ல வேண்டும்.

தமிழ் மீது தீராக்காதல் எப்போது எப்படி ஏற்பட்டது?

பள்ளியில் நான் சிறப்புத் தமிழ் படித்தேன். எங்களுக்குப் பாடம் சொல்லித் தந்த தமிழ் ஆசிரியர்கள் அருமையாக சொல்லிக்கொடுத்தனர். டி. டி. ராமச்சந்திர சாஸ்திரிகள், மாயவரம் ராமமூர்த்தி, புலவர் என்று நுண்மாண்நுழைபுலம் கொண்ட ஆசிரியர்கள் வாய்க்கப் பெற்றது வரம். மன்னர் கல்லூரியில் தேவராஜ் என்ற பேராசிரியர் இலக்கியத்தில் அற்புத அனுபவங்களைப் பெற வழிகாட்டினார்.

கல்லூரியில் படிக்கும்போது, திருச்சியில் மூன்று ஆண்டுகள் புலவர் கீரனோடு தங்கியிருந்தேன். அவர் உரையாற்றச் செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே நானும் போவேன். அவர் பேசுவதை ஆர்வ மிகுதியால் குறிப்பு எடுத்துக் கொள்வேன். இதனால் பக்தி இலக்கியங்களில் எனக்கு ஈர்ப்பு உண்டாயிற்று.

இலக்கிய ஆர்வம் என்பதைத் தாண்டி உரையாசிரியராக எப்படி மாறினீர்கள்?

நாமக்கல்லில் நான் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போவேன். அப்படி ஒருநாள் அசரீரி போல, "தினமும் சுத்துறியே என்ன செய்யப் போறே?" என்று கேட்டது. அது எனக்குள் கேள்வியை எழுப்பியது. "அனுமனின் விருப்பம் ராமாயணம்தானே. அதனால் கம்பராமாயணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்ற முடிவுக்கு வந்தேன்.

கம்ப ராமாயணத்துக்கு உரை எழுதலாம் என்றால் முதலில் பல உரைகளைப் படித்து என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், இன்றைய தலைமுறைக்குப் புரியும் வகையிலும் எளிமையாகவும் என்னுடைய நடையில் விளக்கவுரை எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பல இடங்களிலும் பழமையான கம்பராமாயண உரையைத் தேடினேன். கிடைக்கவில்லை. கடைசியில், சென்னையில் மறைமலையடிகள் நூல் நிலையத்தில் இருப்பதை அறிந்தேன். அங்கு வெளியில் தர மாட்டார்கள். அங்குதான் அமர்ந்துப் படித்தேன். மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் நூலகத்தில் நல்ல கம்பராமாயணம் தொடர்பாக,

உ. வே. சா. உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உரை, கோவை கம்பன் அற நிலையம் வெளியிட்டுள்ள உரை ஆகியன கிடைத்தன. முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். இந்தத் தயாரிப்புக்கே நான்கு ஆண்டுகள் ஆயின. படித்த மூன்று உரைகளையும் ஆதாரமாகக் கொண்டு என்னுடைய நடையில் கம்ப ராமாயணத்துக்கு உரை எழுதினேன். ஒன்பது தொகுதிகள் எழுதி முடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின. நல்ல வரவேற்பு கிடைத்தது. உற்சாகம் அடைந்தேன்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு உரை எழுதும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

சிலம்பொலி செல்லப்பனை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவருடைய எழுத்தில் கம்பீரம், பேச்சில் ஒரு தெளிவு நம்மை வசீகரிக்கும். ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அவர் தொடர்ந்து 18 மாதங்கள், 4 வாரங்கள் ஆழ்வார்கள் பற்றிய தொடர் சொற்பொழிவு ஆற்றினார்.

நானும் விடாமல் தொடர்ந்து உரையைக் கேட்டு, குறிப்புகளை எடுத்தேன். அவரும், "இதுகுறித்து எழுதுங்கள்' என்று ஊக்கப்படுத்தினார். அப்படித் தொடங்கியது தான் நாலாயிர திவ்யப்பிரபந்த உரை.

அதற்கு பெரியவாச்சான் பிள்ளை உரை சம்ஸ்கிருத கலப்பு இருக்கும். காஞ்சிபுரம் பிரதிவாதி பயங்கரம், திருமலையில் பெருமாளுக்குப் பாடும் சுப்ரபாதம் இயற்றிய அன்னமாச்சாரியார் ஆகியோர் அழகாக நாலாயிர திவ்யப்பிரபந்த உரை எழுதியிருக்கின்றனர்.

இவர்களின் உரைகளை அடிப்படையாக வைத்து 12 தொகுதிகள் கொண்ட நாலாயிர திவ்யப் பிரபந்த உரை கொண்டுவந்தேன். இதற்கு, 5 ஆண்டுகள் ஆயின. இந்தத் தொகுப்பை ஆர். எம். வீரப்பன் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் ஆகியோர் வெளியிட்டனர்.

வைணவ இலக்கியங்களுக்கு உரை எழுதிய நீங்கள் சைவநெறி நின்ற பெரியோர்களின் சரிதமான பெரியபுராணத்துக்கு உரை எழுத அவசியம் என்ன வந்தது?

சைவம், வைணவம் என்று இல்லை. தமிழ் என்பதுதான் எனக்குத் தெரிந்தது. "வைணவ இலக்கியங்களுக்கு நிறைய உரைகள் இருக்கின்றன. திருமுறைகளுக்கு மிகக் குறைவாகவே விளக்கவுரைகள் இருப்பதால் திருமுறைகளுக்கு விளக்கம் எழுதுங்கள். நானே வந்து வெளியிடுகிறேன்' என்று அவ்வை நடராஜன் அன்புக் கட்டளை இட்டார்கள்.

அதற்கான அபூர்வமான தற்போது பதிப்பில் இல்லாத நூல்களை அவரே வரவழைத்துக் கொடுத்தார்.

சிவாலயம் மோகனும் நூல்களைத் தந்து ஆதரித்தார். அதை ஏற்றுக் கொண்டு பெரிய புராணத்தில் இருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

அப்படி உருவானதுதான் ஒன்பது தொகுதிகள் கொண்ட "திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரியபுராணம் உரை. எனக்கு எழுதும்பொழுது என்ன சந்தேகம் வந்தாலும் தெ. ஞானசுந்தரத்திடம் கேட்டுத் தெளிவு பெறுவேன். அவர் தந்த கருத்து என்பதையும் பதிவிட்டுவிடுவேன். சேக்கிழார் விழாவில் வெளியிட்டுள்ளோம். குன்றக்குடி அடிகளாரும் பொம்மபுர ஆதினமும் நூலை வெளியிட நல்லி குப்புசாமி செட்டியார் பெற்றுக்கொண்டனர்.

உங்கள் விளக்கவுரையின் சிறப்பு அம்சம் யாது?

பெரியபுராணத்துக்கு எட்டு உரை நூல்கள் இருக்கின்றன. அனைத்தையும் படித்து உள்வாங்கிக்கொண்டு இன்றைய இளைஞர்களுக்குப் புரியக் கூடிய மொழியில் தந்திருக்கிறேன். முதலில் பாடல்களைச் சீர் பிரித்து படிக்க வசதியாகத் தந்திருக்கிறேன். அதையடுத்து, அந்தப் பாடலுக்கான அருஞ்சொற்பொருள்களைத் தந்திருக்கிறேன். அடுத்து பொழிப்புரை. இந்த இரண்டு பத்திகளை அடுத்து மூன்றாவதாக என்னுடைய விளக்கத்தை, புதிதான தகவல்கள், ஒப்புமை கொண்ட தகவல்களை இணைத்துக் கொடுத்திருக்கிறேன். அதையும் கதைப் போக்கில் சொல்கிறேன். எளிமை, கூடுதல் தகவல்கள், ஒப்பீட்டு முறை இவை தான் என்னுடைய உரையின் சிறப்பு அம்சங்கள்.

ஒப்பீட்டுத் தகவல்கள், புதிய தகவல்களை நீங்கள் எப்படி சேகரிக்கிறீர்கள்?

நான் எந்த நூலைப் படித்தாலும் அதில் முக்கியமானதே அடிக்கோடிட்டுக் கொள்வேன். தனியாகக் குறிப்பும் எழுதுவேன். அப்படி எழுதும்பொழுதே மனதில் ஒரு ஒப்பீடு தோன்றிவிடுகிறது. எழுதினோம் என்பதால் பெரும்பாலும் அது மனதில் நின்றுவிடும். ஆகவே நூலில் குறிப்புகளைத் தருவதில் சிரமம் இல்லை. வாசிப்புதான் எழுத்தை சாத்தியமாக்கியிருக்கிறது.

அம்பத்தூர் கம்பன் கழகத்தை உருவாக்கியது பற்றிச் சொல்லுங்களேன்?

2007-இல் சென்னை கம்பன் கழக நிகழ்ச்சியைக் காண வந்தபோது, ஆர். எம். வீரப்பனை சந்தித்தேன். அவருடைய வழிகாட்டுதலின்பேரில் உருவானது தான் அம்பத்தூர் கம்பன்கழகம். முன்சீப் அருணாசலம் நிறுவனராகவும், நான் தலைவராகவும் இருந்து தொடங்கினோம். ஆர். எம். வீரப்பனும், அவ்வை நடராஜன் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து 507 வாரங்களாகத் தொடர்ந்து கம்பராமாயண வகுப்புகளை நடத்தி வருகிறோம். மாதந்திரக் கூட்டமாக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆண்டு விழாவை சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தோம். தமிழ்ச் சுடர் விருதுகளை 51 பேர் பெற்றிருக்கின்றனர். கரோனா காலத்திற்குப் பிறகு அதிலே சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அதையும் நடத்துவதற்கான முயற்சியில் இருக்கிறோம்.

இளைய தலைமுறையினர் வாசிப்பை எப்படி வசப்படுத்திக் கொள்வது?

முதலில் சிறிய நூல்களை எடுத்துக்கொண்டு பொருள் புரிந்து படிக்க வேண்டும். அதுவே உங்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அப்படியே உயர் இலக்கியங்களைப் படிப்பதற்கான ஆற்றல் ஆர்வம் ஏற்பட்டுவிடும். பக்தி இலக்கியங்களைப் படிக்க விரும்புவோர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நூல்களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவருடைய நூல்களானது எளிய தமிழ், கடினமான கருத்துக்களையும் சுலபமாகப் புரிய வைக்கும் முறை, நம்முடைய ஆர்வத்தைத் தூண்டி நம்மை மூழ்கடிக்கும்.

அதனால், அதிலே தொடங்கினால் திருமுறைகள் வரை விரைவாக வந்து விடலாம்.

நீங்கள் பெற்ற விருதுகளில் பெருமைக்குரியதாக எதை நினைக்கிறீர்கள்?

இலங்கையில் ஆறுமுக நாவலர் விருதும் பொற்கிழியும், இலங்கை ஜெயராஜ் வழங்கியது என் மனதுக்கு நெருக்கமானதாகவும் அங்கீகாரமாகவும் நினைக்கிறேன்.

இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடைய குடும்பம் பக்கபலமாக இருக்கிறது. பெற்றோரின் ஆசி. எந்தத் தொந்தரவும் இல்லாமல் பேரன், பேத்திகள் என அனைவரும் ஒத்துழைப்புத் தருகின்றனர். நான் பணி ஓய்வு பெற்று கிடைத்த பணம் முழுவதையும் இதற்காகவே செலவிட்டேன். என் குடும்பத்தினர் சம்மதித்தனர். குடும்பத்தின் ஆதரவு இருந்தால் மட்டுமே பெரிய செயல்களில் வெற்றி பெற முடியும்.

வானதி பதிப்பகத்தார் தோள் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் படிக்காத என்னைத் தமிழறிஞர், தெ. ஞானசுந்தரம் போன்றவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இறை அருள் மட்டுமே காரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com