
சிற்பங்களின் முன்னோடியான சித்திரங்களே பழங்காலக் கோயில்களில் அரிய பொக்கிஷங்களாக வரலாற்றை அறிய உதவுபவையாக இன்றும் உள்ளன. மண்டபங்கள், கருவறைச் சுவர்கள் உள்பட பல இடங்களிலும் வரையப்பட்ட இயற்கை வண்ண ஓவியங்களான மூலிகை சித்திரங்களே தமிழர்களின் பண்பாட்டை அறிய உதவும் ஆவணங்களாகக் காட்சியளிக்கின்றன.
காலங்கள் செல்லச் செல்ல அந்த மூலிகை ஓவியங்கள் சிதைந்துவருகின்றன. இப்படிப்பட்ட அரியவகை சித்திரங்களான செங்காவி சித்திரங்களை இன்றைய சூழலுக்கேற்ப வரைந்து ஓவியங்களாக்கி காட்சிப்படுத்தி வருகிறார் நாற்பத்து நான்கு வயதான ஏ.கே.துரை.
புதுச்சேரி வில்லியனூர் அரசூரில் வசித்துவரும் இவர், தமிழகப் பகுதியான வானூர்கண்டை கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
அவரிடம் பேசியபோது:
'ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தேன். சிறு வயதிலேயே எனக்கு ஓவியத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.
எங்கள் கிராமத்தில் உள்ள திரெüபதியம்மன், அய்யனார் கோயில் திருவிழாக்களில் சுவாமி எழுந்தருளும் வாகனங்களுக்கான வர்ணம் பூசுவோரிடமிருந்தே ஓவிய ஆர்வம் ஏற்பட்டது.
தையல், தச்சு, வெல்டிங் என பல தொழில்களைக் கற்றாலும், ஓவியம் சார்ந்த தொழிலில்தான் அதிக விருப்பம். அதன்படி எனது பதினைந்தாவது வயதில் புதுச்சேரிக்கு வந்தேன். தனியார் ஓவியக் கூடத்தில் சேர்ந்து பணியாற்றினேன். எனக்கான விருப்பம் நிறைவேறாததால், திரும்பவும் சொந்த ஊர் சென்று கோயில் கட்டடக் கலை ஒப்பந்ததாரரிடம் சேர்ந்து பணியாற்றினேன். அப்போதுதான் கோபுரச் சுதைகளையும், கரிக்கட்டி சித்திரங்களையும் அறிய முடிந்தது. அதனையடுத்தே செங்காவி சித்திரங்களையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.
சிதம்பரம், கும்பகோணம் ஆகிய இடங்களில் சித்திர வேலைப்பாடுகளில் கோயில்கள்தோறும் ஈடுபட்டு வருவோரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதுதான் தமிழர்களின் பாரம்பரிய வரலாறு மூலிகை வகை ஓவியங்களால் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிந்தது. அந்த ஓவியங்களின் வரலாற்றை அறிந்து வியந்துபோனேன்.
ஆகம விதிமுறைப்படி கட்டப்பட்ட கோயில்களில் சுவாமி சித்திரங்களும், புடைப்புச் சிற்பங்களும் ஆகம நூல்களை ஆய்ந்து கற்றவர்களால் படைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதேபோல நாமும் ஓவியங்களை வரைய முயற்சித்தேன்.
சுவாமி சிற்பங்கள் இயற்கை வண்ணங்களால் வரையப்பட்டிருந்தன என்றாலும், அத்தகைய ஓவியங்கள் அனைத்துச் சுவர்களிலும் வரையப்படவில்லை. ஓவியங்கள் இருந்தது சுண்ணாம்பு சுவர் என்றாலும், அதில் கடுக்காய், தண்ணீர், முட்டையின் வெள்ளைக்கரு போன்ற கலவையும் இருந்ததை அறியமுடிந்தது. ஆகவே, ஓவியங்கள் அழியாமலிருக்க தண்ணீரில் நனையாத பொருள் அந்த வர்ணத்தில் கலக்கப்பட்டிருப்பதையும் அறியமுடிந்தது.
சுண்ணாம்புச் சுவர்களின் வாழ்நாள் காலம் குறிப்பிட்ட நூற்றாண்டுகள் மட்டுமே என்பதை அறிந்தபோது, அதில் வரையப்பட்ட செங்காவிச் சித்திரங்களும் காலமாற்றத்தில் காணாமல் போகும் அவலம் இருப்பதை அறிந்தேன். அதன் விளைவுதான் செங்காவி சித்திரங்களை மீட்டெடுக்கும் வகையில், பாரம்பரிய மூலிகை முறையில் வர்ணம் தயாரித்து வரைந்து வரும் தற்கால ஓவியங்களாக உள்ளன.
செம்மண், கரித்துண்டு, கொழுப்பு உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையே செங்காவி ஓவியங்களை வரைய பயன்டுத்தும் வர்ணப் பூச்சாக உள்ளன. அந்த வர்ணத்தைப் பயன்படுத்தி நெசவுத் துணியில் ஓவியத்தை வரைந்து வருகிறேன். ஒவ்வொரு ஓவியத்தையும் தவம் இருந்து எழுவது போல அதற்கான இலக்கணத்தோடு வரைந்து வருகிறேன். அதனால் ஓர் ஓவியம் வரைய குறைந்தது இரு வாரங்களாவது பிடிக்கிறது.
எனது செங்காவி சித்திரங்களை மீட்டெடுக்கும் வகையிலான தற்கால ஓவியக் கலைக்கு கும்பகோணம் வி.கே.சிவம், சிதம்பரம் சிவானந்தம் உள்ளிட்ட பலரும் அடிப்படை பயிற்சிக் குருநாதர்களாக இருந்தனர். அவர்களிடம் பணியாற்றிய காலத்தில் ஜெர்மன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள ஹிந்து கோயில்களிலும் பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள் வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
செங்காவி சித்திரங்கள் பல நூற்றாண்டுகளில் தனது பொலிவை எப்படி இழந்து வருகின்றன என்பதை பெண்ணின் முகத்தை செங்காவி வர்ணத்தில் ஓவியமாக்கியுள்ளேன். அதைப் பார்ப்பவர்கள், இதை எங்கோ, ஏதோ ஒரு பழங்காலக் கட்டடத்தில் அந்தச் சித்திரத்தைப் பார்த்திருக்கிறோம் என உணர்வது நிச்சயம். எதிர்காலத்தில் பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டபோது, எப்படி இருந்திருக்கும் என்பதை நினைவூட்டும் வகையிலும் ஓவியங்களைத் தீட்டவுள்ளேன்.
புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் திருப்பணியின்போது, செங்காவி சித்திரங்கள் அழிக்கப்பட்டதை அறிந்து வேதனையாக இருந்தது. அங்கு நடனமாடும் பெண் சிலையை அப்படியே செங்காவி வர்ணத்தில் ஓவியமாகத் தீட்டியுள்ளேன்.
பல கோயில்களில் செங்காவி சித்திரங்கள் இன்று இல்லாத நிலையே ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றுவதற்காகவே பல கோயில்களுக்குச் சென்று செங்காவி சித்திரங்களைப் பார்த்து, அதனையொத்த ஓவியத்தை செங்காவி வர்ணத்தில் வரைந்து வருகிறேன்.
குற்றாலத்தில் கோயில் பார்த்த தெய்வ திருவுருவங்களும் செங்காவி சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளன. இதுவரை விநாயகர், சரஸ்வதி என இருபதுக்கும் மேற்பட்ட செங்காவி வர்ண ஓவியங்களை வரைந்துள்ளேன். அவை தற்கால தலைமுறைக்கான காட்சி ஓவியங்களாகவே இருக்கும்.
தெய்வங்கள், ஆன்மிகக் குருக்கள், அரசியல் தலைவர்கள் என பலரின் திருவுருவங்களைச் சிற்பங்களாக்கி உள்ளேன்.
அருகிவரும் ஓவியக் கலையில் செங்காவி சித்திரங்கள் முக்கிய இடத்தில் உள்ளன. ஆகவே அத்தகைய அரிய வகை ஓவியக் கலையை இளந்தலைமுறையினருக்கு கற்றுத்தருவதற்கு ஆவலாக உள்ளேன். பள்ளி, கல்லூரிகளில் பழங்கால ஓவியப் பயிற்சி முகாம்களை நடத்தவேண்டும்.
"கோயில்கள் கட்டியது எதனாலே..? சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே...' என பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளை மனதில் கொண்டு, சிற்பக் கலையைப் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் துரை.
படங்கள்- கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.