மாற்றுத்திறனுடைய பதினைந்து பேர் 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு ஆகஸ்ட் 5 முதல் 15 வரையில், 11 நாள்கள் மேற்கொண்டனர்.
சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனுடையவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த நிகழ்ச்சியை வேவ் ரைடர்ஸ் குழுவானது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்தியது. இந்தச் சாதனையை "வேர்ல்ட் ரிக்காட்ஸ் யூனியன்' அமைப்பும் அங்கீகரித்தது.
மண்டபத்தில் இருந்து தொடங்கிய பயணம் காலை 6 முதல் மாலை 6 மணி வரை தொண்டி, கட்டுமாவடி, வேளாங்கண்ணி, தரங்கம்பாடி, பழையாறு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரி, மரக்காணம், மகாபலிபுரம், ஈஞ்சம்பாக்கம் கடல் மார்க்கமாக, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையை வந்ததடைந்தது.
நீச்சல் பயணத்தில் எம்.அபிநவ் காஞ்சி, கே.கணேஷ், ஹரேஷ் பரத்மோகன், ஜோஸ்வா அபிராம் இமானுவேல், கே.லக்ûக்ஷ குமார், லக்ûக்ஷ கிருஷ்ணகுமார், கே.லிதீஷ் கிருஷ்ணா, ஏ.மோகன்ராஜ், கே.சி.நந்திகா, கே.ரித்தேஷ், ரோஷன்ராஜ் லெனின், வி.சித்தார்த், ஆர்.ஸ்ரீராம் சீனிவாஸ், எம்.தேஜஸ், பி.விஷால் மாதவ் ஆகிய 15 பேர் நீச்சல் பயணத்தில் பங்கேற்று சாதனையைப் படைத்தனர்.
இந்தச் சாதனையை மேற்கொண்டது எப்படி? என்பது குறித்து நீச்சல் பயிற்சியாளர் எஸ்.அஜித்குமாரிடம் பேசியபோது:
'தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சென்னை ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் பயிற்சிக் குளத்தில் மாற்றுத்திறனுடையோருக்காக, நீச்சல் பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 70 பேர் வரையில், பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் கோவா, மைசூரு, கொச்சி போன்ற மாநகரங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில், பங்கேற்று பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.
இவர்களில் பதினைந்து பேரை சாதனை முயற்சிக்காகத் தேர்வு செய்தோம். இதற்காக, கடலில் நீச்சல் பயிற்சி பெற மெரீனா, கோவளம் கடற்கரையில் ஆறு மாதங்கள் தொடர்ந்து பயிற்சியை அளித்தோம். இவர்களில் கால் ஊனமிருந்த ஒருவரும், பார்வையற்ற ஒருவரும் அடக்கம். இதைத் தொடர்ந்து, சாதனை முயற்சியில் இறங்கினோம்.
"ரிலே' முறையில், ஒவ்வொருவராக மாறி மாறி, தொடர் பயணத்தை மேற்கொள்வர். பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், கோபி, கார்த்திக், சரண் ஆகியோருடன் நானும் மாற்றுத்திறனுடையோருடன் நீந்தினோம்.
ராமேசுவரத்தில் முதல் மூன்று நாள்கள் மாணவர்கள் நீச்சல் அடிக்கச் சற்று சிரமப்பட்டனர். புதிய இடம், புதிய சூழல் என்பதுதான் காரணம். இருந்தாலும் அவர்கள் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, துணிந்து முயன்றனர். அதற்குப் பிறகு அவர்கள் நன்கு நீந்தத் தொடங்கினர்.
மாமல்லபுரத்துக்கு வந்தவுடன் சற்று சிரமப்பட்டனர். பின்னர், அவர்கள் புதிய உத்வேகத்துடன் குறிப்பிட்ட இலக்கை கடந்துவிட்டு சாதனையை நிகழ்த்திவிட்டனர்.
இனி தொடர்ந்து பல சாதனைகளை நடத்த உள்ளோம்.
சாதனை நிகழ்ச்சியை நடத்த, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது பல உதவிகளைச் செய்ததோடு, கடல் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதியையும் பெற்றுத் தந்தது.
சாதனை நிகழ்ச்சி நடத்தியதற்காக, எங்கள் குழுவினரை இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியும் அழைத்துப் பாராட்டினர்.
ஆங்காங்கே கடற்கரையில் தங்குவதற்கான வசதிகளை தமிழ்நாடு மீனவர் சம்மேளத்தின் நிறுவனரும் தலைவருமான ஆர்.அன்பழகன் செய்துகொடுத்தார்'' என்றார் அஜித்குமார்.
சாதனையை நிகழ்த்தியவர்களில் ஒருவரான கே.ரித்தேஷின் தாய் கவிதாதேவி கமல்ஹாசனிடம் பேசியபோது:
'மாற்றுத்திறன் குழந்தைகள் பிறந்துவிட்டால் சோர்ந்துவிடக் கூடாது. அவர்களது தனித்திறன்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
நான்கு வயதாகும்போதே எனது மகன் கடற்கரைக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவான். அப்படியே அழைத்துச் செல்வோம். கடற்கரையும் நீச்சலும் அவனுக்குப் பிடித்திருப்பதை அறிந்தோம். இதையடுத்து, அவனது ஐந்தாம் வயதிலேயே நீச்சல் பயற்சியில் சேர்த்துவிட்டோம். பல போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்று, இப்போது சாதனையாளராக மாறியுள்ளான். மகிழ்ச்சி அளிக்கிறது. நீச்சல் பயிற்சியைத் தவிர, நன்றாக ஓடவும் செய்வான்.
தற்போது தேசிய திறந்தநிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பை நிறைவு செய்துள்ளான் எனது மகன். நிறைய சாதனைகளைப் புரிவான் என்ற நம்பிக்கையும் உள்ளது.
மாற்றுத்திறனுடைய குழந்தைகள்புத்திசாலித்தனத்துடனும், சிந்தனை வளமும் பெற்று இருப்பார்கள். பெற்றோர் சோர்ந்துவிடாமல், அவற்றைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.
மாற்றுத்திறனுடையோர் சாதனைகளைப் புரிய அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஊக்குவித்தால், மேலும் பலர் சாதனைகளைப் புரிவார்கள்'' என்றார் கவிதாதேவி கமல்ஹாசன்.