
வாழ்க்கையின் எந்தப் பக்கத்தைத் திறந்து பார்த்தாலும் அதில் ஆச்சரியங்கள் நிறைந்து இறைந்து கிடக்கிறது. அப்படித்தான் இது. பெரிய திட்டமிடல் இருந்தது. ஈரமான மனசுகள் நாம் எதிர்பார்க்காத இடங்களில் இருக்கிறது. எங்கே அன்பும், மனிதமும் உருவாகி உருகி ஓடுகிறது என்று தேடினால், உங்களுக்குக் கிடைப்பது எதிர்பாராத திருப்பங்கள்.
உங்களின் சந்தோஷத்திற்கும், நிறைந்த எதிர்பார்ப்பிற்கும் நிச்சயம் கேரண்டி. முழுப் படத்தையும் கையில் வைத்துக் கொண்டுதான் நம்பிக்கையோடு பேசுகிறேன். நானே ரசிக மனப்பான்மையால் பார்த்து ரசித்துதான் சொல்கிறேன்.
ஆர்வமாக பேசத் தொடங்குகிறார் ஐ.பி.முருகேஷ். இயக்குநர்கள் சுசீந்திரன், சீனுராமசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இப்போது 'மலை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மலை மக்களின் வாழ்வோடு பிணைந்த கதையா....
ஆமாம், அதுதான். காடு, மலைகளை பாதுகாப்போம் என்பதுதான் இந்தக் கதையின் ஆதாரம். 1970-களில் இந்தியா முழுமையும் 'சிக்கோ மூவ்மெண்ட்' என்று ஒரு முயற்சி நடந்தது. மலைவாழ் மக்களை காடுகளை விட்டு வெளியேற்றும் முயற்சி அது. பெண்கள் மரங்களை கட்டிப்பிடித்து வனங்களை விட்டு வெளியேற மறுத்த காட்சிகள் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்தன.
அந்தப் போராட்டம் இந்தியா முழுமையும் பரவி நீண்டது. அது போன்று இப்போதும் பல போராட்டங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஆங்காங்கே நடக்கிற சம்பவங்களின் சிறு துளிதான் இது. இங்கே தமிழகத்தில் வாழுகிற பழங்குடி இன மக்களும், அங்கே சொகுசு ரிசார்ட்டுகளைக் கட்ட வருகிற ஒரு குழுவுக்குமான சம்பவங்களாக அதை தொகுத்து பின்னி வந்திருக்கிறேன். அதன் பின் நாமெல்லாம் கவனம் கொள்கிற மனிதம், அன்பு, காதல் இங்கே முக்கிய பங்கு வகுக்கிறது.
எப்படி உருவானது....
இந்தக் கதை அப்படியே மனதில் இருக்கிற சித்திரம். விளைநிலத்தை கூறு போட்டு விற்றுக் இருக்கிறோம். மலையை குடைந்து எம் சாண்ட் ஆக்கி கட்டடம் கட்டுகிறோம். விவசாயிகள் எல்லாம் சென்னை பக்கம் வந்து ஏ.டி.எம்., பங்களா, ஐ.டி. வாசலில் செக்யூரிட்டியாக நின்று கொண்டு இருக்கிறார்கள். இப்படி பல விஷயங்கள் கதைக்குள் என்னை இழுத்து போனது. சோறு இல்லை என்பதுதான் எதிர்காலக் குரலாக இருக்கப்போகிறது.
தொழில்புரட்சி பசியைப் போக்காது. விஞ்ஞானத்திற்கு அரிசியை மந்திரம் மாதிரி உருவாக்கத் தெரியாது. பழங்குடி இன மக்களின் குரலை காரமும், சாரமுமாக பதிவு செய்கிறேன். இது நம் மண்ணின் கதை. நம் பூர்வீக மக்களின் சரிதம். இது வேறு மாதிரி இருக்கும்.
எந்த மாதிரியான ஆளுகை கதையில் இருக்கும்...
தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிப்போம் என்று நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆனால், நாளை காற்றுக்கும் காசு கொடுத்து வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை வரும். நடப்பவற்றை பார்த்தால், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. மீத்தேன் தொடங்கி இப்போது பரபரப்பாக பேசுகிற வயநாடு நிலச்சரிவு வரைக்குமான போராட்டங்களும், உணர்வுகளும் இதில் உண்டு.
இயற்கைக்கும், அது தருகிற செல்வத்திற்கும் அங்கே இருக்கிற மக்கள் அமோகமாக இருக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன? இயற்கை அழிந்துகொண்டு இருக்கிறது. அதனால் இழப்பு, நமக்குத்தானே தவிர இயற்கைக்கு இல்லையென்று யாருக்கும் தெரியவில்லை. மலை மக்களின் குரல் இதிலே பதிவாகியுள்ளது.
சொல்லப் போனால் இதில் என் குரலும், உங்களின் குரலும் அடங்கியிருக்கிறது. எந்த விதத்திலும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் பிரதான பகுதி. மலை மக்களிடம் மிச்சம் இருப்பவை வாழ்வின் மீதான தீராத நம்பிக்கையும், நம் மண்ணின் சொற்களும்தான். ஏதோ ஒரு நாளில் தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேறும் அல்லது துரத்தப்படும் கணங்கள் செத்துப் போகிற வரைக்கும் மறக்குமா என்ன....?
சுற்றுலா வளர்ச்சி என்பது இங்கே இன்றியாமையாத விஷயமாகவும் மாறி வருகிறது...
அது தவறில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் விலை வைக்க ஆரம்பித்ததால்தான் மனிதம் மட்டும் மலிவாகி விட்டது. இதோ மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, எத்தனை தமிழ் கிராமங்களின் தூக்கத்தை தொலைத்திருக்கிறோம். பணம் வாழ்க்கையில் இரண்டாம் பட்சம் ஆகி விட்டால், உலகத்தில் நம் வாழ்க்கையில் பாதி பிரச்னைகள் இல்லாமல் போய் விடும். இன்னும் நிறைய நல்ல மனிதர்கள் கிடைப்பார்கள். நல்ல தலைவர்கள், ஆன்மிகவாதிகள், அதிகாரிகள் கிடைப்பார்கள்.
சரிபாதி குற்றங்கள் தொலைந்து விடும். தேவைக்குத்தான் பணமே தவிர, ஆசைக்கு பணம் இல்லை. பசி, வலி... இந்த இரண்டையும் ஜெயிக்க தெரிந்து விட்டால் வாழ்க்கையை ஜெயித்து விடலாம். வயிற்று பசிக்கு சாப்பிடத்தான், நமக்கு பணம் தேவை. ஆனால், நாக்கு ருசிக்காகச் சாப்பிட ஆரம்பிக்கும்போது, பணத்தின் மீது நமக்கு வெறியாகிறது.
இலக்குகள், லட்சியவாதங்கள், அரசியல் எதுவும் இல்லாத எளியவர்களின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியானது. வாழ்க்கையை அதன் உண்மையோடும், அன்போடும் கொண்டாடுபவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களை விட்டு விடுங்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்லி விட முடியும்.
மலை வாழ் பின்னணிக்கு இசையும், ஒளிப்பதிவு கைக் கொடுப்பவை...
ஒளிப்பதிவுக்கு தேனி ஈஸ்வரை விட்டால், யார் இருக்கா... அவருக்கென உதாரண படங்கள் ஏகமாக இங்கே உண்டு. அது போல் இசைக்கு இமான். இந்த இரண்டு பேரும்தான் கதைக்கு அவ்வளவு ஆதாரம். யுகபாரதியின் வரிகள் குரங்கணி, கொட்டக்குடி மலை வாழ் வாழ்க்கை அப்படியே வரிகளாக்கி வந்திருக்கிறது.
இன்னொரு சிறப்பு அம்சம் மறைந்த பாடகி வாணி ஜெயராம் பாடிய கடைசிப் பாடல், இந்தப் படத்துக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரேயா கோஷலின் குரலில் இன்னொரு பாடலும் சிறப்பு சேர்க்கிறது. யோகிபாபு, லட்சுமிமேனன், காளி வெங்கட் என எளிய முகங்கள். அழகாக வாழ்ந்திருக்கிறார். இயற்கையின் சமநிலைக்கே எதிரான இயற்கையின் வியூகங்கள் வந்து விட்டன. இதையெல்லாம் ஆராய்ந்து கதை எழுதினேன். அங்கே ஒரு காதல், கலாசாரம், பண்பாடு என்று கதை தனக்கு தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.