கோயில்களைக் கட்டிய சிற்பிகள்

கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக் கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
Published on
Updated on
3 min read

கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக் கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.

'எவ்வாறு மண்டபத்தூண்களைச் செதுக்கினார்கள்; எவ்வாறு நிறுத்தி கட்டினார்கள்' என்பதெல்லாம் வியக்கவைக்கிறது. கோயில்கள் மன்னர்களின் விருப்பப்படி கட்டப்பட்டாலும், அதனை உரிய சிற்ப நூல்களின்படி கட்டியவர்கள் சிற்பிகள்தான். தமிழகக் கோயில்கள் கட்டடக்கலை சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்திலும் இருந்தன. இவை காலப்போக்கில் அழியும் தன்மை உடையதால் அக்காலக் கோயில் அமைப்பை பற்றி அறிந்து கொள்ள

இயலவில்லை. ஆனால், பல்லவ மன்னர்கள் காலத்திலிருந்து கற்கோயில்கள் அமைக்கப்பட்டன.

விழுப்புரம் அருகே உள்ள மண்டகப்பட்டு குடைவரைக் கோயிலானது பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் காலத்தில் எடுப்பிக்கப்பட்டது. திருமால், நான்முகன், சிவனுக்கு மரமின்றி, சுதையின்றி, உலோகமின்றி, செங்கலின்றி தோற்றுவித்ததாகக் கூறும் கல்வெட்டு இங்குள்ளது.

கற்றளிகள்: தேவார மூவரான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் போற்றி பாடப் பெற்ற பெரும்பாலான தலங்கள் செங்கற்கோயிலாக இருந்தன. பல்லவர் காலத்தில்தான் கோயில்கள் கருங்கற்களால் கட்டப்பட்டன. இந்தப் பணி சோழ மன்னர் காலத்தில் மேலும் சிறப்பு அடைந்தது.

கோயில்கள் முழுவதும் கற்கோயிலாக மாற்றப்பட்டன. இதனை 'கற்றளிகள்' எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. கோயில்களை கற்றளிகளாக மாற்றுவதற்கும், அதில் கல்வெட்டுகளைப் பொறிப்பதற்கும் சிற்பிகள் தேவைப்பட்டனர். இவர்களை சூத்திரகிராகி, தச்சர், வர்த்தகி, ஸ்தபதி என நான்கு பிரிவுகளாக சிற்ப நூல்கள் குறிக்கின்றன.

'சூத்திரகிராகி' என்பவர் நூல் பிடித்து கல்லின் மீது வேண்டிய அளவுகளைக் குறியிட்டு கொடுப்பவர். 'தச்சர்' என்பவர் பல்வேறு உருவங்களை செதுக்கும் வல்லமை படைத்தவர். குறிப்பிட்ட அளவுகளுக்கு ஏற்ப செதுக்கப்பட்ட கற்களையும் சிற்பங்களையும் உரிய இடத்தில் பொருத்தி கட்டடங்களை எழுப்ப வல்லவர் 'வர்த்தகி' எனப்படுவார். இவர்கள் அனைவரின் பணிகளை ஒன்றிணைத்து முழுப்பொறுப்பை ஏற்று முடிப்பவர் 'ஸ்தபதி' என அழைக்கப்படுவார்.

கோயில்களில் உள்ள பெரும்பாலான கல்வெட்டுகளில் சிற்பிகள் 'தச்சர்' என்றே குறிக்கப்படுவதைக் காணலாம். பல கோயில்களில் பணிபுரிந்த சிற்பிகளின் பெயர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புகள் போன்றவையும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

மாமல்லபுரம் கோயில்களை அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட சில சிற்பிகளின் பெயர்கள் பூஞ்சேரி கிராமத்தில் பாறை ஒன்றில் காணப்படுகின்றன. கேவாத பெருந்தச்சன், சாதமுக்கியன், குணமல்லன், திருவொற்றியூர் ஆபாஜன் என்ற சிற்பிகளின் பெயர்கள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.

உத்திரமேரூரில் சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்தக் கோயிலின் அளவுகளை - அலங்காரங்களை யார் அறிகிறாரோ அவர் வாஸ்து வித்தையில் (கோயிற்கலை) சிறந்து விளங்குகிறார் என்று கல்வெட்டு குறிக்கிறது. ஸ்ரீ பரமேசுவர பெருந்தச்சன் என்ற சிற்பியால், இக்கோயில் எடுப்பிக்கப்பட்டது.

சோழமன்னர்கள் காலத்தில் பல கோயில்கள் கற்றளிகளாக (கற்கோயிலாக மாற்றப்பட்டன. இப்பெரும் பணியைச் சிறப்பாகச் செய்தவர் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார். திருவாரூர், திருக்கோடிகாவல் போன்ற கோயில்கள் இவரால் கற்றளிகளாக மாற்றப்பட்டன. 'ஸ்ரீசெம்பியன் மாதேவிய திரைமூர் காட்டுத் திருக்குரங்காடுதுறை ஆழ்வார்க்கு எடுப்பித்தருளின இத்திருக்கற்றளி' என ஆடுதுறை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாறு கோயில்களை கற்றளிகளாக மாற்றிய சிற்பிகளின் வடிவங்களும் பல கோயில்களில் காணப்படுகின்றன.

நன்னிலம் வட்டத்துக்கு உள்பட்ட சேங்காலிபுரம், துந்துபீசுவரசுவாமி கோயிலில் காணப்படும் கல்வெட்டில் சிற்பியின் வடிவத்துக்கு அருகில் 'இத்திருக்கற்றளி திருப்பணி செய்வித்தான் கங்கைகொண்ட சோழபுரத்து முடிகொண்ட சோழப்பெருந்தெருவில் இருக்கும் சாலிகன் கெளதமன் தில்லை வனமுடையான் அரியான்' எனப் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கற்றளியாக செய்தவர்கள் 'கற்றளிபிச்சர்கள்' எனப்பட்டனர்.

திருவாவடுதுறை கோயிலில் கருவறை சுவரில் வழிபடும் கோலத்தில் காணப்படும் சிற்ப உருவத்துக்கு மேலே 'கற்றளிப்பிச்சன்' எனப் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கோயிலைக் கட்டிய சிற்பி ' அருகூர் தச்சன் ஆகிய திருவாமாத்தூர் ஆசாரியன்' எனக் காணப்படுகிறது.

உலகமே வியந்து போற்றும் தஞ்சைப் பெரிய கோயிலை எடுப்பித்தது முதலாம் ராஜராஜ சோழன். அந்தக் கோயிலை கட்டிய சிற்பி 'வீர சோழன் குஞ்சரமல்லன் ஆன இராஜராஜப்பெருந்தச்சன்' என்பவர் ஆவார். இவருக்கு உதவியாக குணவன் மதுராந்தகனை நித்த வினோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற சிற்பிகள் இருந்தனர் என்பதை கல்வெட்டுகளின் மூலம் அறிய முடிகிறது. இந்தக் கோயில் முழுவதும் கல்லால் கட்டப்பட்ட சிறப்பு உடையது.

இராஜராஜ சோழனின் தலைமை தேவியான லோக மகாதேவி திருவையாற்றில் லோகமகாதேவீச்சுரம் என்ற கோயிலை கட்டினாள். இக்கோயிலை கட்டிய சிற்பி 'கலியுகரம்பை பெருத்தச்சன்' என்பவர் ஆவார். சென்னை நகரின் அருகில் உள்ள திருவொற்றியூர் கோயில் கருவறையை முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் 'ரவி' என்ற 'வீரசோழ தச்சனால்' மூன்று தளம் உடைய விமான அமைப்புடன் கருங்கல்லால் கட்டப்பட்டது என்பதை கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

தச்சுமுழம்:

இவ்வாறு தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் பணிபுரிந்த சிற்பிகள் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. சிற்பிகள் - ‘தச்சர்கள்' என அழைக்கப்படுவதைப் பார்த்தோம். மேலும் கல்தச்சர், தச்சாசாரியன், சிற்பி, சிற்பாச்சாரி என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு ஊதியமாக நிலம் அளிக்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட நிலம் ஆசாரியதட்சிணை, சிற்பவிருத்தி, தச்சாசாரியக்காணி, சில்பியின் காணி என்றெல்லாம் அழைக்கப்பட்டன.

சிற்பிகள் தாங்கள் கோயில்களைக் கட்ட பயன்படுத்திய அளவு கோல்களையும் பொறித்து வைத்துள்ளனர். அதற்கு 'தச்சுமுழம்' என்பது பெயர். திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் போன்ற கோயில்களில் சிற்பிகள் பயன்படுத்திய தச்சுமுழ அளவுகளைக் காணலாம்.

இவை சிற்பிகளின் சிற்ப உருவங்களுக்கு அருகிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கோயிலில் வடக்கு கோபுரத்தில் நான்கு சிற்பிகளின் சிற்பங்கள், பெயர்களுடன் காணப்படுகிறன. 'விருத்தகிரியில், சேவகப் பெருமாள்' அவன் மகன் விசுவமுத்து திருபிறைக்கோடை ஆசாரி, அவன் உடன் பிறந்தான் காரணாச்சாரி என்பதே அவர்களின் பெயர்கள். இவர்கள் வடக்கு கோபுரத்தைக் கட்டியதில் பங்கு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

கும்பகோணம் அருகில் உள்ள கோனோரிராஜபுரம் கோயில் 'திருநல்லம்' என அப்பர் பெருமானால் போற்றப்படுகிறது. இக்கோயில் செம்பியன்மாதேவி தன் கணவர் பெயரால் அவர் நினைவாகக் கற்றளியாக்கினார் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. கற்றளி செய்தவரின் சிற்ப உருவமும், பெயரும் கருவறை சுவரில் காணப்படுகிறது.

கல்வெட்டில் 'மதுராந்தக தேவரான உத்தம சோழனை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்தூருடையான் சாததன் குணபட்டன் ஆன அரசரன சேகரன் - இவர் பட்டங்கட்டின பேர் இராஜகேசரி மூவேந்த வேளான்' எனக் குறிப்பிடப்படுவதைக் காணலாம். இக்கோயிலைக் கட்டிய சிற்பிக்கு 'ராஜகேசரிமூவேந்தவேளான்' என்ற பட்டம் அளித்து போற்றியிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஆவுடையார்கோயில், குடுமியான்மலை, மதுரை, திருநெல்வேலி, கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, தாரமங்கலம், தென்காசி, ராமேசுவரம், ஸ்ரீரங்கம் போன்ற பல கோயில்களில் காணப்படும் நுண்ணிய வேலைப்பாடு மிக்க கற்சிற்பங்கள் சிறப்புமிக்கவை.

அந்தக் கோயில்கள் கட்டிய மன்னர்களும் தங்கள் பெயர்களையும் உருவங்களையும் மட்டும் கோயில்களில் பொறித்து வைக்க நினைக்காமல், சிற்பிகளை மறந்துவிடாமல் கல்வெட்டுகளில் குறிப்பிட்டும் அவர்களின் உருவங்களை சிற்பமாக கோயில்களில் அமைத்தும் பெருமை சேர்த்திருக்கின்றனர்.

'கல்லிலே கலைவண்ணம் காட்டும் சிற்பிகள்' வெளிநாடுகளிலும் கோயில்களை கட்டுவித்து பெருமைச் சேர்க்கும் அரும்பணி சிறப்பாக நடைபெற்றுள்ளது.

தொல்லியல் துறை (பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com