தீராத உறவுகளின் அற்புதம்!

மனசுக்குள் கதை ஓட ஆரம்பித்ததும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும்.
தீராத உறவுகளின் அற்புதம்!
Published on
Updated on
2 min read

மனசுக்குள் கதை ஓட ஆரம்பித்ததும், கூடவே அதற்கான ஒரு கற்பனை முகமும் ஓட ஆரம்பிக்கும். அதில் கச்சிதமாக பொருந்திய முகம் சமுத்திரக்கனி. " திரு.மாணிக்கம்' கிட்டத்தட்ட தயார். இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறேன். ஆங்காங்கே எது வேண்டும், எது வேண்டாம் என்று முடிவு எடுக்கிற நேரம்.

அதுதான் இந்தப் பரபரப்பு... கதை சொல்கிற அளவுக்கு அதில் புத்திசாலித்தனத்தையும் காட்ட வேண்டும் அதுதான் இப்போதைக்குமான என் வேலை''. தாடியை நீவியபடி சிரிக்கிறார் நந்தா பெரியசாமி. கதை ஆழமிக்க சினிமாக்களை தரக்கூடியவர்.

உணர்ச்சியாக, சந்தோஷமாக அதே நேரத்தில் சிந்திக்க கூடிய படமாகவும் "திரு.மாணிக்கம்' வந்திருக்கிறது. திரைக்கதை எழுதும்போது என்ன சந்தோஷம் இருந்ததோ, அதையே சினிமாவாக மாற்றும் போதும் அனுபவித்தேன். அடிமட்டத்திலிருந்து சினிமா பார்த்து முன்னேறி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

மக்களின் அவலம் புரியும். துயரம் தெரியும். நமது இயலாமை, இல்லாமைகளை உணர்ந்திருக்கிறேன். என் சினிமா உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைய என் அனுபவங்களே உதவுகின்றது. தொட்டு உணர்கிற மாதிரி உணர்வுகள் என் சினிமாவில் வந்தால் அதை விட கொடுப்பினை வேறு இல்லை...''

குடும்ப கதைகளுக்கான ரசிகர்களின் மன நிலை இப்போது மாறி வந்திருக்கிறதே....

உறவின்றி அமையாது உலகு. இதுதான் இந்தக் கதையின் அடி நாதம். கிராமத்து மனசும், மணமும் மறக்காத படம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கலாம். தொலை தொடர்புகள் நம்மை வேற இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால், உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேர வேண்டும்.

இந்த கதை, உறவுகள் கூட பழையதுதான். ஆனால், அதை எனக்கான உணர்வாக, மனிதனாக காட்சிப்படுத்தியதுதான் புதிது. வசதி மட்டுமே சந்தோஷம் இல்லை. உறவுகளும் அதன் அர்த்தங்களும்தான் இங்கே உண்மை.

எங்கே நிம்மதி, எப்போது சந்தோஷம் என்று எதையும் எளிதாக அர்த்தப்படுத்திட முடியாது. உறவுகளுக்குள் உள்ள புரிதல், அந்த அற்புதம் பதிவாகியுள்ளது. கால சூழல், பருவத்தின் மாற்றம் எல்லாம் சேர்ந்து விவசாயத்தை அழிவு நிலைக்கு கொண்டு வந்தது மாதிரிதான்.... இப்போது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலும் மாறுதல்கள்.

விஞ்ஞானம் எல்லாவற்றிலும் இருந்து நம்மை வெளியேற்றி விடுகிறது. இதில் வருகிற ஹீரோ சமுத்திரக்கனி கூட பாசம், அன்பு, உறவுகள் என அர்த்தப்படுத்தி வாழ்கிற ஆள். ஆனால் அவரை சுற்றி தவற விடுகிற மன நிலையை குடும்பம், உறவுகள் என வகைப்படுத்தியிருக்கிறேன்.

இது உறவுகளை முன்னிறுத்துகிற கதை. நான் உங்களிடம் அன்பு செலுத்துகிறேன் என்றால், அதற்குப் பதிலாக வருகிற அன்பு இன்னும் நேர்த்தியாக இருந்தால்தான் மனதை அள்ளும். தீராத உறவுகளின் அற்புதம் இது. உறவுகளை மீறி இங்கே எதுவுமே இல்லை.

சமுத்திரக்கனி படம் என்றாலே பிரசார தொனி இருப்பது போன்ற உருவகம் இங்கே உண்டு...

இலக்குகளுடன் இந்த பெரு நகரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் போது, எங்கோ நின்று ஊரை, மனிதர்களை, காதலை, நட்பை நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சு கணத்து ஞாபகங்கள் முளை விடுகின்றன.

அப்படி எனக்குள் உருவான ஓர் அம்சம்தான் இதன் கரு. இன்றைக்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் சுற்றிக் கொண்டிருப்பவர்களில் முக்கால் வாசி பேர் கூட்டுக் குடும்பத்தின் பிள்ளைகள்தான்.

அவர்களுக்கு உறவுகள்தான் ஆதாரம். அன்பு, காதல், பரிவு... கதையை நகர்த்தும் கரு. மண்ணை, உறவின் மகத்துவத்தை, ஆழத்தை முன் வைக்கிற கதை. நாம் பெரிதாக இழந்தது கூட்டுக் குடும்பம். சில மனிதர்களின் அன்பில் சுருங்கி, வேறு முகம் பார்க்க ஆளில்லாமல் கிடக்கிறோம்.

இந்தக் கதையைச் சொன்னதும் சமுத்திரக்கனி அண்ணனுக்கு அவர் கிராமத்தின் அழகு, உறவுகள் ஞாôபகத்திற்கு வந்திருக்கலாம். இப்போதுமே அவர் தமிழ் மண்ணின் முகம். ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார்.

பாரதிராஜா, நாசர், அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி என படம் முழுக்க நம்பிக்கையான நடிகர்கள் தெரிகிறார்கள்...

ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு.

ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாரதிராஜா இந்த கதையின் மீது இருந்த நம்பிக்கையால் வந்து நடித்துக் கொடுத்தார். கிராமங்களில் பார்த்து ரசித்து உணர்ந்த கேரக்டர்களையெல்லாம் கொண்டு வந்து இங்கே வைத்து விட்டேன். எல்லோரும் கதையை கேட்டதும் நெகிழ்ந்தார்கள். வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டார்கள்.

அதை நடத்தி முடித்திருக்கிறேன். அங்காளி, பங்காளி என வீட்டுக்குள் சில உன்னத உறவுகள். இவர்களையெல்லாம் சேர்த்து இருத்தி, நிறுத்தி, பொருத்தி கொண்டு வருவது சாதாரண வேலையில்லை. ஆறு மணிக்கு மேல் கால்ஷீட் கிடையாது. அப்படி எந்த விதிமுறையும் இங்கே இல்லை. இந்தக் கதையை உள்வாங்கி எல்லோரும் அப்படி நடித்துக் கொடுத்தார்கள். இது சினிமாவில் பெரும் ஆச்சர்யம்.

விஷால் சந்திரசேகர் இசை....

"சீதா ராமம்' படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார். படத்துக்கு அவரும் ஒரு பலம். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com