
தமிழ்த் தாய் கண்டெடுத்த அக்கினிக் குஞ்சு மகாகவி பாரதியார் மதுரையில் உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில், 1904-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதங்கள் வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய பதிவுகள் இந்தப் பள்ளியில் இன்றளவும் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் திரட்டிய நிதியில், 1966-இல் பள்ளி நுழைவுவாயிலில் பாரதியார் சிலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த தினம் (டிச.11) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், அவர் பிறந்த எட்டயபுரத்திலும், அவர் பணியாற்றிய மதுரையிலும் கேட்கவா வேண்டும்?
இங்கு காலை முதலே பாரதியின் அன்பர்களும், பல்வேறு அமைப்பினரும் திரண்டு மாலை அணிவித்து மரியாதையைச் செலுத்திய வண்ணம் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிகரமாக, தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை (டிச.11)நடைபெற்றது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதிக்கு விருதை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கி சிறப்பித்தார்.
கி. வைத்தியநாதன், தினமணி ஆசிரியர்
'காந்தியடிகள் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்று கேட்பவர்களுக்கு பதில் அளிப்பவர்தான் லட்சுமிகாந்தன் பாரதி. ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தாலும், இன்னமும்கூட எளிமைக்கும், நேர்மைக்கும் அடையாளமாக இருப்பவர் அவர்.
நீதித் துறையில் இன்றளவும் நீதியும், நியாயமும் அப்படியே நிலைத்து நிற்கிறது என்பதற்கு அடையாளமாக எடுத்துரைக்கப்படுகிற சிலரில் ஒருவர் நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன்.
விழாவுக்கு பாரதி அன்பர்கள் குவிந்திருக்கிறார்கள் என்றால், அவர்களை ஈர்ப்பது பாரதி. தமிழ்த்தாய் கண்டெடுத்த அக்கினிக்குஞ்சு அவர், அதனால்தான் அந்தக் கனல் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
எட்டயபுரத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு சில நூறுபேர் மட்டுமே கூடிய நிலையில், இன்று சில ஆயிரங்களில் கூடுகின்ற அளவுக்கு ஆண்டுதோறும் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மகாகவி பாரதி தமிழகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அணையா விளக்கு. எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு மண்டபத்தைச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும்.
பாரதியாரின் 13-ஆவது நினைவு நாளன்று (செப்.11,1934) அவரது நினைவுகளையும், கொள்கைகளையும், கனவுகளையும் தமிழ் மண்ணில் பரப்ப தினமணி நாளிதழ் தோற்றுவிக்கப்பட்டது. அதனால்தான் தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் பெயரில் விருது நிறுவப்பட்டது.
தினமணியால் சில ஆண்டுகளுக்கு முன்பு எட்டயபுரத்தில், முதலாவது மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பெரியவர் சீனி. விசுவநாதன். அவரால் காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டு, கௌரவித்திருக்கிறார்.
பெரியவர் சீனி. விசுவநாதன் சாதாரணமானவர் அல்ல. சங்கத் தமிழுக்கு உ.வே. சாமிநாதையர் எப்படியோ அதேபோல பாரதியாருக்கு ஒரு சீனி. விசுவநாதன் என்று கவியரசு கண்ணதாசனால் அடையாளப்படுத்தப்பட்ட மாமனிதர். இந்த வரிசையில் இன்று லட்சுமிகாந்தன் பாரதிக்கு விருது வழங்கப்படுகிறது.
பெரியவர் லட்சுமிகாந்தன் பாரதி, நாவலர் சோமசுந்தர பாரதியின் மகள் வயிற்றுப் பேரன். சோமசுந்தர பாரதியும், மகாகவி பாரதியும் சிறு பிள்ளை பருவத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். பாரதியை சுப்பையா என்றும், சோமசுந்தர பாரதியை சோமு என்றும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்வார்கள். இருவருக்கும் ஒரே நாளில் பாரதி என்ற விருது எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.
பாரதிக்காக நான் என்ன செய்திருக்கிறேன், பாரதியை நான் அறிந்தவனும் அல்லவே, எதற்காக இந்து விருது என்று லட்சுமிகாந்தன் பாரதி என்னிடம் கேட்டார். அப்போது, அவருக்கு பதில் அளிக்கவில்லை.
ஆனால், இப்போது பதில் அளிக்கிறேன். இந்த விருது லட்சுமிகாந்தன் பாரதிக்காக மட்டுமல்ல, ஒரே நேரத்தில் சுப்பையா பாரதிக்கும், சோமு பாரதிக்கும் சேர்ந்தே அளிக்கப்படுகிறது என்பதுதான் இதன் சிறப்பு.
நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்ட இடத்தில், பல நூறு தமிழறிஞர்கள் தமிழை வளர்க்கப் பாடுபட்ட இந்த மதுரை மண்ணில் ஆண்டுதோறும் இதேபோல மகாகவி பாரதியார் விருது வழங்கப்படும்' என்றார் கி.வைத்தியநாதன்.
ஜி.ஆர். சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
மிகப் பெரிய மனிதரான லட்சுமிகாந்தன் பாரதிக்கு விருது வழங்கப்படுவது பெருமைக்குரியது. நலமாக வாழ வேண்டுமெனில், நகைச்சுவை உணர்வு அவசியம் என்பதை லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்வியலில் இருந்து நாம் பின்பற்ற வேண்டும். எங்கும் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று விரும்பினார் பாரதியார்.
அரசமைப்புச் சட்டம் பிரிவு 348-இல் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு மனது வைத்தால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க முடியும்.
இந்தியாவில் 5 மாநிலங்களில் ஆங்கிலத்துடன் ஹிந்தியும் அலுவல் மொழியாக உள்ளது. இதேபோன்று, சென்னை உயர்நீதிமன்றத்திலும் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர பாரதியார் பிறந்த நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றார் ஜி.ஆர். சுவாமிநாதன்.
தியாகி லட்சுமிகாந்தன் பாரதி
மகாகவி பாரதியார் நமது தேசம் விடுதலை பெறுவதற்கு முன்பே, சுதந்திரம் பெற்றதாக 'ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று' பாடினார்.
பாரதியார் ஞானி. வள்ளுவர் திருக்குறளில் 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்கிறார். அதுபோன்றதொரு சிந்தனை பாரதி உள்ளத்திலும் எழுந்துள்ளது.
அவரது காலத்தில் சுதந்திரம் குறித்த தாகம் நெருப்பாக எரிந்துள்ளது. அதனால்தான் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ என்று பாடினார்.
மகாகவி பாரதியார், மகாத்மா காந்தி உள்ளிட்ட எண்ணற்ற சான்றோர்களின் தியாகங்களால் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகிறோம். தற்போதைய நிலையில் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. எனவே, பாரதியின் வழியில் பல்வேறு இன்னல்களுக்கிடையே பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
சங்கர சீத்தாராமன், மதுரைக் கல்லூரி வாரியத் தலைவர்
விடுதலைப் போராட்டக் காலத்திலிருந்து இன்று வரை நடுநிலையோடு செயல்படும் நாளேடு தினமணி. அத்தகு நாளிதழ் சார்பில் தகுதியான நபருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்படுவது பெருமை. வாழ்ந்த காலத்திலேயே பிற நாட்டின் அறிஞர்களாலும் அறியப்பட்டிருக்கிறார் மகாகவிபாரதி. இதை பாரதி ஆய்வாளர் ய.மணிகண்டனின் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
கோயில் என்றாலே மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றிலும் சிறந்து இருக்க வேண்டும். அத்தகைய பெருமை மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளிக்கு உண்டு. ஏனெனில், இது பாரதியார் பணியாற்றிய பள்ளி. அவர், இங்கு பணியாற்றி ஊதியம் பெற்றதற்கான ஆதாரங்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளியிலிருந்து மகாகவி பாரதியார் விலகிச் சென்றார் என எந்த ஆதாரமும் இல்லை' என்றார்.
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, முன்னாள் எம்எல்ஏ, வழக்குரைஞர்
மனுநீதி நாள் திங்கள்கிழமைதோறும் நடைபெறுகிறது. அதை முதன்முதலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கிவைத்த பெருமை லட்சுமிகாந்தன் பாரதியைச் சேரும். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நானும் லட்சுமிகாந்தன் பாரதியும் சந்தித்தோம்.
அப்போது, அந்த மாவட்ட ஆட்சியர், லட்சுமிகாந்தன் பாரதியிடம் நீங்கள் ஆட்சியராகப் பணிபுரிந்த காலத்தில் அரசியல்வாதிகளை எப்படி சமாளித்தீர்கள் என்றார். அதற்கு லட்சுமிகாந்தன் பாரதி அளித்த பதிலைக் கேட்ட அந்த மாவட்ட ஆட்சியர், அவரது காலில் விழுந்து வணங்கினார்.
எனவே, லட்சுமிகாந்தன் பாரதியின் அனுபவம், வாழ்க்கைப் பயணத்தை எதிர்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், நூலாக ஆவணப்படுத்த வேண்டும்.
படங்கள்: எஸ். அருண்
லட்சுமிகாந்தன் பாரதி ஓர் அறிமுகம்
தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட நயினார்கரம் என்ற கிராமத்தில் 1925-இல் வழக்குரைஞர் கிருஷ்ணசாமி பாரதி- லட்சுமி பாரதி தம்பதியின் மகனாகப் பிறந்தவர் லட்சுமிகாந்தன் பாரதி. தாய் லட்சுமியின் தந்தைதான் ஹிந்தி எதிர்ப்புப் போராளியும் தமிழறிஞருமான நாவலர் சோமசுந்தரபாரதி.
1942 ஆகஸ்ட் 9-இல் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டபோது, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த லட்சுமிகாந்தன் பாரதி மாணவர்களைத் திரட்டிப் போராடினார். சுதந்திரப் போராட்டத்துக்காக ரகசியக் கூட்டங்களை நடத்தியது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது, பெண் தியாகிகளை அவமானப்படுத்திய காவல் துறை அதிகாரியின் மீது திராவகம் வீசியது எனப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
ஆறு மாதங்கள் சிறைத் தண்டனையைப் பெற்று, அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
எந்த மதுரையில் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டாரோ, அதே மதுரையின் மாவட்ட ஆட்சியராகப் பிற்காலத்தில் பதவியில் அமர்ந்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, முதல்வரின் தனிச் செயலர், திட்டக் குழு உறுப்பினர்,சித்த மருத்துவ ஆணையர் என பணியாற்றினார்.
தற்போது திருச்செங்கோட்டில் இருக்கும் ராஜாஜியால் தொடங்கப்பட்ட 'காந்தி ஆசிரமத்தின்' தலைவராக இருந்து சேவை செய்து வருகிறார்.
எட்டயபுரத்தில்...
மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த தினத்தை (டிச.11) முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் பிறந்த இல்லத்தில், காலை முதலே பாரதி அன்பர்கள் குவியத் தொடங்கினர். அங்குள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனர் நாகராஜன் ஏற்பாட்டில், ஆசிரியர் அனிதா ரவிக்குமார் தலைமையில் வி.எம்.எஸ். சிலப்பப் பள்ளி மாணவர் - மாணவிகள் சிலம்பம் சுற்றியபடியே பாரதியார் இல்லத்தை வந்தடைந்தனர்.
இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பங்கேற்று மான்கொம்புகளைச் சுழற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதுதவிர, அவர்களின் பொய்க் கால் ஆட்டம், கலர் வலைகள் சுற்றுதல் போன்றவை காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
இதைத் தொடர்ந்து, பாரதியார் பிறந்த இல்லத்தில் இருந்து மணிமண்டபத்துக்கு பாரதி அன்பர்கள், மாணவ, மாணவியர்கள், பாரதியார் வேடமணிந்தோருடன் பாரதியார் பாடல்களைப் பாடியவாறு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ ஈரால் டான்போஸ்கோ கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம், தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியர்கள், பாரதியார் வேஷமணிந்து பங்கேற்றனர்.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' விளம்பரப் பிரிவு முதுநிலை துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ்குமார், எழுத்தாளர் ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளில், தென்காசி மருத்துவர் தங்கபாண்டியன் எழுதிய பாரதியார் கவிதைத் தொகுப்பையும், உரத்த சிந்தனை வாசகர் வட்ட மாநிலத் தலைவர் உதயம் ராம் தலைமையில் 'நம் உரத்த சிந்தனை' பாரதி மலரையும் 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வெளியிட்டார்.
பின்னர், பாரதி-ஜெயராமன் தமிழ் மன்ற நிறுவனர்-தலைவர் சு.ம.செந்தில்பிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'பாரதி பணியாளர் விருது', ரூ.25 ஆயிரம் நிதியுதவியை பாரதி பிறந்த இல்லக் காப்பாளர் செ.மகாதேவிக்கு 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்கினார். இந்த விருதுகுறித்து கவிஞர் ஜெயபாஸ்கரன் விளக்கி பேசினார்.
- ஒய்.டேவிட் ராஜா
படங்கள்: வீ. பேச்சி குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.