'தமிழர்களைப் போல உடல், மொழிகளில் வியத்நாமில் வாழும் சம்பா பழங்குடியினர்கள் ஒன்றுபட்டிருப்பதும், அவர்களது சாம் மொழியானது தமிழின் கிளை மொழியாகவே இருக்கிறது.
இங்கு 2025 ஜனவரியில் 'பன்னாட்டு தமிழர் நடுவம்' சார்பில் நடைபெறும் உலகத் தமிழர் மாநாட்டில், சம்பா மொழி குறித்த ஆய்வை முன்னெடுக்கும் களமாக அமைப்போம்' என்கிறார் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் க.திருதணிகாசலம்.
கடலூர் கடப்பன்சாவடியைச் சேர்ந்த தணிகாசலம் வேதியியல் துறையில் பட்டம் பெற்று, பின் சித்த மருத்துவராகி, தற்போது மொழி ஆய்வு விழிப்புணர்வு ஆர்வலராக இருந்துவருகிறார். புதுச்சேரிக்கு வந்த அவரிடம் பேசியபோது:
'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்தக் குடிகளால் மட்டுமே உலகளாவியச் சிந்தனைக்குச் செல்லமுடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியவர்கள் தமிழர்கள்.
நம் முன்னோர்களோ, 'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றனர். ' யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கனியன் பூங்குன்றனாரும், 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று மகாகவி பாரதியாரும் கூறினர்.
பண்டைய பட்டுப்பாதை வழியிலும் தமிழர்கள் பயணித்து வர்த்தகம் புரிந்துள்ளனர். அதன்படி சீனா, கம்போடியா, வியத்நாம், இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாமல்லபுரம், நாகப்பட்டினம், தொண்டி வழியில் தமிழர்கள் கப்பலில் சென்று வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர்.
பாரீஸில் உள்ள லூரி அருங்காட்சியகத்தில் பிரான்ஸின் ஐநூறு ஆண்டு வரலாற்றையே பிரமாண்டப்படுத்தியுள்ளனர். மோனலிசா ஓவியத்தை மட்டுமே அவர்கள் பெருமைக்குரியதாகப் பார்க்கின்றனர். அப்போது மிகப் பெரிய பாரம்பரியத்தை உடைய தமிழின் பெருமையை சர்வதேச அளவில் பரப்பும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
முகநூலில் அறிமுகமான முந்நூறு நண்பர்களின் உதவியுடன்தான் உலகத் தமிழர் நடுவம் ஏற்படுத்தப்பட்டது. முதல் இரு மாநாடுகள் கம்போடியாவில் 2018, 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. 2025 ஜனவரி 25, 26- ஆகிய தேதிகளில் மூன்றாவது மாநாடு வியத்நாமில் நடைபெறவுள்ளது.
வியட்நாம் நான்காம் நூற்றாண்டு முதலே தமிழ்நாட்டுடன் தொடர்புள்ள பகுதியாக இருந்துள்ளதை கல்வெட்டுகள், சீனக் குறிப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அங்கு திருமாறன் எனும் பாண்டி அரசன் சாம் பேரரசை நிறுவியுள்ளார். அவரைத் தொடர்ந்து செழியன், ருத்ரவர்மன், பொன்சீமான், பத்திர வர்மன், விக்ராந்தவர்மன், சிம்ம வர்மன், இந்திர வர்மன், பரமேஸ்வரர் உள்ளிட்ட மன்னர்களும் ஆட்சிபுரிந்துள்ளனர்.
பாண்டியர்களின் ஆட்சிக்கான ஆதாரமாக, வியத்நாம் டனாங் கடற்கரை நகரில் சைவ, வைணவக் கோயில்கள் இன்றும் உள்ளன. வியத்நாமின் தலைநகரில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் முந்தைய மாரியம்மன் கோயிலும் உள்ளது. தற்போது ஜப்பானியர்கள் பராமரிப்பில் உள்ள கோயிலில் தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர்.
மைசன் நகரில் உள்ள சிவன் கோயில் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. டனாங் எனும் இடத்தில் உள்ள 'சம்பா' எனும் மிகப்பெரிய அருங்காட்சியகம் சேதமடைந்துள்ளது. அங்கும் தமிழர்கள் வியத்நாமை ஆண்டதற்கான சாட்சிய ஆவணங்கள் பல உள்ளன. அதில் சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சிலைகளுடன், காரைக்கால் அம்மையாரின் திருவுருவச் சிலையும் உள்ளன.
மைசன் சிவன் கோயிலில் முகலிங்கம் இருக்கிறது. இதேபோன்ற லிங்கம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட பரமக்குடி அருகேயுள்ள கோயிலில் இருக்கிறது. இங்குள்ள முருகன், சிவன் ஆகிய தெய்வங்கள் மீசையுடன் இருப்பதும் ஆய்வுக்கானதாகும். ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைப் போலவே வியத்நாமிலும் பல இடங்களில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொன்மையை வியத்நாமில் பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
வியத்நாமின் மலைப்பகுதிகளில் வசிக்கும் சாம் பழங்குடியினர் பேசும் சம்பா மொழியானது தமிழின் உயிர், மெய் எழுத்துகளையே கொண்டுள்ளது. க, ஞ, ச, ன என தமிழைப் போலவே சம்பாவில் தொடங்கும் எழுத்துகள் ய, ர, ல, வ, ழ, ள என முடிவதும் தமிழைப் போலவே உள்ளன. சம்பா எழுத்துகளில் 95 % தமிழ் எழுத்துகளையே வடிவத்தில் உள்ளன.
சம்பா மொழியை ஆய்ந்த உலக மொழி ஆய்வாளர்களும், அது தமிழின் கிளை மொழி என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். பிராமி, தமிழ் பிராமி, பல்லவர் கால தமிழ், சம்பா என வழக்கத்தில் எழுத்து ஆராய்ச்சியாளர்களும் வகைப்படுத்துகின்றனர். சம்பாவின் சகோதர மொழிகளாக, கெமர், கவி, ஓல்டுமென், கிரந்தம், தமிழ் எனவும் வகைப்படுத்தியுள்ளனர்.
ஐந்து லட்சம் சாம் இனத்தவர்களின் உருவ அமைப்புடன், இறப்பு சடங்குகள் உள்ளிட்டவை தமிழர்களின் கலாசாரத்தைச் சார்ந்தே உள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க வியத்நாமில் உலகத் தமிழர் நடுவத்தின் மாநாடு நடத்தப்படுவது, சம்பா மொழி குறித்த ஆய்வை முன்னெடுக்கவேயாகும்.
உலக அளவில் மிக மூத்த பழங்குடியினர் பேசும் மொழிகளை நுட்பமாக ஆராய்ந்தால், அது தமிழின் ஆதிமொழி வடிவமாகவே இருக்கும்.
அந்த அளவுக்கு தொன்மை மொழியான நமது தமிழை, 'தமிழர் என்றோர் இனமுண்டு. தரணியில் அவருக்கோர் குணமுண்டு' எனக் கூறிய பாரதிதாசன் வழியில் இளையத் தலைமுறைக்கு எடுத்துச்செல்வது நம் கடமை' என்கிறார் திருத்தணிகாசலம்.
-வ.ஜெயபாண்டி, படம்: கி.ரமேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.