கலாசார மதிப்பீடுகள் உருமாறி விட்டன!

பெண்மையும் ஆண்மையும்: சமூக வலிகளை பேசும் அக்கரன்
கலாசார மதிப்பீடுகள் உருமாறி விட்டன!
Published on
Updated on
3 min read

ஆண்மையும் பெண்மையும் உருவங்கள் மட்டுமே இல்லை. அதில் அவ்வளவு உணர்வுகள் உண்டு. ஒருவருக்குள் ஒருவர் தொலையாமல், ஒருவருக்குள் ஒருவர் தேடாமல், அடைய வேண்டும் என்று நினைக்கிற போதுதான் அசிங்கமாகி விடுகிறோம். பெரும்பாலான ஆண்கள் அசிங்கமாக நிற்பதற்கு, பெண்மையை அடைந்து விட வேண்டும் என நினைப்பதுதான் காரணம்.

ஒருவரின் வலியை இன்னொருவர் புரிந்துக் கொள்ளும் போதுதான் வாழ்க்கை அழகாக மாறுகிறது. ஒரு விஷயத்தை இன்னொரு விஷயத்தில் தேடும் போதும், தொலைக்கும் போதும்தான் நாம மனிதர்களாக ஆகிறோம் என்பது நம்பிக்கை. பேச்சில் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் அருண் கே.பிரசாத். "அந்திரன்', "ஆண்டாள்' என இரு குறும்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர். இப்போது "அக்கரன்' படத்தின் மூலம் முழு நீள கதை சொல்ல வருகிறார்.

அக்கரன்.... தலைப்பின் உள்ளடக்கம் எப்படி...

அக்கரன் என்றால் அழிக்கமுடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள்...என அர்த்தம் கொள்ளலாம். தலைப்பிற்கு ஏற்றாற் போல் அந்த கதாபாத்திரமாகவே வாழும் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையும், சம்பவங்களும்தான் கதை.

இன்றைய சினிமா மிகவும் துணிச்சலாக பேச வேண்டிய விஷயம் இது. முதல் படம் என்பதால், இமேஜூக்குள் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதனால்தான் ஒரு கை பார்ப்போம் என இறங்கி வந்து விட்டேன். ஏதோ ஒரு விதத்தில் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்துக்கு பொறுப்பாகி விடுகிறோம். பெண்மை, கற்பு, ஒழுக்கம் போன்ற கலாசார மதிப்பீடுகள் எல்லாம் வேறு வேறு அர்த்தங்கள் பெற்று உருமாறி விட்டன.

இன்னும் சில காலங்களில் பண்பாடு, கலாசாரங்களில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியாமல் தவிக்கப் போகிறோம். பெண்கள் உடலளவில் பலவீனமானவர்கள் என்பதைத் தெரிந்துக் கொண்டு எத்தனை பிரச்னைகளை உருவாக்கி விடுகிறது சமூகம். இதனால் சொல்ல முடியாத தவிப்பில் இருக்கிறார்கள் பெண்கள். சிக்னலில் கார் துடைத்து விடும் சிறுமிக்குப் பின்னால் எத்தனை ஒரு ரணம் இருக்கும். நள்ளிரவில் பைக் மறிக்கும் விலை மாதுவுக்குப் பின் ஒரு ரம்மியமான காதல் இருந்திருக்குமோ. வறுமை, ஆதிக்க சக்தி

களின் பண பலம் என நிறைய விஷயங்கள் இதன் பின்னணியில் உண்டு. இந்தியாவின் வல்லரசு கனவு... சந்திரனுக்கு விண்கலம் என பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிற நாம், இன்னொரு பக்கம் ரணங்களை உள்நோக்கி பார்ப்பதில்லை. அப்படி ஒரு பார்வை இது முன் வைக்கும். பெண் கொடுமைகளுக்கு எதிரான தீர்க்கமான ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது.

பேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்ன எதிர்பார்க்கலாம்...

தில்லியில் தன் நண்பனோடு கைகோர்த்துப் போன மருத்துவ பெண் அப்படி ஒரு மூர்க்கமான சூறையாடலுக்கு ஆளாவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். ரத்தமும் துடிப்புமாக அல்லாடிய அந்தப் பெண் மனதில் எத்தனை கேள்விகள் ஓடியிருக்கும்? அந்தக் கணத்தை எப்படி கடந்து வந்திருப்பாள் அந்த பெண். நினைத்துப் பார்க்கவே அப்படி ஒரு கூச்சம். ஆணாகப் பிறந்த அத்தனை பேருமே கூனிக்குறுக வேண்டிய சம்பவம் இல்லையா அது? ஆனால், அதற்குக் கூட பெண்களின் உடைதான் காரணம், நடைதான் காரணம் என்று உள்ளர்த்தம் கற்பிக்கிறது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

தலைநகரில் நடந்த கொடூரம் தடம் தெரியாத குக் கிராமங்களிலும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதைக் கண்டும் காணாமலும் நாம கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம். பெண்களைக் காட்டிலும் ஆண்களை மனதாலும், உடலாலும் வலிமையாய் படைத்தது யாரையும் பலாத்காரப்படுத்த இல்லை... பத்திரமாய் பாதுகாப்பதற்கு. சாகப்போகிற கடைசி நிமிஷத்துல கூட, மனசுக்கு பிடித்தவனின் மடியில தலை சாய்க்க நினைக்கிறவர்கள் பெண்கள்.

அவர்களுக்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தராத இந்த சமூகத்தின் மீதான அதிரடி பாய்ச்சலாக இருக்கும். நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஒரு ஆறாத வலி இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும். அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை.

எம்.எஸ். பாஸ்கர் இருந்தாலே மினிமம் கியாரண்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது....

இதுதான் எம்.எஸ்.பாஸ்கர் என எந்த லேபிளையும் அவர் மீது ஒட்டி விட முடியாது. ஏராளமான பாகுபாடுகள் வந்தாலும், ஒரு கலைஞனாக அவர் அதை கையாளுகிற விதம் புத்தம் புதிது. மனசுக்கு பிடிக்காத எந்த காரியத்தையும் அவர் கடுமையாக எதிர்க்கிறார். அது ஒரு கலைஞனுக்கு முக்கியமான ஒன்று. அதே வேளையில் உதவி என்று வந்தால், அவரால் முடிந்தால் செய்து விட்டுத்தான் அடுத்த வேலைக்குப் போகிறார். எப்போதும் அணுகி பேசலாம். தரமான கதைகளை ஏற்றுக் கொள்வதில் தீர்மானமாக இருக்கிறார். மொத்தத்தில் இந்த நிமிஷம் நம்முடையது வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறார். வாய்ப்பு கிடைத்தால், இன்னொரு படத்திலும் அவரை இயக்க காத்திருக்கிறேன்.

அவர்தான் படம் முழுக்கவும் தூக்கி சுமக்கிறார். அவருக்கு இரு மகள்கள்... வெண்பா, பிரியதர்ஷினி.. "கபாலி' விஸ்வாந்த், வெண்பா, நமோ நாராயணன், "பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் ஆகாஷ் பிரேம்குமார் இப்படி நம்பிக்கையான நடிகர்கள்... ஒளிப்பதிவாளர் எம்.ஏ ஆனந்த், இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர், எடிட்டர் மணிகண்டன், கலை இயக்குனர் ஆனந்த் மணி, சண்டை பயிற்சியாளராக சரவெடி சரவணன் என நம்பிக்கையான தொழில்நுட்பக் கலைஞர்கள். :தமிழ் சினிமாஸ்' என்னும் பேனரில் தனபால் கணேஷ் மற்றும் ஷிவானி செந்தில் ஆகியோர் படத்தை வெளியிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com