உலக மாற்றம்? 

அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உலகம்  வெகுவாகச் சுருங்கிவிட்டது.
உலக மாற்றம்? 
Published on
Updated on
2 min read


அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் உலகம் வெகுவாகச் சுருங்கிவிட்டது. இருந்தாலும், நிலப் பரப்பில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்வதால், உலக வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை விரைவில் ஏற்படும்.
இந்தியாவின் "டெக்டோனிக் பிளேட்' எனப்படும் நிலத் தட்டுகள் நகர ஆரம்பித்திருக்கின்றன என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலத்தட்டு நகர்வு இமயமலையின் உயரத்தை வளரச் செய்யும் என்று முடிவு செய்துள்ளனர். ஆனால் அதேசமயம் திபெத் இரண்டாகப் பிரியலாம் என்று புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்திய, யூரேசிய கண்ட நிலத்தட்டுகள் இமயமலைத் தொடரின் கீழ் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்வதால் இமயமலையின் உயரம் அதிகரிக்க உதவுகிறதாம். பொதுவாக, இரண்டு நிலத் தட்டுகள் மோதும்போது, ஒரு தட்டு கீழாகவும் இன்னொரு தட்டு மேலாகவும் ஒன்றை நோக்கி ஒன்று நகரும். இமயமலைக்கு கீழே உள்ள நிலத்தட்டுகள் அடர்த்தியில் அமைப்பில் ஒன்றாக இருப்பதால் எந்தப் பகுதி நிலத்தட்டு இதர நிலத்தட்டின் மேல் அமரும் என்று இப்போது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இருந்தாலும், இந்தியப் பகுதியின் நிலத்தட்டு சரிந்து, திபெத் நிலத்தட்டின் கீழாகச் செல்லவே வாய்ப்புகள் அதிகமாம்.
எப்படியும் நிலத்தட்டுகள் நகர்வதால் பூமியின் வெகு ஆழத்தில் நிலத் தட்டுகளுக்கு இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும்.
புவியியல் விஞ்ஞானிகள் அடங்கிய ஒரு சர்வதேச குழு திபெத்தின் நிலப்பரப்பின் கீழ் நிலநடுக்க அலைகளை அண்மையில் ஆய்வு செய்தது. அதன்படி, இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் நிலச் சரிவுகள், நிலநடுக்கங்கள் நிகழும் வாய்ப்பு இருக்கின்றன என்றும் நிலப்பரப்பில் இமயமலைத் தொடரில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று முன்னறிவிப்பு தந்துள்ளனர்.
இந்திய- திபெத் நில அமைப்புகள் மாற்றங்களுக்கும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க கண்டத்தில் நிலமாற்றம் அரங்கேற்றம் தொடங்கிவிட்டது.
ஆப்பிரிக்கா இரண்டாகப் பிளந்து பிரியப்போகிறது. சிறு நிலப் பகுதி தீவாகப் போகிறது. இப்படி கண்டம் பிளவுபடுவது, பிரிவது மிக, மிக அரிதாக நடக்கும் நிகழ்வு என்று புவியியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் இன்று இருக்கும் அமைப்பில் இருக்கவில்லை. நிலநடுக்கம், சுனாமி போன்ற பிரளயங்கள், பூமிக்கு அடியில் நில தட்டுகளின் நகர்வுகள், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை நிகழ்வுகள் காரணமாக கண்டங்களின் உருவ மாற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
லெமூரியா கண்டம் இப்படித்தான் பிரிந்தது. பலகால இடைவெளிகளில் கண்டங்கள் பல சேர்ந்தும் பிரிந்தும் இப்போதைய நிலத் தோற்றத்தை அடைந்துள்ளது. ஏழு கட்டங்களாக உலகம் உருவானது. அந்த அமைப்பில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்துள்ளன.
மலைகள் தோன்றவும், பூமியின் அடியில் உள்ள நிலத் தட்டுகள் ஒன்றுக்கொன்று உரசிக் கொள்வதும், மோதிக் கொள்வதும் தான் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


அந்த அடிப்படையில் இன்றைய ஆப்பிரிக்க கண்டம் பிரியத் தொடங்கி உள்ளதாக புவியியல் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆப்பிரிக்க நிலப்பரப்பில் பிளவு ஏற்பட்டிருக்கும் பகுதியில் கடல் நீர் புகுந்து கடல் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துவருகிறது. பிளவு ஏற்பட்டிருக்கும் நிலப்பகுதியில் ஸாம்பியா, உகாண்டா நாடுகள் அமைந்துள்ளன. இவை குட்டித் தீவுகளாக மாறும்.
இந்த மாற்றங்கள் ஒரு சில ஆண்டுகளுக்குள் நிகழாது. பொதுவாக, இரண்டு நிலத் தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். அதே சமயம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டால் நிலப் பிளவு விரைவுபடுத்தப்படும்.
ஆப்பிரிக்காவில் இதுவரை 56 கிலோ மீட்டர் தூரத்துக்கு நிலதட்டுகள் நகர்ந்து உள்ளனவாம். எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நிலப் பிளவு ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இந்த பிளவுப் பகுதியில் பகுதியில் இனி வரும் வரும் காலத்தில் கொஞ்சம், கொஞ்சமாக கடல் நீர் புகுந்து அது சிறு கடலாக மாறும். இந்தப் பகுதியில் மூன்று நில அடுக்குகள் பிரியத் தொடங்கி விட்டனவாம். தொடக்கத்தில் துணைக் கோளின் காமிரா மூலம் மட்டுமே தெரிந்த பிளவு, இப்போது கண்களால் பார்க்க முடிகிற அளவுக்கு நிலப் பிளவு விரிவடைந்துள்ளது. இந்தப் பகுதி நிரந்தரமாகப் பிளவு ஏற்பட்டு பிரிந்து போக 500 ஆண்டுகள் ஆகுமாம்.
இதற்கிடையில் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தால் பிளவுகள் வேகமாக நடக்கும். நிரந்தரப் பிரிவிற்கான 500 ஆண்டு கால அளவு குறையும் என்கிறது அதிர்ச்சி தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com