கண்களை கவரும் உணவுகள்: கவனம் ப்ளீஸ்!

பஞ்சுமிட்டாயில் ரோடமைன் பி: குழந்தைகளுக்கு ஆபத்து!
கண்களை கவரும் உணவுகள்: கவனம் ப்ளீஸ்!
Published on
Updated on
3 min read

குழந்தைகளுக்கு பிடித்தமான பஞ்சுமிட்டாய், ஸ்மோக் பிஸ்கட் மற்றும் ட்ரை ஐஸ் போன்றவை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டது. குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் இந்த உணவு பண்டங்களை உட்கொண்டதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இந்தத் தடைக்கு காரணம். அப்படி என்னதான் இந்த உணவுப் பொருள்களில் இருக்கிறது.. ஆபத்தை விளைவிக்கும் காரணிகள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.

பஞ்சுமிட்டாய்

இளஞ்சிவப்பு(பிங்க்) நிறத்தில் விற்கப்படும் பஞ்சுமிட்டாயில் அதன் நிறத்திற்காக சேர்க்கப்படும் நிறமியில் "ரோடமைன் பி' எனும் நச்சுப் பொருள் கலந்திருப்பது உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் தெரியவந்ததே இதற்கு காரணம்.

பஞ்சு மிட்டாயில் கண்டறியப்பட்டுள்ள இந்த ரோடமைன் பி என்பது உணவுப் பொருளுக்கு, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளாகும். இதற்காக செயற்கை சாயம் தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த வேதியியல் நிறமி, மக்கும் தன்மையற்றது. வெப்பம், வெளிச்சம் ஆகியவற்றை தாங்கக் கூடியது. தண்ணீரில் கரையக்கூடியத் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடியது இந்த நிறம். ஜவுளித்துறை, காகிதத் துறை, தோல் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களில் செயற்கையாக நிறம் கொடுக்கும் பொருள்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதே. ஆனால், எந்தெந்த பொருள்களைப் பயன்படுத்தலாம், எவ்வளவு பயன்படுத்தலாம் என்ற வழிகாட்டுதல்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் வகுத்துள்ளது. அதன்படி, உணவுப் பொருள்களில் அனுமதிக்கப்படும் நிறமிகள் உள்ளன. உதாரணமாக சிவப்பு நிறத்துக்கு அலூரா ரெட், பச்சை நிறத்துக்கு ஆப்பிள் கிரீன் போன்றவைகளாகும். அவையும் குறிப்பிட்ட அளவு மட்டுமே உணவுப் பொருளில் இருக்க வேண்டும். ஆனால், ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், அதை உணவுப் பொருள்களில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்த செயற்கை நிறமிக்கு ரோடமைன் 610, ரோடமைன் 0, பேஸிக் வொய்லட் 10, சி.1., பிக்மென்ட் வொய்லட்1, பிரில்லயண்ட் பிங்க் பி.சி.1. 45170, டேட்ராதையல் ரோடமைன் என்று வேறு பெயர்களும் உண்டு.

இந்த நிறம் பஞ்சுமிட்டாயில் மட்டும் இல்லை, அந்த நிறத்தில் உள்ள அனைத்து இனிப்பு வகைகள், மிட்டாய் வகைகள், ஜெல்லி வகைகள் போன்ற பல உணவுப் பொருள்களிலும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரோஸ்மில்க், கொட்டைப் பாக்கு, மில்க் பேடா என்ற இனிப்பு வகைகளின் மீது தூவப்படும் இளஞ்சிவப்பு துகள்களிலும் உள்ளது. மேலும், சிவப்பு முள்ளங்கி மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் மேற்பரப்பில் சிவப்பு நிறம் கூடுதலாக வெளிப்படுவதற்கும் ரோடமைன் பி பயன்படுத்தப்படுகிறது. அதே போன்று, மிளகாய் பொடி, கேழ்வரகு, தக்காளி சாஸ் வகைகளிலும் சிவப்பு நிறம் பெறுவதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது.

1961-இல் இந்த நிறத்தைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் நிறத்தின் படிமானம் தேங்குவது கண்டறியப்பட்டு இந்த நிறமி பயன்படுத்தத் தடை செய்யப்பட்டது. மேலும், இது புற்றுநோய்க்கான காரணிகளில் (குரூப்3) ஒன்றாக இருப்பதால், உணவில் சேர்க்கக் கூடாது என்று 1978-இல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருந்தாலும், இவை இன்றளவும் சட்டவிரோதமாக பயன்பாட்டில்தான் இருந்து வருகிறது.

ரோடமைன் பி உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்

ரோடமைன் பி புற்றுநோய் மற்றும் மரபணு பிறழ்வு ஏற்படுத்தக்கூடியது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. தோல் வியாதிகள், சுவாச பாதிப்புகள், முதுகு தண்டுவட பாதிப்பு, கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செல் சிதைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே மனிதன் உட்கொள்ளுதலுக்கு தகுதி அற்றது. அந்தவகையில், பஞ்சுமிட்டாய் இங்கே பிரச்னை இல்லை. அதில் சேர்க்கப்படும் நிறமியான ரோடமைன் பி தான் பிரச்சினை. எனவே, கவனத்தை ஈர்க்கும் வகையில் கலர் கலராக தயாரிக்கப்படும் உணவுகள் தீங்கு ஏற்படுத்தக் கூடியதுதான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ்

திரவ நைட்ரஜன் என்பது இன்டஸ்ட்ரியல் குலண்ட் ஆகும். அதே தன்மை கொண்டதுதான் ட்ரை ஐஸ்ஸூம். திரவ நைட்ரஜன் ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு ஆகும். திரவ நைட்ரஜன் எந்தப் பொருளையும் உடனடியாக உறைய வைக்கும் திறன் கொண்டது. ட்ரை ஐஸ் என்பது திட வடிவில் உள்ள கார்பன் டை ஆக்சைடு ஆகும். கார்பன் டை ஆக்சைடு திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு செல்கிறது. திட கார்பன் டை ஆக்சைடு மைனஸ் 78.5 சென்டிகிரேடில் உள்ளது. இவை இரண்டுமே ஒரு பொருளை குளிச்சியாக வைத்திருக்க பயன்படுத்தப்படுவதாகும். உதாரணமாக, சொல்ல வேண்டும் என்றால், நாம் ஒரு சில பொருள்கள் கெட்டுப் போகாமல் இருக்க ப்ரீசரில் வைத்து பாதுகாப்போம் அல்லவா.. அப்படி ப்ரீசர் போன்றதுதான் இந்த திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ். இதனை பெரும்பாலும், தொழிற்சாலைகளில் சில பொருள்களை குளிர்ச்சியாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்துவார்கள். இதனை எந்தவிதமான உணவு பொருளிலும் சேர்க்கக் கூடாது. அதற்கு அங்கீகாரமும் கிடையாது.

மருத்துவ உலகில், கால் ஆணியை நீக்க, மருக்களை நீக்க மற்றும் கருமுட்டையை பாதுகாக்கவும் இந்த ட்ரை ஐஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, சில வகையான தடுப்பூசிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும்போது, தடுப்பூசிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க இந்த ட்ரை ஐஸ் பயன்படுத்தப்படுகிறது.

உணவு பயன்பாட்டுக்கு என்று எடுத்துக் கொண்டால், ஐஸ்க்ரீமை குளிர் நிலையில் பதப்படுத்தி வைக்கவே, இதுவரை ட்ரை ஐஸை பயன்படுத்தி வந்தார்கள். மேலும், நாம் ஐஸ்க்ரீமோ அல்லது ஐஸ் கேக் போன்றவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, அவை நம்மிடம் வந்து சேரும் வரை, உருகிவிடாமல் இருப்பதற்காக, இந்த ட்ரை ஐஸை பேக்கிங் உள்ளே வைத்து அனுப்பப்படுகிறது. இப்படிதான் ஃபுட் இன்டஸ்ட்ரிகளில் ட்ரை ஐஸ் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை வெறும் கைகளால் கையாண்டால், அவை சருமத்தில் தீக்காயங்கள் போன்ற காயங்களை ஏற்படுத்தும். எனவே கையாளும் போது கையுறைகளை அணிவது அவசியம் ஆகும். இப்படியான ஒரு பொருளை உண்டால் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள்.

ஆனால், சமீபகாலமாக, திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸை நேரடியாக உணவுகளில் சேர்க்கின்றனர். அந்தவகையில், உணவுப் பிரியர்களின் ரசனைக்கு ஏற்ப அவர்களது கவனத்தை ஈர்க்கும் வகையில், திரவ நைட்ரஜன் மற்றும் ட்ரை ஐஸ் உணவுகளில் கலக்கப்படுகிறது. இது உணவில் கலக்கப்படும்போது, ஏற்படும் புகையை பார்த்து ஆர்வமாகி, அதனை ருசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கி உண்கின்றனர். இது முற்றிலும் கவன ஈர்ப்பு செயல்தான். மற்றபடி, இந்த திரவ நைட்ரஜனோ அல்லது ட்ரை ஐஸ்úஸா உணவில் பயன்படுத்த அரசு சார்பில் எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை. இது நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே தடை செய்யப்பட்ட ஒன்று.

ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக ட்ரை ஐஸை வாங்கிவந்து, புது டிரண்டாக, பான்மசாலா, பிரவுனி, ஐஸ்க்ரீம், பிஸ்கட் போன்றவற்றறில் பயன்படுத்தி கவனத்தை ஈர்க்கின்றனர்.

அந்தவகையில் தான், சமீபத்தில் மும்பை குருகிராம்மில் உள்ள ஒரு உணவகத்தில் உணவருந்தியவர்களுக்கு மவுத் ப்ரெஷ்னருக்குப் பதிலாக பீடாவை ட்ரை ஐஸ்ஸில் மூக்கி கொடுத்துள்ளார்கள். அதை சாப்பிட்டதும் அவர்களுக்கு ரத்த வாந்தியை ஏற்படுத்தியது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் படி, ட்ரை ஐஸ் ஒரு ஆபத்தான பொருளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், இதனை உட்கொள்வது என்பது முற்றிலும் தவறானது ஆகும்.

இதனால், மக்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட், கேக் என எதுவாக இருந்தாலும் கண்களை கவரும் வகையில் இருந்தால் அவற்றை தவிர்ப்பது ஒன்றே நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழியாகும்.

,

உணவியல் நிபுணர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com