
கல்லூரிப் பருவத்தில் கண்ட கனவைத் துரத்திப் பிடிக்க ஸ்வேதாவுக்கு 4 ஆயிரம் கி.மீ தனியே பைக்கில் பயணிக்க வேண்டிவந்தது.
தருமபுரி மாவட்டத்துக்கு உள்பட்ட பாலக்கோட்டைச் சேர்ந்த இவருக்கு வயது இருபத்து மூன்று. பாலக்கோடிலிருந்து லடாக் நோக்கி இவர் சென்ற பைக் பயணம் 13 நாள்கள் நீடித்தது.
தனது சாகசப் பயணம் குறித்து ஸ்வேதா கூறியதாவது:
""மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவையில் பட்டப் படிப்பை படித்தேன். அப்போது, சக மாணவர்கள் குழுவாக, நாட்டின் பல இடங்களுக்கு பைக்கில் செல்லப் போவதாகக் கூறினர். என்னையும் சேர்த்துகொள்ளுமாறு கூறினேன். அவர்கள் மறுத்தனர். அப்போது, நானே தனியாகப் போய்க் காட்டுகிறேன் என்று முடிவு செய்தேன்.
பெற்றோரிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். நான் தனியாகப் போவதை பெற்றோர் விரும்பவில்லை. எனது தந்தை மூர்த்தி எலக்ட்ரீஷியன். சாதாரணக் குடும்பம்தான்.
பணம் சேர்க்க, சென்னையில் வேலையில் சேர்ந்தேன். இருப்பினும், சில மாதங்களுக்குப் பின்னர் ஊர் திரும்பி தையல் வேலை செய்தேன். ஓய்வு நேரங்களில் பைக் ஓட்ட பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன்.
தெரிந்தவர்கள், உறவினர்களின் பைக்குகளை வாங்கி ஒட்டி பயிற்சியும் பெற்றேன். இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை சேமித்தேன். வங்கி ஒன்றில் வாகனக் கடன் பெற்றேன். சுமார் 4 லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது.
நீண்ட தூர பயணத்துக்குப் பொருத்தமான "யமஹா எம்டி 15' என்ற மாடல் பைக்கை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன். ஒருவழியாக, பெற்றோரை சம்மதிக்க வைத்து சென்ற மே 31-இல் எனது கனவுப் பயணத்தைக் தொடங்கினேன். அனந்தபூர், ஹைதராபாத், நாக்பூர், சாகர், ஆக்ரா, தில்லி, மணாலி, சரசு வழியாக லடாக் செல்வதுதான் எனது பயணத் திட்டம். ஒரு நாளைக்கு 150 கி.மீ. முதல் 250 கி.மீ வரை பயணித்தேன். ஜூன் 13-இல் லடாக்கை அடைந்தேன்.
யார் வேண்டுமானாலும் பல மாநிலங்கள் வழியாக தரைமார்க்கமாகப் பயணிக்கலாம். பெண்களுக்கு பயணம் நூறு சதவீதம் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சரியான திட்டமிடல்தான் பயணத்தை பிரச்னைகள் இல்லாமல் நிறைவு செய்ய உதவும். சாலை விதிகளைச் சரியாகப் பின்பற்றினால் பயணம் பாதுகாப்பாக முடியும்.
நான் செல்லும் பாதையில் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியதால் 30 மரணங்களைப் பார்க்க வேண்டிவந்தது.
பயணத்தில் உடல் நலம் பேண நாம் சமைப்பதுதான் சிறந்தது. இரவு நேரங்களில் தரமான ஹோட்டல்களில் தங்கினேன். சி.சி. டி.வி. பொருத்தப்பட்டிருக்கும் பெட்ரோல் பங்குகளிலும் ஓய்வு எடுத்துக் கொண்டேன். மணாலியைத் தாண்டி சரசு நெருங்கியபோது, குளிரால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இடையிடையே காய்ச்சல் வந்து போனது.
உடல் ரீதியான பிரச்னைகள் வரும் என எதிர்பார்த்ததால், அதற்கேற்ற முன்னேற்பாடுகளுடன் சென்றிருந்தேன்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பைக்கில் சென்று வரவேண்டும் என்பதே எனது அடுத்த லட்சியம்.
பெண்களும் இப்படி அகில இந்திய தரைவழிப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதனை வலியுறுத்தவே இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டேன்.
பைக்கில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு வழிகாட்டவும் தயாராக உள்ளேன்' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.