3 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு..!

இசை நிகழ்ச்சிகளால் 3 ஆயிரம் குழந்தைகளுக்கு புது வாழ்வு அளித்த பாலக்!
3 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு..!
Published on
Updated on
2 min read

லிம்கா சாதனைப் புத்தகத்திலும், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார் பாலக்.

முப்பத்து இரண்டு வயதாகும் திரைப்படப் பின்னணிப் பாடகியான இவர், மத்தியப் பிரதேசத்துக்கு உள்பட்ட இந்தூரில் பிறந்தவர். இவர் தனது இசை நிகழ்ச்சிகளில் கிடைக்கும் பணம் முழுவதையும் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சைக்காகக் கொடுத்து விடுகிறார்.

இதுவரையில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வை அளித்துள்ளார். புதுவாழ்வு பெற்ற சிறுவர், சிறுமியருடன் இவர் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

'எனது தந்தை ராஜ்குமார் முச்சல், தனியார் நிறுவனக் கணக்காளர். அம்மா அமிதா குடும்பத் தலைவி. எனக்கு பலாஷ் என்ற தம்பியும் உள்ளார்.

எனக்கு இளம் வயதில் இருந்தே இசையில் ஆர்வம் உண்டு. முறைப்படி ஹிந்துஸ்தானி இசையைக் கற்றேன்.

2011-இல் வெளியான "தமடம்' என்ற ஹிந்தித் திரைப்படத்தின் வாயிலாக, பின்னணிப் பாடகியாக அறிமுகமானேன். அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தன. "ஏக் தா டைகர்', "ஆஷிகி 2' ஆகிய படங்கள் பெரும் புகழ் கிடைக்கச் செய்தன.

வங்காளி திரைப்படப் பாடல்களையும், தெலுங்கு, கன்னடம், மராத்தி, தமிழ், குஜராத்தி, பஞ்சாபி, போஜ்பூரி, உருது மொழிகளிலும் பாடி வருகிறேன்.

சிறு வயதிலேயே கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனப்பான்மையை கொண்டிருந்தேன்.

1999-இல் கார்கில் போர் நடைபெற்றபோது, கடைத் தெருக்களில் பாடல்களைப் பாடி ரூ. 25 ஆயிரம் திரட்டிக் கொடுத்தேன். 2000- ஆம் ஆண்டில், இந்தூரில் லோகேஷ் என்ற சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்காக, இசை நிகழ்ச்சியை நடத்தி 51 ஆயிரம் ரூபாய் நிதியைத் திரட்டி அளித்தேன். இதையறிந்த பெங்களூரின் பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி உடனடியாக, அந்தச் சிறுவனுக்கு இலவசமாகவே சிகிச்சையை அளித்தார்.

தொடர்ந்து, இசை நிகழ்ச்சிகள் மூலமாக நிதி திரட்டி, ஏழைக் குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறேன்.

2001-இல் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இசைநிகழ்ச்சிகளை நடத்தி பத்து லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டி நன்கொடையை அளித்தேன்.

இதன்பின்னர், நாட்டின் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் எனது தம்பி பலாஷுடன் இணைந்து திரைப்பாடல்கள், கஜல், பஜன் பாடல்களைப் பாடி இசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன்.

2003-இல் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்குச் சிகிச்சைக்காக வந்திருந்த ஒரு பாகிஸ்தானியப் பெண்ணின் அறுவை சிகிச்சைக்காக நிதியுதவியை வழங்கினேன்.

தொடர்ந்து, "பாலக் முச்சல் ஹார்ட் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பைத் தொடங்கி, இசை நிகழ்ச்சிகளில் கிடைக்கும் பணத்தை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு அளிக்க ஆரம்பித்தேன்.

2006 டிசம்பர் வாக்கில் ரூ.1.20 கோடி நிதியைத் திரட்டி, 234 குழந்தைகளின் இதய ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தேன்.

2024 மார்ச் மாதம் வரை சுமார் 3 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்து, உதவிகளைப் புரிந்துள்ளோம்.

நிதி பற்றாக்குறையால் எந்த ஒரு குழந்தையின் அறுவைச் சிகிச்சையும் நின்றுபோய்விடக் கூடாது.

எனது சேவையைப் புரிந்துகொண்டு, சில மருத்துவமனைகள் அறுவைச் சிகிச்சைக்கான கட்டணத்தை பாதியாகக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளன. அதே போல சில மருத்துவர்களும் கட்டணம் வாங்கிக்கொள்ளாமல் அறுவைச் சிகிச்சை செய்து வருகின்றனர்'' என்கிறார் பாலக்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com