பொருள்களை ஒருமுறை பயன்படுத்திவிட்டு, குப்பையில் வீசி எறிவது பெருகிவிட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வீடுகளில் பழுதாகி உபயோகமில்லாமல் கிடக்கும் பொருள்களை சரி செய்து, மீண்டும் பயன்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். அதன் பெயர் "ரிப்பேர் கஃபே'. முதன்முதலில் நெதர்லாந்து நாட்டில்தான் துவக்கப்பட்டது. இன்று உலக நாடுகள் பலவற்றிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
சென்னை ஆதம்பாக்கத்தில் அண்மையில் நடைபெற்ற நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பயிற்சி பெற்றனர். இந்த பயனுள்ள முயற்சி குறித்து கூட்டத்தை நடத்திய மீனலோசனியிடம் பேசியபோது:
மார்ட்டின் போஸ்த்மா என்ற டச்சுப் பெண்மணியின் மூளையில் உதித்த பொறிதான் இந்த ரிப்பேர் கஃபே. 2007-ஆம் ஆண்டில் அவர் முதலில் நெதர்லாந்தில் தொடங்கினார். வரவேற்பு பெருகவே, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ரிப்பேர் கஃபேக்கள் துவக்கப்பட்டன.
நாளடைவில் உலகம் முழுவதும் உருவாகி, பல்வேறு நாடுகளிலுமாக 2500-க்கும் அதிகமான மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் முதன் முதலில் பெங்களூரில் பூர்ணா சர்க்கார், அந்தரா முகர்ஜி என்ற இரு தன்னார்வலர்கள் சிலருடன் இணைந்து ரிப்பேர் கஃபேவை தொடங்கினர்.
இந்தியாவில் பழுதான பொருள்களை பழுது பார்க்கும் மையங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனாலும், பழுதானவற்றை சரிசெய்து மறுபடியும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் குறைவாகவே உள்ளது.
கூட்டுக் குடும்பங்கள் இருந்த காலத்தில், மூத்தோர் இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். இன்று தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட நிலையில், குழந்தைகளுக்கு பழுதுநீக்கம் செய்யக் கற்றுக் கொடுக்க யாருமில்லை. ,அந்த ஆர்வத்தை ஏற்படுத்தி, பல்வேறு வகையான பொருள்களையும் பழுது பார்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது என முடிவெடுத்தார்கள் பெங்களூரு ரிப்பேர் கஃபே நிர்வாகிகள்.
இவர்கள் மாணவர்களை இலக்காக வைத்து பயிற்சிப் பட்டறை அறிவிப்பை வெளியிட்டதும் வரவேற்பு கிடைத்தது. மாணவ, மாணவிகள் தங்களுடைய சைக்கிள், கேமரா, தாங்கள் படிக்கப் பயன்படுத்தும், மேஜை, நாற்காலி, துணி மணிகள், செயற்கை அணிகலன்கள், பொம்மைகள் என பலவிதமானவற்றை எடுத்து வந்துவிட்டார்கள். உரிய வல்லுநர்கள் வழிகாட்டி சீரமைத்து அளித்தபோது, மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பெருகியது. பெங்களூரின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய ரிப்பேர் கஃபே பயிற்சிப் பட்டறைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
அவர்கள் நடத்திய இணைய வழிப் பயிற்சி ஒன்றில் நானும், என் மகனும் பங்கேற்றோம். அது மிகவும் சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. அப்போதுதான், சென்னையிலும் இது போன்ற பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தும் எண்ணம் ஏற்பட்டது.
பூர்ணா குழுவினரிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்களும் உடனடியாக அதற்கு செயல் வடிவமும் கொடுத்தனர்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணி வரை நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில், எட்டு வயது முதல் பதினாறு வயது வரையிலான சுமார் இருபத்தைந்து பேர் பங்கேற்றனர். சைக்கிள் ரிப்பேர், தச்சு வேலை, தையல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட சில துறை தன்னார்வலர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்தனர்.
சைக்கிள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள் போன்றவற்றுடன் வந்திருந்த மாணவர்களுக்கு வல்லுநர்களிடம் சரி செய்து அளித்தனர். இங்கே, விஷயம் அறிந்த வல்லுநர்கள் தன்னார்வலர்களாகக் கட்டணமின்றி பழுதானவற்றை சரி செய்யச் சொல்லிக் கொடுத்தனர். ஒன்றிரண்டு உதிரிபாகங்கள் தேவைப்பட்டாலும், அவற்றைப் புதுசாக வாங்கிக் கொண்டு வந்து பொருத்தி, சரி செய்தனர்.
பயிற்சியின் முடிவில் தாங்கள் பழுது பார்த்து சரி செய்த பொருள்களை எடுத்துகொண்டு அவர்கள் புறப்பட்டபோது, மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பழுதான பொருட்களை சரி செய்து மீண்டும் பயன்படுத்துவதன் மூலமாக, அவற்றை தூக்கிக் குப்பையில் போடுவதும், அதன் மூலமாக சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது. புதிய பொருள்கள் உற்பத்தி செய்வது குறைந்து, அதன் மூலமாக கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றமும் குறைக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நாம் செய்யும் பேருதவியாகும்'' என்கிறார் மீனலோசனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.