விண்வெளி உண்மைகள், விண்வெளி ஆராய்ச்சி குறித்து அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்களும் அறியும் நோக்கில், பத்து ஆண்டுகளாக "சேலம் டார்வின் அறிவியல் மன்றம்' செயல்படுகிறது. இந்த மன்றமானது பிற அறிவியல் மன்றங்களின் செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டுள்ளது.
குட்டி ராக்கெட்டில், ஹீலியம் பலூனில் சின்ன செயற்கைக் கோள்களைப் பொருத்தி விண்வெளியில் ஏவி, வெப்பநிலை, காற்றில் ஈரப்பதம், விண்வெளியில் ஏற்படும் மாசு... போன்ற தரவுகளை மாணவ, மாணவியர் சேகரிக்கின்றனர். மேலும், விஞ்ஞானிகளை வரவழைத்து மாணவர்களிடையே கலந்துரையாடல்களையும் நடத்துகின்றனர்.
இதுகுறித்து சேலம் டார்வின் அறிவியல் மன்றப் பொறுப்பாளர் தினேஷிடம் பேசியபோது:
""எட்டிக்குட்டைமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நாற்பது வயதாகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை வளர்க்கவே டார்வின் அறிவியல் மன்றத்தைத் தொடங்கினேன். சில ஆண்டுகள் கழித்து, தனியார் பள்ளிகள் கேட்டுக் கொண்டதின்பேரில் மன்ற நடவடிக்கைகளை விரிவுபடுத்தினோம்.
தற்போது மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சுமார் 250 பேர் தமிழகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்களே.
ஆண்டுதோறும் விடுமுறைகளில் "ஆசிரியர்- மாணவர்' குழுக்களை பெங்களூரு இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கே நடக்கும் ஆராய்ச்சி, ராக்கெட்டும் அதன் பாகங்களும் தயாரிப்பு உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள பத்து ஆண்டுகளாக அறிவியல் சுற்றுலாக்களை நடத்திவருகிறோம். இதுவரை சுமார் 2,500 ஆசிரியர்கள், சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
ராக்கெட்டுகளை உருவாக்கவும் முடிவு செய்தோம். இதற்காக பல நூல்களை வாசித்து எழுந்த சந்தேகங்களை இஸ்ரோவின் ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளிடம் ஆலோசித்து தெளிவு பெற்றோம்.
தீபாவளியின்போது ராக்கெட் பட்டாசைக் கொளுத்தி வானில் பறக்கவிட்டவர்களுக்கு பி.வி.சி. குழாய் வைத்து ஐந்து அடி நீளமான ராக்கெட் செய்யக் கற்றுக் கொடுத்தோம். ரசாயன எரிபொருள் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துகொள்வோம். ஒவ்வொரு ராக்கெட்டிலும் சிறிய துணைக்கோளை பொருத்துவோம். அதற்கான சென்சார்கள், டிரான்ஸ்மீட்டர்களை பெங்களூரு, தில்லி மாநகரங்களில் இருந்து வாங்குவோம். சக்திவாய்ந்த சென்சார்களை மத்திய அரசின் அனுமதியைப் பெற்று அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வோம்.
ராக்கெட் ஏவுவதற்கு முன் முறைப்படி அரசுத் துறைகளிடம் அனுமதி பெறுவோம். ராக்கெட்டை அதிகபட்சம் 3 கி. மீ தூரம் விண்வெளியில் ஏவலாம். அதற்கு மேல் பயணிக்கும் ராக்கெட்களை ஏவக் கூடாது. குட்டி ராக்கெட் வானில் கிளம்பி கீழே வர மூன்று முதல் நான்கு நிமிடங்கள் ஆகும். ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் துணைக் கோள் ஏவும் கணம் முதல் விண்ணுக்குச் சென்று கீழே வரும் வரை எங்களின் தொடர்பில் இருக்கும். தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கும்.
ராக்கெட்டில் குடை வடிவத்தில் பாராசூட் ஒன்றையும் இணைத்திருப்போம். அதன் உதவியுடன் ராக்கெட் பத்திரமாக தரை இறங்கும் . ராக்கெட்டை மீண்டும் விண்வெளிக்கு அனுப்ப பயன்படுத்திக் கொள்வோம். இந்தச் செயல்முறையால், மாணவர்களுக்கு ராக்கெட், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான நேரடி ஆர்வம், அனுபவம், புரிதல்கள் ஏற்படும். சில மாணவர்களாவது எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பதுதான் எங்கள் மன்றத்தின் லட்சியம்.
ஜூன் மாதத்தில் கோவையிலிருந்து ஹீலியம் பலூனில் சிறிய செயற்கைக்கோளை வைத்துப் பறக்கவிட்டோம். காற்றின் வேகம், காற்று வீசும் திசையை நோக்கி இந்த ஹீலியம் பலூன் வானில் 35 கி.மீ உயரம் வரை பறக்கும். மூன்றரை மணி நேரம் வானில் பறந்ததும், பலூனைக் கிழிக்க உள்ளே வெடிபொருளை வைத்திருப்போம். அது வெடித்ததும் பலூனின் சுவர் கிழிந்து மெதுவாக பாராசூட் மூலம் தரை இறங்கும். காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசையைக் கணக்கிட்டு எங்கள் குழு பலூனை வாகனத்தில் தரைவழியாகத் தொடரும். கீழே இறங்கியதும் அதை எடுத்து வருவோம். கிடைத்த தரவுகளைப் பதிவு செய்து ஆய்விற்கு அனுப்பிவைப்போம்.
இந்த முறை ஹீலியம் பலூன் இறங்கியது கோவையிலிருந்து சுமார் 130 கி. மீ வான்வெளி தூரத்தில் இருக்கும் கேரளத்தின் வயநாட்டில்தான். அங்குள்ள வனத்துறையிடம் அனுமதி முன்கூட்டியே பெற்று இருந்தோம். அடுத்த முறை 55 கி.மீ. உயரம் பயணம் செய்யும் விதமாக ஹூலியம் பலூனைப் பறக்கவிட தீர்மானித்திருக்கிறோம்.
எங்கள் மன்ற செயல்பாடுகளில் அக்கறை காட்டுபவர்களில் முக்கியமானவர்கள் விஞ்ஞானிகள் வெங்கடேஸ்வரன், இங்கர்சால் ஆகியோர்.கோவை நிகழ்ச்சியில் பங்குபெற்ற 30 மாணவர்களுக்கு மூன்று நாள் உணவும் உறைவிடமும் தந்து பயிற்சியையும் அளித்தோம். அவர்களுக்கு தொலைநோக்கியை செய்யக் கற்றுக் கொடுத்து, அன்பளிப்பும் செய்தோம்.
-பிஸ்மி பரிணாமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.