பிரபலமாகும் குங்குமப் பூ விவசாயம்...!

குங்குமப் பூக்கள் காஷ்மீரில் மட்டுமே விளையும்.
காஷ்மீர் குங்குமப் பூக்கள்
காஷ்மீர் குங்குமப் பூக்கள்Picasa
Published on
Updated on
2 min read

குங்குமப் பூக்கள் காஷ்மீரில் மட்டுமே விளையும். ஒரு கிலோ குங்குமப் பூ லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிட முயற்சிகள் நடைபெற்றாலும், குஜராத், அரியானாவில் அந்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

பொறியியல் பட்டதாரிகளான சுபாஷ், ஆஷிஷ் பவாலியா ஆகியோர் தங்களது வீடுகளில் குங்குமப் பூவை பயிரிட்டுள்ளனர் அவர்கள் கூறுவதாவது:

""வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்து, பயிர்களை விளைவிக்கும் யுக்தி குறித்து அறிந்து குங்குமப் பூவை வளர்க்கத் தீர்மானித்தோம். பண்ணை வீட்டின் ஓர் அறையில் 150 சதுர அடி பரப்பில், ஒன்றின் மீது ஒன்றாக துளைகள் கொண்ட தட்டுகளை இடைவெளிவிட்டு அமைத்தோம். அந்தப் பகுதி குளுமையாக இருக்க, குளிரூட்டும் பெட்டியை வைத்தோம்.

தரமான குங்குமப் பூ தளிர்களை விலைக்கு வாங்கினோம். செடி வளர மண்ணைப் பயன்படுத்தாமல், "ஏரோபோனிக்ஸ்' முறையில் குங்குமத் தளிர்களை வளர்க்க ஆரம்பித்தோம். தளிர்களுக்கு நேரடியாக நீர் தெளிக்காமல் காற்றில் செடிகளுக்குத் தேவையான ஈரப்பதம் மற்றும் சத்துகளுடன் அந்த அறை சூழலில் செடிகளுக்கு கிடைக்கும் வசதியை ஏற்படுத்தினோம்.

இந்தப் பணியை "ஹுமிடி டிஃபையர்' என்ற கருவி செயல்படுத்தும்.

தளிர்களின் வேர்கள் ஈர்ப்பதத்தில் இருந்து நீரையும் சத்துகளையும் உறிஞ்சிக் கொண்டு வளரும். இந்த வசதிகளை ஏற்படுத்த சுமார் நான்கு லட்சம் ரூபாய் செலவானது. அறையில் வெப்பம் 17 முதல் 25 டிகிரி செல்ஸியஸ் இருக்குமாறு பார்த்துகொள்ளவேண்டும்.

ஐம்பது நாள்களில் செடி வளர்ந்து பூக்கத் தொடங்கிவிடும். பிறகு குங்குமப் பூவிலிருந்து சிவப்பு இழைகளைத் தனியே எடுத்து உலர்த்துவோம். ஒரு கிராம் குங்குமப் பூ இழைகள் 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆண்டில் நான்கு முறை குங்குமப் பூக்களைப் பயிரிடலாம்.

எங்கள் முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், குங்குமப் பூ விளைவிப்பதை விரிவாக்கம் செய்திருக்கிறோம். முதல் அறுவடையில் ஒரு கிலோ குங்குமப் பூ இழைகள் கிடைத்தன. அதை 9 லட்சம் ரூபாய்க்கு விற்றோம்'' என்றனர்.

அரியானாவைச் சேர்ந்த ரமேஷ் கேரா:

பொறியியல் படித்து 35 ஆண்டுகள் வெளிநாடுகளில் பணிபுரிந்து, அரியானா வந்து சேர்ந்தேன். எனது இளமைக்காலக் கனவை நனவாக்க விவசாயத்தில் ஈடுபட்டேன். அதிக வருமானம் தரும் குங்குமப் பூக்களை 2017இல் "ஹைடிரோபோனிக்ஸ்' முறையில் பயிரிட ஆரம்பித்தேன். "ஆகர்ஷிக்' என்ற நிறுவனத்தையும் தொடங்கினேன்.

மண்ணில்லாமல் குங்குமப் பூச் செடிகளைப் பயிரிடுவதை பரீட்சார்த்தமாகச் செய்யத் தொடங்கி பல தோல்விகள் அடைந்து, கடைசியில் வெற்றியும் பெற்றேன்.

'ஹைடிரோபோனிக்ஸ்' முறை என்பது மண்ணைத் தவிர்த்து, தேங்காய் நாரைப் பயன்படுத்தி நீர் சார்ந்த ஊட்டச் சத்துகளைக் கொடுத்து தாவரங்களை வளர்க்கும் நுட்பமாகும்.

இந்த முறையில், மண் சார்ந்த நோய்கள் செடிகளுக்குப் படராது. ரசாயன உரங்களும் தேவையில்லை. அறுவடையையும் குறைந்தக் காலத்தில் நடத்தலாம்.

அதனால் அதிக விளைச்சல் செய்வது சாத்தியமாகும். இதுவரை குங்குமப் பூ விவசாயத்தில் ஆர்வமுள்ள 1200 விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வருமானத்தை அதிகரிக்க குங்குமப் பூவை பெரும் அளவில் விளைவிக்க வேண்டும். அதற்கான மாற்று விவசாய முறைகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டிருக்கிறேன்'' என்கிறார் ரமேஷ் கேரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com