வரலாற்று புகழ்மிக்க மதுராந்தகம் ஏரி

நிலவளம் அளிக்கும் ஏரிகளால் புகழ்பெற்று விளங்கும் தொண்டை நாட்டில் "மதுராந்தகம் ஏரி' சிறப்புற விளங்குகிறது.
மதுராந்தகம் ஏரி
மதுராந்தகம் ஏரிகி. ஸ்ரீதரன்
Published on
Updated on
2 min read

நிலவளம் அளிக்கும் ஏரிகளால் புகழ்பெற்று விளங்கும் தொண்டை நாட்டில் "மதுராந்தகம் ஏரி' சிறப்புற விளங்குகிறது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் "ஏரி மாவட்டம்" என்றே சிறப்பித்து அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஊராக விளங்கும் மதுராந்தகத்தில் ஊரின் மேற்கு பக்கத்தில் ஏரி அமைந்துள்ளது.

சென்னை திருச்சி நெடுஞ்சாலையும் ஏரியின் கரை மீது செல்கிறது. இதில் செல்லும்பொழுது, கடல் போன்று நிரம்பி காட்சியளிக்கும் ஏரியின் அழகு கண்ணுக்கு விருந்தாக அமையும்.

பல்லவ மன்னர்கள் காலத்திலேயே இந்த ஏரி ஊர் மக்களுக்காகவும் வேளாண்மைக்காகவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளை காணும்பொழுது சோழ மன்னன் பராந்தகச் சோழனுக்கு "மதுராந்தகன்" என்று சிறப்புப் பெயர் உண்டு.

திருவாலங்காட்டுச் செப்பேடு முதலாம் பராந்தகச் சோழனை "மதுராந்தகன்' எனப் போற்றுகிறது. சோழர்களுடைய ஆட்சியை தொண்டை மண்டலம் வரை விரிவுபடுத்தி ஆட்சி செய்தான் பராந்தகச் சோழன். இந்த மன்னரது 7ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டில் "மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம்' என்று குறிப்பிடுவதால் இம்மன்னனே தன் பெயரால் இவ்வூருக்கு "மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம்' எனப் பெயரிட்டு தானமாக அளிக்கப்பட்டதை அறிய முடிகிறது.

"ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துத் தனியூர் மதுராந்தக சதுர்வேதி மங்கலம்" என்று கல்வெட்டு குறிக்கிறது. இந்த ஏரி உத்தமசோழனாகிய மதுராந்தகன் காலத்தியது என்றும் கூறுவர். இங்குள்ள கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் "வீர சோழ பேரேரி' என்றும் "மதுராந்தக பேரேரி' என்றும் பெயர்கள் குறிப்பிடப்படுவதையும் காண முடிகிறது. பராந்தகச் சோழனுக்கு வீர சோழன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

ஏரி காத்த ராமர் கோயில்

மதுராந்தகத்தில் உள்ள கோயில் "ஏரி காத்த ராமர் கோயில்' என்று சிறப்புப் பெயருடன் புகழ்பெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலில் எழுந்தருளி அருள் புரியும் கோதண்டராமர் "அயோத்திப் பெருமான்' என அழைக்கப்படுகிறார். இங்கு ராமனோ சீதையின் கைத்தலம் பற்றிய கோலத்தில் காணப்படுவது சிறப்பாகும். பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் "மந்திர உபதேசம்' பெற்ற நிகழ்ச்சி ஆவணி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மதுராந்தகம் கோயிலுக்கு பெருமை அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (1796) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் கர்னல் லியோனல் பிளேஸ் துரை. அவர் காலத்தில் பெருமழை பெய்து, மதுராந்தகம் ஏரி உடையும் நிலைமையில் இருந்தது. ஊரைப் பாதிக்காமல் ராமன் காப்பாற்றினால் கோயிலைச் சீரமைத்து தாயார் சந்நிதியை கட்டித் தருகிறேன் எனக் கூறினார். வெள்ளத்தால் ஏரிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் தனது சொந்த செலவிலேயே தாயார் சந்நிதிக்கு முன்மண்டபம் கட்டித் தந்துள்ளார். இந்தச் செய்தி மண்டப விதானத்தில் தமிழிலும், தெலுங்கிலும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மதுராந்தகம் ஏரிக்கு வந்தவாசி மருதாடு, உத்திரமேரூர் வைரமேக தடாகம், வேடந்தாங்கல், கிளியாறு போன்றவற்றால் நீர் வரத்து வருகிறது. மதுராந்தகம் ஏரி சுமார் 4, 700 ஏக்கர் பரப்பளவில் அமைந்து மாவட்டத்தில் பெரிய ஏரியாக திகழ்கிறது.

தற்பொழுது ஏரியில் மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரியில் அதிக நீர் இருந்தால் கல்லாறு வழியாக சென்று பரமேசுவரங்கம் அருகில் உள்ள "பல்லவன் குளம்' என்று ஏரிக்கு சென்று விடும். மதுராந்தகம் ஏரியின் நீர் இப்பகுதி மக்களின் தேவைக்கும், வேளாண்மைக்கும் பெரிதும் பயன்படுகிறது.

ஏரியின் கிழக்குப் பகுதியில் ஏரியிலிருந்து நீரை வெளியேற்ற சோழர் காலத்தில் மதகு (தூம்பு) ஒன்று கற்களால் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏரியிலிருந்து தண்ணீர் தடையில்லாமல் செல்லவும், சிக்கனமாகப் பயன்படுத்தவும் அழகிய வளைவுடன் அமைந்துள்ளது. பண்டைய நாளில் நீர் மேலாண்மைச் சிறப்புடன் விளங்கியதை இங்கு காண முடிகிறது.

தூம்பில் இருந்து நீர் செல்லும் பாதையில் ஒருபுறம் திருமகள் திருமறு வடிவிலும் மறுபுறம் பத்மநிதி வடிவிலும் சிற்பங்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பாக விளங்குகிறது.

என்றென்றும் வேளாண்மை வளமும் செல்வ வளமும் மக்களிடம் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிற்பங்களை அமைத்திருக்கின்றனர்.

பண்டைய நீர் மேலாண்மை சிறப்பாக விளங்கியதன் அடையாளமாக விளங்கும் இந்த மதகு விளங்குகிறது.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com