உலகத்தை வேட்டைக் காடாக்கிய பணம்!

ஒரு நாள், பரபரப்பான வடபழநி சிக்னல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
உலகத்தை வேட்டைக் காடாக்கிய பணம்!
Published on
Updated on
3 min read

ஒரு நாள், பரபரப்பான வடபழநி சிக்னல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆயிரமாயிரம் மக்கள் பயணமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதில் மொத்தமா ஐந்தே ஐந்தே பேர் முகங்களில்தான் சிரிப்பைப் பார்த்தேன். அதில் மூன்று பேர் குழந்தைகள். "இப்படி இவ்வளவு பேரும்மெஷின் மாதிரி எதைத் தேடி ஓடுறாங்க?'னு யோசிச்சா... "பணம்' என்ற ஒரு வார்த்தைதான் பதிலாகத் தோன்றியது. இப்படி ராஜா, மந்திரி, குதிரை, சிப்பாய் என்று அத்தனை பேரோட இலக்கும் பணமா இருக்கிறதாலதான், இந்த உலகம் வேட்டைக்காடாக மாறி விட்டதோ எனத் தோன்றியது. அதே லைனில் யோசிச்சுப் பிடித்த கதைதான் "இ. எம். ஐ. மாதத் தவணை'. வாக்குகளை விற்க எலெக்ஷன் வந்தாலும், ஈமுகோழி விற்க நமீதா வந்தாலும் ஓடி ஓடிப் போய் பல்பு வாங்கும் என் சக அப்பாவிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம்! கதை சொல்லும் பாணியில் தடதட மாற்றங்களைக் கண்டுவரும் தமிழ் சினிமாவில், மற்றுமொரு நம்பிக்கை இளைஞராகச் சிரிக்கிறார் சதாசிவம் சின்னராஜ். ஒரு நிமிட டீஸர், மூன்று நிமிட டிரெய்லரிலேயே புருவம் உயர்த்தவைக்கும் இயக்குநர்.

பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம்னா, அந்தப் பணத்தைச் சம்பாதிக்க நான் என்ன வேணும்னாலும் பண்ணா என்ன?'ன்னு சிந்திக்கிற ஒருத்தனோட கதை இது. இப்படி, தனக்குனு ஒரு பாதை போட்டு காய் நகர்த்திக்கிட்டே போற ஒருத்தன், "ராஜா ஆகிறானா... பஃபூன் ஆகிறானா?'ங்கிறதுதான் படம். கதையின் ஒன்லைன் கேட்க சீரியஸா இருக்கலாம். ஆனா, படம் செம காமெடி. யோசிச்சுப் பார்த்தா, பணம், பொருள், பதவின்னு வன்மமும் தந்திரமுமா ஓடிட்டே இருக்கிற இந்த வாழ்க்கையைவிட காமெடி என்னங்க இருக்கு?''

அப்படி என்றால் பணம் சம்பாதிப்பது காமெடி என்று சொல்ல வர்றீங்களா?

அப்படி இல்லை. பணம் சம்பாதிக்கிறதுக்காக மற்ற எல்லாச் சுக, துக்கங்களையும் மறந்து விட்டு ஓடுவதுதான் காமெடி. பஞ்சத்துக்குப் பாக்கெட் அடிக்கிறவன், தெரு முக்கில் செயின் அறுக்கிறவன், ஏ.டி.எம்இல் கத்தி காட்டுற திருடன்களை நமக்குத் தெரியும். ஆனா, வெள்ளையும் சொள்ளையுமா வந்து, விவேகானந்தர் ரேஞ்சுக்குப் பேசிட்டு, மொத்தமா மொட்டையடிக்கிற "நல்லவங்களை' நமக்குத் தெரியாது. அப்படிச் சில "ஒயிட் காலர் களவாணி'களின் உலகத்தை எட்டிப்பார்க்கிற படம்தான் இது. ஹாலிவுட்டின் கான் ஜானர் வகை படங்கள் மாதிரியான ஒரு படம்.

இதற்காக அந்த உலகத்துக்குள்ளே கொஞ்சம் போனால், அது "பாதாள பைரவி' மாதிரி போய் கொண்டே இருக்கிறது. நம்ம அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த, ஆனா நமக்கே தெரியாத உலகம். உள்ளே அவ்வளவு காமெடி. அவலச்சுவைனு சொல்வாங்கள்ல... அப்படி ஒரு அல்ட்டிமேட் காமெடி.

சமூகத்தை விமர்சிக்கிற நோக்கில் வந்திருக்குமா....

விமர்சனங்களும் இருக்கிறது. குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள் என்பது அல்லவா முக்கியம். கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சேவின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்த கதையின் நீதி.

சமூக பொறுப்பின்மையை சுட்டிக் காட்டுகிற விதமா...

நாம் ஷங்கர் சார் படங்களில் பார்த்திருப்போம்.,.. என்னங்க நாடு இது.. எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் ரூபாய் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்த சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது. இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாக சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள். சமூகம்தான் அவர்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம். கதையின் வழியாக அதே மாதிரி நம் தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் என்னும் ஒரு திட்டம் பற்றி கிளைமாக்ஸில் சொல்லி இருக்கிறோம். அது நிறைய மக்களுக்கு நல்ல மெசேஜாக இருக்கும். நானே கதை எழுதி இயக்கி நடிக்கிறேன். ஜோடியாக சாய் தான்யா நடிக்கிறார். பேரரசு, பிளாக் பாண்டி, சன் டிவி ஆதவன், லொள்ளுசபா மனோகர், செந்தி குமாரி இவர்களெல்லாம் முக்கிய இடங்களில் நடிக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com