தாவரங்களைத் தெய்வங்களாகப் போற்றி வணங்கும் பாரம்பரியம் தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படுகிறது. "தாவரங்களுக்கும் உயிர், உணர்வு உண்டு' என இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்து உலகையே வியக்கவைத்தார். அவரது ஆய்வின் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட தாவரங்கள் ஒன்றுக்கொன்று உதவும் தன்மையுடையனவாக இருப்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டறிந்துள்ளனர் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் இணைப் பேராசிரியர் மதிமாறன் நடராஜன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்.
அவரிடம் பேசியபோது:
"புதுச்சேரி அரியாங்குப்பம்தான் எனது சொந்த ஊர். எனது தந்தை நடராஜன் ரயில்வே பணியாளர் என்பதால், ரயில்வே பள்ளியில் படித்தேன்.
வேளாண்மையில் முதுகலை ஆராய்ச்சிப் படிப்பை முடித்தேன். சுவிட்சர்லாந்தில் ஆராய்ச்சிப் படிப்புக்கு சென்றபோது, தாவரங்களுக்கு இடையிலான ஒன்றுக்கொன்று உதவும் பண்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டேன்.
எனது தலைமையிலான பத்துக்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஆய்வுக் குழுவினர் தமிழகம், சுவிட்சர்லாந்தில் காணப்படும் ஊடுபயிர்களுக்குள் உதவும் தன்மைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டோம்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு' என்பதை மனிதர்கள் மட்டுமல்ல; பாரம்பரிய சிறுதானிய பயிர்வகைகளும் உணர்ந்தே உள்ளன.
பல வகைப் பயிர்களைக் கலந்து விதைத்து பயிர் செய்யும் முறையை முன்னோர்கள் கடைப்பிடித்துள்ளனர். எந்த வகைப் பயிருடன், வேறு எந்தப் பயிரைச் சேர்த்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக அவர்கள் அறிந்திருப்பது ஆச்சரியப்படத்தக்கதாகவே உள்ளது. இதையே எங்களது ஆய்வும் உறுதிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வறட்சிமிக்க இடங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, துவரம்பருப்பு, உளுந்து, எள் என பலவகைப் பயிர்கள் ஒரே நிலத்தில் ஒரே நேரத்தில் பயிரிடப்படும். ஆனால், அவற்றில் குறிப்பிட்ட இரு பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
கேழ்வரகுடன், ஊடு பயிராக துவரம்பருப்பும் பயிரிடப்படுகிறது. கேழ்வரகின் வேரானது இரண்டு அடி மட்டுமே மண்ணில் இறங்கும். அதேசமயம் துவரம் பருப்பானது சுமார் இரண்டு மீட்டருக்கும் மேலாக புவியில் வேர் பாய்ச்சும் தன்மையுடையது. இவ்விரண்டில் துவரம் பருப்பானது, தனது நீளமான வேர்கள் மூலம் ஆழத்தில் இருக்கும் நீரை உறிஞ்சி எடுத்து, மேலோட்டமாக உள்ள கேழ்வரகுக்கு கொடுக்கிறது. இரு பயிர்களுக்கும் இடையே நீர் பரிமாற்றத்துக்கு பூஞ்சான்கள் உதவுகின்றன.
இந்தப் பூஞ்சான்களுக்கு பயிர்களின் அதிகப்படியான மாவுச்சத்து கிடைக்கிறது. ஆகவே தாவரங்களுக்கு இடையே உதவும் கரங்களாகச் செயல்படும் பூஞ்சான்களும், பாக்டீரியாக்களும் பயன் அடைந்துவருகின்றன. இந்த நன்மை பயக்கும் முக்கோண உதவும் செயல்பாடுகள் முழுமையான தாவர ஆராய்ச்சியில் வெளிப்படும்போது, தாவரங்களது குணங்கள் உள்ளிட்ட தன்மைகள் வியக்கத்தக்கவையாக இருக்கும்.
பொதுவாக, தாவரங்களுக்குள் உதவும் வகையிலான பூஞ்சான்கள், பாக்டீரியாக்கள் தாவர வேர்களில் உள்ளன. அவைதான் தாவரங்களுக்கு இடையே உதவும் பாலமாகச் செயல்படுகின்றன. அத்துடன், தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் உள்ளிட்டவற்றை எச்சரிக்கும் பணியையும் செய்துவருவதைக் கண்டறிந்துள்ளோம். அத்துடன் ஒவ்வொரு தாவரத்துக்கும் தேவையான தழை, மணிச்சத்துகளையும் அவை ஒன்றுக்கொன்று தேவைக்கு ஏற்ப பரிமாரிக் கொள்வதையும் ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளோம்.
செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கையாக உள்ள பூஞ்சான்கள், பாக்டீரியாக்கள் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தவே ஆராய்ச்சியில் முக்கியத்துவம் அளித்திருந்தோம்.
ஊடு பயிர்களின் விளைச்சல் அதிகப்படுத்துவதைக் கண்டறிவதுடன், தாவரங்களது தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக எங்கள் ஆராய்ச்சி அமைந்திருப்பது திருப்புமுனையாகவே உள்ளது. அந்தவகையில் தாவரங்களது வேர்களுக்கு இடையே நடைபெறும் உணவு, நீர் பரிமாற்றத்தை குறித்த ஆராய்ச்சி உயிர் வகை ஆராய்ச்சியில் திருப்பு முனையாகவே கருதலாம்.
ஒன்றுக்கொன்று உதவும் வகையில் கேழ்வரகு, துவரம்பருப்பு, சோளம், தட்டப்பயிறு, எள், கொள், வரகு, குதிரைவாளி உள்ளிட்டவை செயல்படுவதையும் எங்களது ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியா, சுவிட்சர்லாந்து கூட்டு ஆராய்ச்சிக் குழுவின் சார்பில், இந்த ஆய்வுக் கட்டுரையானது அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இந்தியா ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆராய்ச்சியாளர்கள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற ஆராய்ச்சிக் கட்டுரை இதழ்களில் வெளியிடப்பட்டும் உள்ளன.
அடுத்தகட்டமாக பருவநிலை மாற்றத்துக்கு காரணமான கார்பன் டை ஆக்ஸைடை கட்டுப்படுத்தவும், காற்றிலிருந்து தாவரங்கள் மூலம் கார்பன்டை ஆக்ஸைடை சத்தாக்கவும் ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. அது வெற்றியடையும் போது தற்போதைய பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
பயிர்களிடையே மகரந்தச் சேர்க்கை விஷயத்தில் உள்ள தொடர்புகளையும் விரிவாக ஆராய உள்ளோம். வேர் முதல் நுனி வரையில் தாவரங்களுக்கு இடையேயான தொடர்பு பண்புகளை இதுவரை இல்லாத வகையில் எங்களது ஊடுபயிர்கள் குறித்த ஆராய்ச்சி நிச்சயம் வெளிப்படுத்தும். கடல் தாவரங்களது உணர்வுகள் குறித்த ஆய்வையும் மேற்கொள்ளவுள்ளோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.